குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு

குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு விளக்கும் - மஹா பெரியவா | Shree Maha Periyava



ன்மீகத்தில் மகா பெரியவா அவர்கள் ஒரு என்சைக்ளோபீடியா என்பது நாம் அறிந்ததே. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவர் விளக்கம் தராத சந்தேகங்களே இல்லை. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா கூறியதாக திரு.இந்திரா சௌந்தர்ராஜன் ‘தீபம்’ ஆன்மீக இதழில் கூறியதை நண்பர் பால்ஹனுமானின் தளம் வாயிலாக அறிந்துகொண்டதை  இங்கு தருகிறேன்.

நிச்சயம் இதை அனைவரும் படிக்கவேண்டும். பகிர்ந்துகொள்ளவேண்டும் பயனடையவேண்டும்.

அவரவர் குல தெய்வத்தையும் பித்ருக்களையும் ஆராதிப்போம். நலம் பெறுவோம்

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

இன்று ஏதாவது ஒரு சிக்கல் என்றால், நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதலில் போய்ப் பார்ப்பது நல்ல ஒரு ஜோசியரைத்தான்! ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம்! இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி?

நமக்கு நேரம் நன்றாக இருந்து விதியும் இருந்தால், நன்றாக சரியான ஜோசியரிடம்தான் நாம் போய் நிற்போம். அவரும் நம் கட்டங்களைப் பார்த்து, சரியாக கணக்குப் போட்டு பின்னர் பிசகு எதுவுமில்லாமல் நமக்குத் தீர்வைச் சொல்லுவார்.

நம் நேரத்தில் பிசகு இருக்கும் பட்சத்தில், ஒரு அரைகுறை ஜோசியரிடம்தான் போய் மாட்டுவோம். அவரும் அவர் அறிந்ததைக் கூறி, நம்மைத் தவறாக வழிநடத்தி விடுவார். இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாக இருக்கிறது. இனிப்பென்றால் கசப்பு, நெருப்பென்றால் குளிர், அதேபோல நல்லவிதமாய் ஒருவர் என்றால், தீயவிதமாய் ஒருவர்…

இவர்கள் எப்படி இருக்கலாம் என்றெல்லாம் கேட்க முடியாது. மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே இதுதான் நிலைப்பாடு. இனியும் அது இருந்தே தீரும். ஜோதிடர்களுக்கும் இது பொருந்தும்.

சரி, இந்த ஜோதிடர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தவறாமல் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார். அதுதான் குலதெய்வம் பற்றியது. ‘உங்கள் குலதெய்வம் எது? அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் ஒருவரே என்பதுதான் சர்வமத சித்தாந்தம். நம் இந்து மதம்தான், அந்த ஒருவரைப் பலவாக ஆக்கி நாம் பக்தி செய்திட பகிர்ந்து அளித்திருக்கிறது. இது அந்தக் கடவுளை எளிதாக உணரவும், நெருங்கவும் நமக்கும் மிக வசதியாக உள்ளது. நமது தெய்வங்கள் அலங்காரமாக, ஆயுதங்களோடு இருப்பதன் பின்புலம், நம் உளவியல் நிமித்தமே என்பதுதான் நம் கடவுளர்களின் சிறப்பே! 

இதனால்தான் கடவுளோடு நாம் மிகவும் நெருங்க முடிகிறது. ‘வாடா போடா’ எனலாம்… அப்பா அம்மா எனலாம்… நண்பன் எனலாம்… குருவாகவும் கொள்ளலாம். நம் குழந்தையாகவும் கருதி தூக்கி வைத்துக் கொஞ்சலாம்.

அன்பும் பக்தியும் இருந்துவிட்டால் போதும்… யோகியரும் ஞானியரும் காட்டிலும் மேட்டிலும் காலம் காலமாக தவம் செய்தும் அடைய முடியாமல் தவிக்கின்ற அந்தக் கடவுளை, நாம் மிக இலகுவாக நம் அன்றாட வாழ்வில் அடைந்து விடலாம். இதற்காகவே நமக்கே நமக்கு என்று நம் முன்னோர்கள் வீடு வாசல் என்று சொத்து சுகங்களை விட்டுச் செல்வது போல் ஒரு தெய்வத்தையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதுதான் குலதெய்வம்!

எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும், இந்த தெய்வத்திடம் ஒரு வணக்கம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களுக்கும் எண்ணம். குலதெய்வம் என்று ஒன்று இருந்தாலே, சில சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தே தீரும். குழந்தை பிறந்தால் அதன் முதல் முடியை காணிக்கையாகத் தருவது. அது போக, பிள்ளைப் பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் குலதெய்வ வழிபாட்டுச் சடங்கை ஒட்டியே இருக்கும்.

சில குடும்பங்களில், குலதெய்வ வழிபாடு என்பதே மறந்து, குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு. இதெல்லாமே நம் ஜாதகக் கட்டத்தைப் பார்த்தால் கணக்குப் போட்டு உணர முடியும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு இடம் உண்டு. அதில் நம் பக்தி, சாபம், திமிர், வியாதி, தரித்திரம் என்று எல்லாம் பளிச்சென்று தெரியும் விதமாக டேரா போட்டிருக்கும். இதை வைத்துத்தான் ஜோதிடரும் கேட்பார்!

என்றால், குலதெய்வ வழிபாட்டோடு பிறதெய்வ வழிபாடுகளை குறைவின்றிச் செய்பவர்கள் எல்லோருமே ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களுக்கு துன்பமே இல்லையா என்று குயுக்தியாகக் கேட்கக் கூடாது.

ஆக, குலதெய்வத்தை மறவாமல் போற்றி வருபவர்கள் குடும்பங்களில் பெரிய துன்பங்களுக்கு இடமில்லை. பெரிதாக ஏதாவது வந்தாலும், அது நிச்சயம் நீங்கி அந்தக் குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கையை இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுகிறது என்பது தான் அடிப்படைச் சிறப்பாகும்.

வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.

இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்! இந்தக் குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,

சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

– பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

– பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

கந்தர்சரணப்பத்து

வள்ளலார்

வள்ளலார் அருளிய முத்தான பத்து பாடல்கள்.

கந்தர்சரணப்பத்து

1) அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா வமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில் வாகனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

அருள் நிறைந்த அமுதமே,
அழகனே, மலமில்லாத தூயனே,
என்னையும் பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும்மணியும் போன்றவனே, மருட்சி யுடையார் நினைத்தற் கரியவனே, மயிலை வாஹனமாக உடையவனே, கருணைக்குச் சிறந்த இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்குக் கதியாகும்.

2) பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணே ரொளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணே ருயிரே உணர்வே சரணம்
உருவே யருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

இசை பொருந்திய மறையை ஓதுவதால் விளையும் பயனே, பதிப் பொருளே, பரம்பொருளே, விண்ணிடத்து விளங்கும் ஒளிப் பொருளே, அதனின் மேலாய வெளியே, அவ்வெளியின் விளைவாகிய பொருளே, உடற்குள் நிலவும் உயிராயவனே, உணர்வு வடிவாயவனே,
உருவமாயும் அருவமாயும் உள்ள பொருளே, எனக்கு உறவாகியவனே,
என் கண்ணே, கண்ணின் மணியே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலாம்.

3) முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேலேந்தும் அரசனே, மயிலேறும் மணிபோலும் பெருமானே, அடியவர்க் கெளியவனே, அரியவனே, பெரியவனே, விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

4) பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவ சண்முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

மலராகவும் மணமாகவும் உள்ளவனே, பொருட் செல்வமும் அருட் செல்வமுமானவனே, தலைவனே, குகப் பெருமானே, ஞானாசிரியனே, ஞானச் செல்வமே, தேவனே, தெளிவின் வடிவாயவனே, சிவ சண்முகக் கடவுளே, கற்பகச் சோலைக்கு அழகுதரும் கற்ப தருவே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

5) நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுண் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

ஆடுகின்ற ஒப்பற்ற பெரிய மயிலை வாஹனமாக உடையவனே, நல்லவர்கள் பாராட்டும் வல்லமை யுடையவனே, தேகத்திற்கு வண்மையும் வாழ்க்கைக்குச் செல்வமும் தருபவனே, தேவர்கள் எய்துதற் கரியவனே, பெரிய வண்மையுடைய தோள்களை உடையவனே, ஒப்பற்ற பெரிய முதல்வனே, தெய்வமணியே, கந்தசாமிக் கடவுளே நின் திருவடி எனக்குப் புகலிடமாம்.

6) கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக் கருள்வோய் சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவாகிய நல்லொளியே சரணம்
காலற் றெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

அழகிய குறமகளாகிய வள்ளி நாயகியார் கணவனே, உயர் குலத்துப் பெரிய மாணிக்க மணியே, சீலமுடைய பெரியோர்க்குஅருள் செய்பவனே, சிவபெருமான் மகனே, நிலத்தில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்குபவனே, நீதி வடிவாகிய நல்ல ஒளிப் பொருளே, நமன் போந்து செய்யும் துன்பத்தை நீக்குபவனே, கந்தசாமிக் கடவுளே, உன்திருவடியே எனக்குப்புகலிடமாம்.

7) நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா வுயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகநன் றருள்வோய் சரணம்
சுரர் வாழ்த்திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

எங்களுக்கு இனியவனே, குன்றாத வுயர்வுடைய சம்பந்தப் பெருமானே, பிறைத் திங்களைச் சூடிய சடையையுடைய சிவபெருமான் மகனே, பார்வதி தந்தருளிய நற் புதல்வனே, உயரிய இன்ப வாழ்வை மிக நல்குபவனே, தேவர்கள் வாழ்த்தி மகிழும் எங்கள் தலைவனே, கங்கை மடியிலேந்தி வளர்த்த குழந்தையே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்.

8)ஒளியுள் ளொளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

ஒளிக்கு ஒளி நல்கும் காரணப் பொருளே, ஒன்றாயும் பலவாயும் தோன்றும் பரம்பொருளே, தெளிவுடையார்க்கும் தெளி வளிக்கும் தெளிபொருளே, சிவமே, சிவப் பேற்றுக்குரிய தவமே, முற்றப் பழுத்த கனியே, அமிர்தமே, அறிவே, இன்பமே பொருந்த அருள்பவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடியே எனக்குப் புகலாகும்.

9) மன்னே யெனையாள் வரதா சரணம்
மதியே யடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம
்புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவே லரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

மன்னவனே, எனை ஆண்டருளும் வரதனே, இயற்கை யறிவு வடிவினனே, அடியேனது வாழ்வாயவனே, பொன் போன்றவனே, தூயனே, புகழ்ந்து ஏத்தும் அன்பர் மனத்தில் புகுந்திருப்பவனே, அன்னை போல்பவனே, கூரிய வேலேந்தும் வேந்தனே, ஆறுமுகப் பெருமானே, மலை போன்ற தோளை யுடையவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடி எனக்குப் புகலாம்.

10) வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவை யில்லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

வேதத்தின் பொருளாயவனே, தேவர்கட்குப் பெருமானே, ஞான வடிவினனே, அழகிய மயிலை வாகனமாக வுடையவனே, ஓசையின் ஒலி வடிவாகியவனே, குற்றமே யில்லாதவனே, செவியாற் கேட்டற் கினிமை தரும் புகழை யுடையவனே, கந்த சாமிக் கடவுளே உன் திருவடி எனக்குப் புகலிடமாம்.

நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை, நான் என்ற அகந்தை அழிந்த தலம்

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். 

அது மலையல்ல, மருந்து. பிறவிப்பிணி தீர்க்கும் பெருமருந்து. அலையாட்டம் போடும் அகத்துக்கு அமைதித்தரும் அருமருந்து. அதுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை. நான் என்ற அகந்தை அழிந்த தலம்.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. 

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்......) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டு செல்லக் கூடாது. 

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. 

#திருவண்ணாமலை #SithamTV #சித்தம்டிவி #Sithargalinrajiyam #சித்தர்களின்_ராஜ்ஜியம் @சித்தர்களின் ராஜ்ஜியம்