Showing posts with label பட்டினத்தார் பாடல். Show all posts
Showing posts with label பட்டினத்தார் பாடல். Show all posts

முதல்வன் முறையீடு


கன்னி வனநாதா - கன்னி வனநாதா

1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா!

2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!
பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா!

3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!
மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா!

4. மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா!
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

5. மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா!
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.

6. மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே:
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே.

7. வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே:
சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே:

8. மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே:
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே.

9. கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே:
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே:

10. மாற்றும் சலவை மறக்கேனே என்குதே:
சோற்றுக் குழியும் இன்னம் தூரேனே என்குதே.
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

11. ஐந்து புலனும் அடங்கேனே என்குதே:
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.

12. காமக் குரோதம் கடக்கேனே என்குதே:
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே

13. அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே:
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே:

14. நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே!
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே.

15. கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே.

16. அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே.

17. நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே.
உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே.

18. குரும்பை முலையும் குடிகெடுப்பேனே என்குதே.
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே.

19. மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே.
ஆதரவும் அற்று இங்கு அரக்காய உருகிறண்டா!

20. கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா!
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

21. புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?

22. கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?

23. பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ?

24.அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ?

25. தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ?

26. நோய்உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ?

27. ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ?

28. பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ?

29. நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாராம் எடுத்தநாள் போதாதோ?

30. காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ?

31.நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ?

32. உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ?
வருத்தம் அறிந்தையிலை! வாவென்று அழைத்தையிலை!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

33. பிறப்பைத் தவிர்த்தயிலை. பின்னாகக் கொண்டையிலை:
இறப்பைத் தவிர்த்தையிலை. என்னென்று கேட்டையிலை.

34. பாசம் எரித்தையிலை: பரதவிப்பைத் தீர்த்தையிலை:
பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை:

35. அடிமை என்று சொன்னையிலை: அக்கமணி சந்தையிலை:
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை:

36. உன்னில் அழைத்தயிலை: ஒன்றாகிக் கொண்டையிலை:
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை:

37. ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை.

38. நாமம் தரித்தையிலை: நான் ஒழிய நின்றையிலை:
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை:

39. முத்தி அளித்தையிலை: மோனம் கொடுத்தையிலை:
சித்தி அளித்தையிலை: சீராட்டிக் கொண்டையிலை.

40. தவிப்பைத் தவிர்த்தையிலை: தானாக்கிக் கொண்டையிலை:
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை.

41. நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை:
துன்றங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை:

42. கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை:
நிட்டையிலே நில் என்று நீ நிறுத்திக் கொண்டையிலை.
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

43. கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா!
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா!

44. காதல் தணியேனா! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ!

45. உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ!
பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேலேனா!

46. ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ!
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ!

47. வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ!
சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ!

48. இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ!
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ!

49. ஆனை உரிபோர்த்த அழுகுதனைப் பாரேனோ!
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ!

50. மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ!
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனா!

51. கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டார் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!

52. அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!

53. செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!

54. முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!

55. மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!

56. கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான் சடையில் பூண்ட விதம் பாரேனோ!

57. சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!

58. கொக்கிற்கு சூடிநின்று கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!

59. தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!

60. வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ!

61. அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!

62. சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

63. கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!

64. நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?

65. வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?

66. வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?

67. ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம் அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?

68. என்னென்று சொல்லுவண்டோ? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கன்னி வனநாதா!-கன்னி வனநாதா!)

69. அன்ன விசாரமது அற்ற  இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?

70. உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?

71. ஒப்புவமை பற்றொடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?

72. வாக்கு மனாதீத வகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!



பட்டினச் சித்தர் ஞானம் - 100

காப்பு நேரிசை வெண்பா

நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே - பண்பாக்
ககனப் பதமுறவக் கன்ம மருகக்
ககனகதிர் வேல்முருகன் காப்பு. 1

நெஞ்சுட னே தான்புலம்பி நீலநிறத்தாளீன்ற
குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் - கஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வ ரெப்போதும். 2

எப்போதிறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம்
எப்போது எழுத்திரெண்டை ஏத்துவோம் - எப்போது
காமன்வலையறுப்போம் காரொளியைக் கண்டுநெஞ்சே
ஏமன்வலை அறுப்ப தென்று. 3

என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்றசிவ லிங்கத்தை நெஞ்சேகள் - உண்டுறங்கித்
தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண்
ஆசைவிந்தே ஆவுடையாள். 4

ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே
கோவுடையாள் நின்றதினம் கூடிய - பூவுடையாள்
கட்டழகி யைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சேஇரு. 5

இருவினைக்கு உளாகாதே என்னுடமைஎண்ணாதே
பெருகுசினங்கொண்டு பினத்தாதே - மருவுமலக்
கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று. 6

ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே - நின்ற
நிலை பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய
புலைவினையும் மாற்றும் பொருள். 7

பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே
இருளுறவை நம்பி இராதே - பொருளுறவு
கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே காற்று. 8

காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி
மாற்றி இனிப்பிறக்க வாராதே - ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம்மனமே நாம். 9

நானென தென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரியாய்நீ - ஏன்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளாய் கருத்து. 10

கருத்து வேறாகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்துப் பலவேடம் மேவாய் - பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண்மனமே
அஞ்செழுத் தாலொன் பது. 11

ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே
ஐம்புல னேயென் றணுகாதே - இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துட்பொருளே மெய்யென் றுணர். 12

மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே - செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்துமாகி நடுநின்ற
காணும் பொருளுரைக்குங் கல். 13

கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே - எல்லாம்
செலக்குமிழி யென்று நினை செம்பொன்னம்ப லத்தை
கலக்கமறப் பார்த்தே கரை. 14

கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில். 15

பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்குமிடி வந்தால் சலியாதே - நோக்குமே
ஒருவத்தன் திருவிளையாட் டென்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது. 16

கருதாதே மங்கையர் காமவலைக் கேங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் - இருகாலைக்
காத்தயர்ந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டினகண்
போற்றிப்பார், ஒத்தநல் பொன். 17

பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சோராதே - எந்நாளும்
ஈசன் அமைத்தாங் கிருக்குங்கா ணிம்மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து. 18

பரிந்து திரியாதே பார்வினைக்கும் அஞ்சாதே
அறிந்துருகிச் சிந்தித் தலையேல் - வருந்தி
நடந்துசித்ர நாடியிலே நாதமறி நெஞ்சே
உடைந்திடு முன்னே உடம்பு. 19

உடம்பழிந்த பின்மனமே ஒன்றுங் கிடையாது
உடம்பழியு முன்கண் டுணராதே - உடம்பிற்
கருநிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றுப்
பருகு கலைமதியப் பால். 20

பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
காலிடுக்கை நத்திக் கரையாதே - கோலெடுத்து
வீர மறலி இவருமுன் வினையறுக்கும்
பார வழிஇன்னருளைப்பார். 21

பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டவெல்லாம் - மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே
என்புடலும் நில்லாது இனி. 22

இனியசுகம் ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகமற வாதே - இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாததா. 23

நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
எல்லாம் பகையா யிருக்குங்காண் - பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினை யானால்
திருக்கறுக்க வேணும் தினம். 24

தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் - தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்த நீமனமே
ஆங்கார அச்சம் அறு. 25

அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த
கச்சத்தா னியச்சயமாய்க் கள்ளதோ - மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைதான் நிலை. 26

நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதி போலே தினமும் ஆனாய் - கலையறிந்து
மாரனையுங் கூற்றினையும் மாபுரத்தை யும்புகைத்த
வீரனையும் தேட விரும்பு. 27

விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா
இரும்புண்ட நீர்போல வேகும் - கரும்பதனைத்
தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றாலல்லோ வெளிச்ச மாம். 28

வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக்
களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே - வெளிச்சமற
தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு. 29

இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய
பொருட்டனையே மூடு ஐம்புலனால் - திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர்
கண்டுகொள்வோம் காணா தது. 30

காணா ததைக்கண்டால் கண்டதெல்லாங்காணாது
வீணாவல் கொண்டுள் மெலியாதே - நாணாதே
இந்திரியத் தோடு பிணங்காதே பாவிநெஞ்சே
செஞ்சொல்மறை அக்கரத்தை தேடு. 31

தேடினா லைந்துதிரு வக்கரத்தைச் சென்றுவெளி
நாடினால் நெஞ்சே நலம்பெறலாம் - வாடியே
பொல்லாப் புவிகாணப் போகமதை நம்பாதே
எல்லாம் வெயில் மஞ்சளே. 32

மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும்
பஞ்சமல நெஞ்சே பகரக்கேள் - மஞ்சள்
மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம்
அயன் காணழி சூத்திரம். 33

சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவமெல்லாம் - சூத்திரத்தைப்
பாராமலேயிருந்து பாவிமன மேபிறக்க
வாராம லேயிருக்க வா. 34

