Showing posts with label போகர். Show all posts
Showing posts with label போகர். Show all posts

புண்ணாக்குச் சித்தர்

புண்ணாக்குச் சித்தர்


இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின் சீடரான இவர், கன்னடத்துக்காரர் எனப் போகர் குறிப்பிடுகின்றார். ஓர் ஆத்தி மரமே இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர வைணவ பக்தர் என்றும் கூறுவர். இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான். தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி மரத்திலேயே சமாதியானதாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் வந்ததற்கான காரணம் புலப்படவில்லை. இவரது பாடல்கள் ஞானம்மா என்பவரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை. இவர் இப்படி முன்னிறுத்திய ஞானம்மா யாரென்பதைத் தம் முதல் பாட்டிலேயே தெரிவிக்கின்றார். ‘தேவி மனோன்மணியாள் திருப்பாதங் காணவென்று தவித்திருந்தேனே’ என்று கூறுவதன் மூலம் மனோண்மணியம்மையை இவர் ஞானம்மா என்று குறிப்பிடுவது புலனாகிறது. அஞ்ஞானத்தைக் கடந்து அறிவை மிகச் செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டு கொண்டால் அதுதான் விலையில்லாத ரத்தினமாகும் என்று கூறுகின்றார். ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்றும், ‘ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி’ என்றும் கூறும் சித்தர் வாக்கியத்தை, “காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஞானம்மா ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு இப்பாடல் ‘கசமாலம்’ என்ற சென்னைத் தமிழ் வழங்குவதிலிருந்து இவர் சென்னைப் பகுதியில் நடமாடிய பிற்காலச் சித்தராய் இருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக் கீசரிலும் இவர் மாறுபட்ட வேறு சித்தராய் இருத்தல் வேண்டும். 20 கண்ணிகள் ஒரு பாடலும், 45 பாடல்களில் ஒரு முப்பூச் சுண்ணச் செயநீர் பாடலும் இவர் இயற்றியதாகக் காணப்படுகிறது. ஆயினும், இரண்டின் நடையையும் ஒப்புநோக்கக் கால வேறுபாடு தெள்ளெனப் புலப்படும். ஆகவே, முப்பூச் சுண்ணச் செயநீர் பாடிய புண்ணாக்குச் சித்தரும், மனோன்மணியாளைப் பாடிய புண்ணாக்குச் சித்தரும் வேறு வேறானவர் என்பது ஏற்பதற்குரியது. இப்பாடல் தொகுதி பிற்காலப் புண்ணாக்குச் சித்தருடையது.

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே. 1

அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி. 4

தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார். 5

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம். 6

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே. 7

நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே. 8

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள். 9

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி. 10

பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி. 11

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி. 12

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி. 13

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே. 14

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி. 15

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே. 16

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி. 17

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன. 18

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு. 19

அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே. 20

வால்மீகர்

இராமாயணம்  பாடிய  வால்மீகர்  வேறு.  தென்னாட்டில்  சித்தராக விளங்கியவர் வேறு.

தேற்றமுடன் வால்மீகர் என்ற சித்து
தெளிவாக மார்க்கமது சொல்வேன் பாரீர்
மாற்றமயம் நீக்கியல்லோ வையத்தில்
வளமையுடன் வெகுகாலம் இருந்த சித்து
ஆற்றலுடன் வால்மீகி ராமாயணத்தை
அவனிதனில் மாந்தருக்குச் செய்திட்டாரே.
போகர் ஏழாயிரம் - 5834

இவர்  புரட்டாசி  மாதம்  அனுஷ  நட்சத்திரத்தில் பிறந்தவர். வேடர் குலத்தவர். இவரது சமாதி எட்டிக்குடியில் உள்ளது.

 சூத்திர ஞானம்

1. இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.

2. வந்ததுவும் போனதுவும் வாசியாகும்;
வானில்வரும் ரவிமதியும் வாசியாகும்;
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் கித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்:
நான்முகனே கண்மூக்குச் செவுநாகாகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.

3. அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கமே
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே.

4. ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர் கண்டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மன்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
வாய்பேசா வூமையைப்போல திரிகுவார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே.

5. சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்:
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திரிமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யறியாத கசடர் தானே;

6. தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தவா டம் பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாரே.

7. கதறுகின்ற போகளையா கோடா கோடி;
காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல சிதறி டாமல்
சிவசத்தி வரும்போதே தன்னில்நில்லே.

8. நில்லென்ற பெரியோர்கள் பாடை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்க ளிருமூன் றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாடையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே.

9. தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
உலகத்தி லவரவர்கள் பாடை வேணும்
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
மாமுனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளினாலே
திரட்டினார் வெகுகோடி தேச பாடை.

10. தேசத்தின் பாடைதனை யறிந்தி டாமல்
தெளிவாகத் தாமுரைப்பார் பாடை பார்த்தோர்;
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.

11. சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்;
சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்துசொன் னேன் உலகுக் காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்.

12. நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே:

13. காணரிதே யெவராலு மிருசு வாசம்:
காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
பூலோக சித்தனென வுரைக்க லாகும்.
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
காட்டாதே மூடருக்மே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா!

14. சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே.

15. காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே.

16. தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாய் நின்றவர் கட் கெல்லாஞ் சித்தி
வானக்குள் மனமிருக்க மதிபோல் காணும்
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.

போகர்

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு!!



போகர் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. போகன் தமிழ் குடும்பத்தில் விஸ்வகர்மா மரபில் வந்த மகா சித்தன். தனது தாயின் தொண்ணூற்று மூன்றாவது வயதில் இருபத்தி ஓராவது குழந்தையாக 7923 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தவர். 

தனது பதினான்காம் பிராயத்தில் பிறப்பால் சீனரான தனது குருவான காலாங்கி நாதரால் ஆட்கொள்ளப்பட்டவர். வித்தகர்களை கொண்ட படைப்பாளிகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில் அவதரித்த கருணை கடல். 
நந்தியாகவும் சுப்பிரமணியராகவும் கிருஷ்ணராகவும் கடைசியாக போகனாகவும் இந்த பூவுலகில் பிறந்து 18 சித்தர்களில் ஒருவராக இருந்து மக்களுடன் மக்களாக வாழ்ந்து இந்த கலியுகத்தை முடிக்க வல்ல ஏக சித்தர் இவர் ஒருவரே இவரைப் பற்றி விரிவாகவும் பல அரிய தகவலுடன் இப்பதிவில் காண்போம்

தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின்
புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது. 

சித்தர் பரம்பரை திருக்கயிலாய பரம்பரையின், நந்தி நாதன் வழி வந்த, திருமூல நாதன், இவர்வழி தோன்றிய காலாங்கி நாதன்,  இவருடைய ஏக வாரிசு போகர் 

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர். அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம்.

அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். 
ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி. அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.
பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு திறந்தவெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.
துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர்.

திடுக்கிட்ட போகரிடம், நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.
அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.
அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.
அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.
சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.
போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.

பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.
காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். 
போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இமயமலையில் தங்கியிருந்த பொழுது அறுபத்து மூன்று சீடர்களுக்கு இவருக்கு தெரிந்த கலைகளை கற்றுக்கொடுத்தார். இவர் சீடர்களில் இடைக்காடர், கருவூரார், சட்டைமுனி, புலிப்பாணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மேரு மலையில் மறைந்து கிடைக்கும் கண்ணுக்கு புலப்பாடாத செல்வங்களை கண்டறிந்து மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது இவர் எண்ணம். இவர் சீடர்களுக்கு அணைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து தேர்வு நடத்தி மதிப்பீடு செய்த பின்னர், நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய அனுப்பிவைத்தார்.

இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இதைப் பற்றி அடுத்த வீடியோவில் தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். 

போகர் பெருமானார் அதிசய சித்தர் மட்டுமல்ல, அற்ப்புத சித்தரும் கூட... 
உண்மையில் முதன் முதலில்  உலகம் சுற்றிய வாலிபர் போகர் தான்  
அவன் தலைமையில் இனி திருவியர்க்கையின் ஆட்சி மலரும்! திருவருளின் சம்மதம் சித்தர்களுக்கு அருளப்பட்டு விட்டது. இனி காரியத்தை எதிர் நோக்கலாம். 

திருமூலரின் கற்பக மூலிகைகளின் பாடல்

 திருமூலரின் - 45 கற்பக மூலிகைகளின் பாடல்



திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் 

  • “கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
    • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
  • காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
    • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
  • கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
    • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
  • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
    • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா” (1)
  • “செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
    • 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
  • நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
    • நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
  • பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
    • பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
  • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
    • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே” (2)
  • “மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
    • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
  • கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
    • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
  • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
    • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
  • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
    • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே” (3)
  • “தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
    • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
  • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
    • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
  • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
    • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
  • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
    • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே.” (4)
  • “சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
    • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
  • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
    • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
  • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
    • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
  • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
    • அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே.” (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது மலைகளில்  எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.