ராகவேந்திர சுவாமிகள்

 


ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில், துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தையே தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அப்பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கானும் அதற்கு இணங்கி மாஞ்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுத்தார். அதையே தனது சமாதி ஆலயமாகத் தேர்ந்தெடுத்த ஸ்ரீ ராகவேந்திரர், 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.

வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர். வேங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் திரு லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்க்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.

வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வேங்கடநாதரை சந்தனம் அரைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும்போது அக்னி சூக்தம் என்ற தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வேங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவறை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கெளரவித்தும் அனுப்பினார்.

வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார். வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்[1]. அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்: சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும். சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும். இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.

போதேந்திர சரஸ்வதி



போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்! 

கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளுக்கு உண்டு. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள். கும்பகோணத்துக்கு அருகே  திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். இங்குதான் போதேந்திரர். அதிஷ்டானம் கொண்டுள்ளார். 22-8-2008,  வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மகா கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில்  ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவரது காலம் கி.பி. 1638-1692.  அன்னிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன்  துவங்கியது.  நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம். கஷ்டங்களைப் போக்கலாம்; பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம  ஜபத்தின் மேன்மைகளைப் பல இடங்களிலும் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.

ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய  காலமே அதிகம் என்று சொல்லலாம். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர்.

நாம சங்கீர்த்தனம். நாம ஜபம் என்றால் என்ன?

பொதுவாக, பகவன் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள். நாம சங்கீர்த்தனம் என்றால்,  இறைவனின் ஒரு திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக்கொண்டே இருப்பது முதலில் பாடிய  வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் ஆர்மோனியம் மிருதங்கம். கஞ்சிரா முதலான  பக்கவாத்தியங்களை வாசித்துக்கொண்டு பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள்.  இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள். பாகவதர்களுடன் இணைந்து  பக்தர்களும் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம ஜபம் என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ  சேர்ந்து பகவன் நாமங்களை மனதுக்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது நம சிவாய நாராயணாய ராம  ராம கிருஷ்ண கிருஷ்ண என்று அவரவருக்குப் பிடித்த கடவுளின் நாமத்தைச் சொல்லி வழிபடலாம்.

கலியுகத்தில் நாம ஜபத்தை யார் வேண்டுமானாலும். எப்போது வேண்டுமானாலும் உச்சரித்து இறைவனை வணங்கலாம். இதற்கு கால  நேரம் கிடையாது. என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலிகாலத்தில் பகவன் நாமங்களே நம்மைக் கரை சேர்க்கும் என்று  சொன்ன போதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார். இதிலிருந்தே அவரது பக்தியின்  பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம். போதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில்தான் நாட்டில் ஏராளமான மகான்கள்  தோன்றினர். கன்னட தேசத்தில் புரந்தரதாசர். கனகதாசர் முதலானோரும் ஆந்திராவில் ராமதாசர், ஷேத்ரக்ஞர். மகாராஷ்டிரத்தில்  துக்காராம் போன்றோரும் வங்களாத்தில் கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் போன்றோரும் காசியில் கபீர்தாசர், துளசிதாசர் ஆகியோரும்  வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ், ஸ்ரீவல்லபர், குருநானக் குருகோவிந்தசிங், மீரா போன்றோரும் அவதரித்தனர். மொத்தத்தில் பார்த்தால்.  இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும் நாம ஜபத்தின் பெருமையையும் பரப்பி இருக்கிறார்கள். ஒரே  காலத்தில் பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்துப் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம்  போலிருக்கிறது.

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார வரலாற்றை அறிந்துகொள்வோம்? புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில்,  மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து  குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர்  அவதரித்தார். குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன்  புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர்  என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை, மடத்துக்குப்  புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு  ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே  நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார்.  ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது? என்றார்  ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர்  சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள்  அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று  ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று  அனுமானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.


ஶ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி அதிஷ்டானம்

இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன்  பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள் என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை.  பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும்  தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக்  கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சர அப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம்,  வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன்,  தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான்.  (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர்,  ஒருவர், பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை  தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப்  பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச்  சொன்னார். காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு  புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை  அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து  கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, நாம் சங்கீர்த்தன வைபவங்கள்  அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம்  வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று  முடிவெடுத்தார்.

குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே  புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள்.  இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின்  பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே. போதேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று. நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர்.  ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.

ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா  சமாதி அடைந்தார். விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள். குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து,  போதேந்திரர், காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார். வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப்  பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். இதே காலத்தில்தான், போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக  இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர். கிராமம் கிராமமாகச் சென்று  நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள். ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு  சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி.  பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும்  சென்றனர்.

போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர்  முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார். ஸ்ரீதர ஐயாவாளும், சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக  நின்று கொண்டிருந்தனர். அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப்  பரிமாறத் தொடங்கினார்கள்.

அந்த அந்தணருக்கு ஒரே மகன். சுமார் ஐந்து வயது இருக்கும். ஊமை, சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட  பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி  அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம்  அடையலாம். அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்? எப்படி இவன் கரை  ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை. ஆனால், அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா  என்ன?

சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை. விருப்பம் இல்லாமல்  சாப்பிட்டார். பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து, வெளியே வந்து அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி  பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.




ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான். அவரது இலையில்  சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன. அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம்,  மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான். பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால்,  சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.

அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த  அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது. இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குப் பேச  வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான். வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம்  வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர். திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.

மகனே.. மகனே! உனக்கு பேச்சு வந்துவிட்டது. அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி  அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.

வெளியே, வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்தது  இவருடைய கருணையில்தானே! பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா? ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து  எட்டாயிரம் முறை, எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை  உட்கொண்டதால் அல்லவா, அந்தச் சிறுவன் பேசினான்! அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில்  பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ? மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர்  பெற்றோர்.

கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில்  கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன்  விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.

கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள். சிறுவர்களின்  ஆனந்தம் கண்டு குதூகலிப்பார். சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார்  ஸ்வாமிகள். இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும். காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள்  பார்த்துவிட்டால் போதும். அவர்களுக்கு குஷி பிறந்துவிடும். துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன்  ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான  விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!

அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது. நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது. தண்ணீர் இருக்கும்  இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.

மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள். தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார்  ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு  மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை  பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன? என்றார்.

ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை  நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. வாங்கடா, வீட்டுக்குப் போகலாம். சாமீ ஜபம் பண்றாரு. இங்கே நாம நின்னா  அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர். மறுநாள் காலை தங்களது அன்றாட  அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர்.  இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப்  பார்ததனர்.

ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர். அப்போதுதான், முந்தைய  தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப்  போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த  மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று  எழுந்தது. பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம்.  அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம்.  தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும்  லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக  ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப்  போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர். இன்னும்  சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.




ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி,  தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம்  வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை  பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில்  இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும்  நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம  நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா?  பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி. போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். பாலிஷ் செய்யப்பட்ட கருங்கற்களால்  அதிஷ்டானத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள். உயரமான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் இதை வலம்  வரலாம்.

கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சற்றுத் தோண்டி எடுத்து சீரமைக்க  ஆரம்பித்தார்கள். அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஓர் அமைப்பு தென்பட்டதது. இது, ஆதியில் மருதாநல்லூர்  ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால், ஆற்று  மணல், ஆம்! மணலுக்குள்தானே தன்னை மூடிக்கொண்டார். இந்த மகான்? மருதாநல்லூர் ஸ்வாமிகள் (இவரது காலம் கி.பி 1777-1817  என்பர்) போதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது பற்றி, தெரிந்து கொள்ளலாம். மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் காலத்தில்  தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக்  கொண்டவர். மகான்களைப் போற்றியவர்.

மருதநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியமால்  இருந்து வந்தது. காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் போதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதும்  முழ்கடித்துவிட்டது. எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி,  காவிரி நதியைச் சற்றே வடக்குப் பக்கம் திருப்பி, போதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் வராமல், தடுப்பு  வேலைகளைத் திறம்பட செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள். மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்ததில் பெரிதும்  மகிழந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கவுரவித்து மகிழ்ந்தான். போதேந்திரரின் அதிஷ்டானத்தை  மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டுபிடித்தார். என்று தகவல் சொல்வார்கள். சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக்கொண்டே  உருண்டு வருவாரார் தினமும் ஒரு நாள். மகிழ்ச்சி மேலிட ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து  விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்று கூத்தாடினார்.

அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும்-அதெப்படி இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ  நிச்சியமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது என்று கேட்டார்கள்.  அதற்கு மருதாநல்லூர் ஸ்வாமிகள். பக்தர்களே! படுத்துக்கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதை வைத்துக் கேட்டுக் கொண்டே  வந்தேன். இந்த இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே,  இங்குதான் அவரது ஜீவன் ராம நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன் என்றார். அடுத்த கணம் அங்கு கூடி இருந்தார்கள்  அனைவரும் மணற்பரப்பில் விழுந்து. போதேந்திரரை மானசீகமாகத் தொழுதார்கள். அதன்பின்தான் போதேந்திரருக்கு இங்கே  அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம்  ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நித்ய பூஜை. அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை. தினமும் காலை ஆறு  மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி. ஒன்பது மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம். பதினொரு மணிக்கு  அதிஷ்டான பூஜை. அதன் பிறகு சமாராதனை, அன்னதானம்.

இதேபோல் மாலை நான்கு மணிக்கு சம்பிரதாய பூஜை ஆறு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம். ஏழு மணிக்கு அதிஷ்டான  பூஜை. ஏழரை மணிக்கு டோலோற்சவம். இதுதான் போதேந்திரர் அதிஷ்டானத்தின் நித்திய வழிபாடு. சுமார் 40 பசுக்களை வைத்து ஒரு  கோ சாலையையும் பராமரித்து வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பால், அதிஷ்டானத்தின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி.  திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியின் அர்த்தஜாம பூஜைக்கும் செல்கிறது. கலியில் நாம சங்கீர்த்தனம்தான் கதி. நமக்கு பக்தி.  ஞானம், விரக்தி, கர்மயோகம், சிரத்தை, தபஸ், நன்னடத்தை சக்தி இப்படி எது இல்லாவிட்டாலும் அதற்கு காரணம் நம்மிடம் நாம ஜபம்  போதவில்லை என்பதே ஆகும். ஏனெனில் நாம ஜபம் பூரணமாக இருந்தால் மேற்சொன்ன யாவும் நம்மிடம் இருக்கும். இந்த வரிகளை  போதேந்திரர் அதிஷ்டான கோயிலில் எழுதி வைத்திருக்கிறார்கள். உண்மைதான்! கலியில் மோட்சத்தை அடைய இறை நாமம் ஒன்றே  சிறந்தது என்பது ஆன்மிக மேன்மக்களால் சொல்லப்படுகிறது.

நாம ஜபத்தில் பேதமில்லை. அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான நாமத்தை ஜபம் செய்து வரலாம். இதற்கு விதிகளும் நியமமும்  இல்லை. ஆசாரம் இல்லை; அனுஷ்டானமும் இல்லை. பூஜையறை வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும்  எத்தகைய நிலையிலும், ஆசாரம் குறைவாக இருந்தாலும், ஆண்-பெண் ஆகிய இரு பாலாரும் தங்களுக்கு வசதியான நேரங்களில் பகவன்  நாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்கலாம். இதற்கான புண்ணியமும் பலனும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதவை.

சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு!

 


சீரடிபாபாவின் தாய், தந்தை யார்? சொந்த ஊர் எது? இயற்பெயர் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. பாபா 1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை. சில ஆண்டுகன் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார். சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.

சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாமி என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள். பாபா என்பது இந்தியில் `அப்பா’ என்று பொருள். இரண்டும் இணைந்து `சாய்பாபா’ என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது. சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது. சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!” என்று கூறினார். ஆமாம்! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்! சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா.

அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் “அவர் ஒரு மகான்” என்று போற்றினார்கள். சிறுவயதில் பாபாவை முகம்மதியப் பெரியவர் ஒருவர் வளர்த்து வந்தார். அந்தப் பெரியவர் பாபா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார். பாபாவை விட்டுச் சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார். அப்படியிருந்த அவர் ஒருநாள் திடீரென்று இறந்து விட்டார். ஆதரவு இல்லாத நிலையில் இருந்த பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்றார். கோபால்ராவ் தேஷ்முக் திருப்பதி வெங்கடாசலபதி மீது தீவிர பக்தி கொண்டவர். மக்கள், இவரை மகா ஞானியாகவே கருதி போற்றி வந்தனர். குழந்தையான பாபாவைப் பார்த்த ஞானி கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாபாவைத் தனது மகனைப் போலவே கருதி வளர்த்து வந்தார். பாபாவும் கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார்.

பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் தீவிர ஏழுமலையான் பக்தர். அதனால் பாபாவிற்கு குரு அருளுடன் வெங்கடேசப் பெருமானின் அருளும் கிடைத்தது. குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் பேரும் புகழுடனும் இருந்து வந்தது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பொறாமை கொண்டனர். ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான். இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.

இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கினார். அப்போது, “பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன். அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார். அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார். “ஐயா, இப்பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை. ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.

பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார். அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான். இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர். பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

கோபால் ராவ்தேஷ்முக் ஸ்ரீவெங்கடேசப் பெருமானை வேண்டி, தாம் முன்பே கூறியதுபோல தவயோகம் செய்தார். தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா சீரடி கிராமத்தை அடைந்தார். பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார். பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.

ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர். பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர். ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார். சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார். பாபா பஜனை யையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார். ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா. ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார். தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார். பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.

மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார். பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை)வும் ஸபூரி (பொறுமை)யும் ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி (விபூதி)யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா. வாழ்வில் பொறுமையும், தன்மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார். அவர் 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நான் தன் ஸ்தூல உடலை பிரிந்தார். உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள்.

ஞானதேவர் அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர்

 




ஞானதேவர் அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார்

கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம்  நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை  மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை  ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள்  நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத்  துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம்  பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப்  பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச்  சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக் கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து  வேதனைப்பட்டார். பிறகு காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாயாக! என்றார்.  அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின. அந்த தம்பதிகளுக்கு  மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).

அவரை விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர். வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர்,  அவற்றை மிக எளிமையாகப் போதித்து வந்தார். தான் செய்த தவற்றால், சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு, தான் அடைந்த துன்பத்தை  குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா, தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை,  யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி, உயிர்த் தியாகம் செய்தார். ஆதரவற்ற நிலையில் தவித்த  குழந்தைகளைக் கண்டு, ஆலந்தி அந்தணர்கள் மனமிரங்கினர். குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு செய்தனர்.  இருப்பினும், பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று வரும்படி, அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில்  கரைகண்டவர்கள் அந்த அந்தணர்கள். அவர்களின் முன், இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன் நின்றனர். அந்தணர்களின் புனிதக்  கடமை, உபநயனம் செய்து கொள்வது ! எங்களது ஆலந்தி கிராமத்து அந்தணர்கள், எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக  உள்ளனர். ஆனாலும், உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள் ! என்றனர்.  அதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர்கள், உபநயனம் செய்துகொள்ள, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனப் பரிகசித்தனர். அதில்  ஆவேசமான மூவரும், மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர். உடனே பண்டிதர்கள், முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த  மக்கள் நீங்கள். எனவே, உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை. அது, எங்களைப் போன்ற உயர் மக்களுக்கே உரித்தானது! என்று  கர்வத்துடன் சொன்னார்கள். இதைக் கேட்டு, மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன், கொதித்து எழுந்தான்; அவனுக்கு வயது எட்டு.

அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக் கிடாவைச் சுட்டிக் காட்டி, வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே  உரியதல்ல! இதோ... இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு, அந்த எருமையின் முதுகில் கைவைக்க... அப்போது  நிகழ்ந்தது அந்த அதிசயம் ! மூவரும் வேதம் ஓதி நிறுத்தினார்கள், அல்லவா... அந்த இடத்தில் இருந்து வரி பிசகாமல், வேதம் ஓதத்  துவங்கியது, எருமை. இறுதியில், பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாக இருப்பினும், கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும்  ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி, நான்கு கவிதைகளை அழகாகச் சொல்லிற்று. எருமை வேதம் ஓதியதைக்  கேட்டு, வாயடைத்துப் போனது பண்டிதர் கூட்டம். அனைவரும் ஓடோடி வந்து, சிறுவனை நமஸ்கரித்தனர். தனது மூத்த சகோதரரான  நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று, குண்டலினி யோகம் முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருநாதர் அறிவுரைப்படி, தனது 15-வது  வயதில், மராட்டிய மொழியில், பாமரர்க்கும் புரியும் வகையில், 18 அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார், ஞானேஸ்வர்.  பாவார்த்த தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை, பிறகு அவரது திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது.  அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல், அவரின் மற்றொரு படைப்பு. அவர் நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம் !  இறை நம்பிக்கையற்ற ஒருவனைத் திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி, கொதிக்கச் செய்து, தனது சகோதரி  முக்தாபாயை, தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார், ஞானேஸ்வர். தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின்  மீது அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர் சாங்கதேவரை, தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை  அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி, அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். சகோதர - சகோதரிகள் மற்றும்  நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று  உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22 - வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம்  நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார். தனது  ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர்  இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.