வாசி தனைப்பிடித்து வண்கனலோ டேசேர்த்துச்
சீசீ யெனவே திரியாமல் - மாசி
இருளா னதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளா னதைமறந்து போட்டு. 35

போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியும் நாய்விடக்கே
கூட்டங் குலைந்து குலைந்திடுமுன் - காட்டிடில்
தாழ்வுறாய் நெஞ்சே தராதா மாயெங்கும்
மூழ்வா னதையுயிர்போம் முன். 36

முன்னே யயனெழுதும் மூன்றுவினை கண்டுழன்று
பின்னும் தெரியலையோ பேய்மனமே - தன்னை
அறியா திருந்தால் அவனறிவானோ
குறியான புத்தியென்றே கொள். 37

கொள்ளைக்குட் பட்டுக் குடிகேட ரோடிருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே - மெள்ளமெள்ள
அய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆறாறுக் கப்பாலே
தேர்ந்ததாய்ந்து பார்த்துத் தெளி. 38

தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்தநீர் காட்டா தவைபோல் - தெளிந்தால்
சகலப் பொருள் தோற்றும் தாழ்வுறா தொன்றும்
பகலிர வில்லாத பதி. 39

பதிபசுபா சங்களையும் பற்றி யுருவப்
பதிதனிலே தங்கிப் பலரும் - கதிபெறவே
வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளை
காணா மலாமோ கணக்கு. 40

கணக்கறியா மாயக் கருவீகர ணாதிப்
பிணக்கறியா மற்பேதை நெஞ்சே - இணக்கம்
அறிந்திணங்க வேணும் அருள்வெளியி னுள்ளே
செறிந்தவிந்து நாதத்தைச் சேர். 41

சேராதே மாய்கைதனை சேர்ந்து கருக்குழியை
பாராதே நெஞ்சே பதையாதே - சீரான
சித்திரத்தைப் பார்த்து தினமே சித்திரத்தில்
உத்திரத்தைக் கொள்ளா உகந்து. 42

உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தி னாலே
அகந்தனையே சுத்தி பண்ணி பாய்ந்து - முகந்து
குடியாம லாமோ குலவுமல மான
மிடியா னதுதீர வேண்டி. 43

வேண்டுந் திரவியமும் மேலுயர்ந்து பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடு மம்பலமும் - மாண்டுபெருங்
காடுயர்ந்தா ரேமனமே கண்டாயோ மாயனயன்
தேடரிய ஈசன் செயல். 44

செயமகா நெஞ்சே திருட்டுமலக் கோட்டை
பயமறவே வெட்டிப் பரப்பி - நயமான
வாசியினால் சுட்டு மதிமயங்கக் கண்டிருப்போம்
பேசிய நாம் பேசாம லே. 45

பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான்
ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ - சுசாமல்
தேசமெல்லாம் ஓடித் திரிகின்றாயே மனமே
ஆசாபா சங்களும் நீ யாய். 46

பாசங் களைந்து பதியி லிருந்துகொண்டு
பேசரிய காலைப் பிடித்திருக்க - நேசமுடன்
நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தை
தாமொருவ னாயிருக்கத் தங்கு. 47

தங்கு நெடுவளையில் சகலங் களுங்கடந்து
எங்குநான் றானா யிருக்காமல் - மங்கு
கருவானாய் நெஞ்சே கரிக்கால தூதன்
வருவானே யென்ன வகை. 48

என்னவகை செய்வோம் எமதூதன் வந்தக்கால்
பின்னையென ஒட்டானே பேய்நெஞ்சே - சொன்ன
படியேகேள் தூதன் பரிந்துவரு முன்னே
அடிதேடிக் கொண்டே அமர். 49

அமரும் மனம்புத்தி யாங்கார மேசித்
தமரும் பொழுது வேறானோர் - அமரும்
கோவென் றுரைத்தநமன் கொண்டுபோம் போதறிவு
வாவென்றால் நெஞ்சே வாராது. 50

வாராது நெஞ்சே மயக்கம் வருமுன்னே
வேரா னதைப்பிடித்து மேலேறிப் - பாராமல்
பொய்யிலே நில்லாதே புத்திகெடா தேயிருந்தால்
மெய்யிலே நின்றறிவோம் மெய். 51

மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் அறுபதாய் - மெய்யாகக்
கண்டதெல்லாம் நான்காண் காணா ததைத்தேடிக்
கண்டுருகி நெஞ்சே கனி. 52

கனியருந்த மாட்டாமல் காயருந்து கின்றாய்
கனிருசிபோ லாகுமோ காய்தான் - இனியதுகேள்
நானும் நீயும் கனிகாண் நடுவிருந்த தேருசிகாண்
தேனும் பாலும் போல் சிவன். 53

சிவதலங்க ளைத்தேடி சீயெழுத்த றுத்துச்
சிவதலங்க ளைத்தேடி சேரா - தவ தவங்கள்
பண்ணாதே நெஞ்சேகேள் பாரவினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சியேங்கா தே. 54

ஏங்காதே நெஞ்சேகேள் எவ்வினைகள் வந்தாலும்
ஏங்காதே சற்றும் இளைக்காதே - தாங்காமல்
கொண்ட வனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்றுகுறித் துண்மையிதென் றெண். 55

எண்ணரிய நெஞ்சே இனியநற் பாலதனை
அன்னந்தண் ணீர்நீக்கி யேயிருந்து - தன்மைபோல்
துன்பங் களைந்து தூயவெளி யூடுருவாய்
இன்பங் களைச்சேர்ந் திரு. 56

சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும் போலே கலந்து
வார்ந்ததிலே யுள்ளுரிசி வாங்காமல் - போங்காலம்
வைத்தமறக் காலன் வருவானே வந்தக்கால்
ஏய்த்திடுவா னெஞ்சே எவன். 57

எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாரு முண்டோ
கவனமற நின்று கருதின் - புவனமெல்லாம்
வித்துயிரெல் லாங் கழண்டு விண்ணுடைந்த தேமனமே
மற்றுடலைஉண்கிறதே மண். 58

மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்தும் தீயெழுந்தும்
விண்ணெழுந்துங் கூடி ஒரு வீடாகி - நண்ணரிய
மாயமெல்லா முண்டாக்கி வைத்தான் காண்நெஞ்சேஇக்
காயமெல்லாம் நானாக் கரு? 59

கருவழிந்தால் வித்தையில்லாக் காரணம் போல் நெஞ்சே
கருவழிந்த தெல்லாம் கண்டதெல்லாம் - கருதித்
திரியாதே நெஞ்சே சிவன் செயலே யல்லால்
மரியாரில் லாதக்கால் வந்து. 60

வந்ததுவும் நாதாந்த வாதனைக்கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் - அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே
தட்டுகெட்டுப் போகாதே தான். 61

தானந் தவமுயற்சி தாளாண்மை யோடுநெஞ்சே
வானம் பிளந்து வழிகூடின் - நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு. 62

தொடங்கு வினையறுத்து சுற்றமெலா நீத்தே
அடங்கு மிடத்தில் அடங்காமல் - கிடந்து
பறந்தெடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அருஞ்சரத் தம்மத னடி. 63

மதனசரத் தால்மனமே வையம் மயங்கி
விதனத் துறலால் வேறில்லை - மதனாலே
தத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண்
மெத்த சுகத்தை வெறுத்து. 64

வெறுத்துவெருக் கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கிற் போகாதே - குறித்தெடுத்து
தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமே குணம். 65

குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்குங் குணமாக வந்து - வணங்கியே
மண்டல மெலாங் கடந்து மாவீட்டை நீதிறந்து
கண்டெடுத்துக் கொள்வாய் கனம். 66

கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டே
வினையார் நகைக்குருக வேண்டா - தினமனமே
சோதித்தா னல்லால் சுபகா ரியமாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி. 67

புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே
சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்த முண்டிருந்தக் கால். 68

கால்வழிச் சென்று கருபைக் குழிக்குக்கீழ்
மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி - மாலை
இருட்டறுத்துப் போடாமஎன்பாவி நெஞ்சே
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று. 69

சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் - நன்றாய்
நிலையாக நில்லா தலைவாய் மனமே
அலைவாயி னில்துரும்ப தாய். 70

தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய்பறிக்கி றாயே கனியிருக்க - தாய்தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு. 71

இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு - எங்குமெங்கும்
நாமேசிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும். 72

அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ
அருளறிவு தானே ஆனந்தம் - அருளறிவு
தேடுவதும் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
நாவதும் தானறி வினால். 73

நாடிலெழுத்து ஆறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமோ - ஓடாய்நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோடுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை. 74

உறைகலத்தினாய் போல உள்ளமல மெல்லாம்
அறுத்தடைந்து நெஞ்சே அறுதி - நிறைத்துப்
புளியம் பழத்தோடு போலிருக்க வேண்டும்
களியழியுங் காலத்துக் கே. 75

காலங் கழித்துக் கடைவாயில் பாலுறுமுன்
வேலங் கனைய விழிமடவார் - ஏலக்
குழியில்வைத்து மாரடித்து கூப்பிடுமுன் மாய்கைக்
கழியெடுத்துப் போடுமுன் கண்ணால். 76

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்கவேண் டுந்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால். 77

உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின்வாய் தேரைபோல் - முன்னால்
அம்பிபட்டுப் போகாதே ஆனந்த மெய்விளக்கு
நம்பி துணைக்கு முற்றும் நம்பு. 78

நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து
கும்பிடா தார்க்குங் குறையுண்டோ - நம்பிப்
பளிங்கொளிபோல் நெஞ்சே பரந்திடாலா மெங்கும்
விளங்கனலோ டேசேருமே. 79

ஏமன்வரு முன்நெஞ்சே எவ்வினையுமே வென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே - சேமமுடன்
காலனையும் வென்று சில காமனையும் வென்றுபின்பு,
பாலிக்க லாமதுநாம் பார். 80

பாரயனும் மாலும் பரவவரு ருத்திரனும்
காரனைய வாரணத்தை தான்கண்டு - சீராய
நக்கத் திடைநடுவே நற்க்கன பொற்பதியில்
சொற்கனகத் தற்பதியில் தோன்று. 81

தோன்றுமே யெல்லாச் சுகமுற்றதில் மனமே
தோன்றுமே ஆனந்தச் சுந்தரர்பின் - தோன்றுமே
அட்சரச் சுருக்கி னொடும் அக்கரப் பெருக்கமுடன்
உச்சரித்து ரைக்கிறவுண்மை. 82

உண்மை யிதுகாண் ஒளியிருந்த வீடதுகாண்
உண்மை சிவனிருக்கும் ஊருகாண் - உண்மை
கருமை ஒளியேழ் கதியுள் பதங்கள்
மருவுதங்கி நீ வருந்து மாறு. 83

வருந்தும் பொழுதுகாண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து - வருந்தும்
இருவினை தொடக்கறும் ஏழ்வகைப்பிறப்பாம்
கருமலத் திருக்கறுங் காண். 84

காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை - காண்மனமே
செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடுநட னம். 85

நடனமது பார்மனமே நயனத் திடையே
நடனமது நாலாம் பதங்காண் - நடனம்
பதிமதிவித் தாய் மனமே பலகதிவித் தாயெனவே
அதிவிதசித் தாந்த மாடும். 86

ஆடும் பதிமனமே அம்பலத்தைச் சுட்டுநடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் - ஆடுகின்ற
கூத்தனை கூற்றிற்ற கூத்தபிரா னையசுத்தம்
நீத்தவனைச் சித்தம்வைத்து நில். 87

நில்லு நிலவறமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவியற நீநெஞ்சே - நில்லு
கனல்மதியும் கார்மிடறும் கதிரும் மதியும்
புனலொடு செஞ்சடையும் போற்றி. 88

போற்றித் தினமனமே பொல்லாக் குலங்கள் விட்டுக்
காற்றுங் கனலுங் கருத்துஒன்றாய்ப் - பார்த்தறிவால்
சுத்தமலப் பித்தையற்றுச் சுற்றஒழி சுற்றிலுற்றுச்
சத்தமறித் துற்றதிலே தங்கு. 89

தங்குநீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்குங் கருக்குழிக்குள் வாராமல் - தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி. 90

வெளியில் வெளியாகி விண்ணவன் றானாய்
வெளியி லொளியா யிருக்க - வெளியிற்
கரியுரித்துப் போர்த்தவனைக் கார்மதிசென் றானைக்
கருவறுத்துப் பார்த்தலே காண். 91

காணு மனமே கரிகாலனை வதைத்துக்
காணு முலகமெல்லாம் காணுருவாய் - தானு
மனவிரக மானபுலி மன்றுள் நடனப்
பணவரவின் உற்ற பாதம். 92

பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க
நாதத்தா னென்று நெஞ்சே நன்றாகப் - போதத்தான்
ஆரணத்தி னோடடைந்து அண்டமெல்லாம் சுட்டதிரு
நீறணிந்து கொண்டிரு நித்தம். 93

நித்தனாய் நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் - பெற்ற
குருவினிரு பாதங் குளிர நினைநீ
தருமதுபற் றாமனமே தான். 94

தானவனா காவிட்டால் சண்டாள னிற்றடிவான்
தானவனு மங்கே தரிக்கொட்டான் - மானார்
கலங்கும் கலவிக்கருத்திற்றால் தான் கொடுப்பான்
இலங்கும் அடிதேர் நெஞ்சே. 95

நெஞ்சே உனக்கு நிலவறமாய்ச் சொன்னவெலாம்
எஞ்சாவென் சொல்லென் றிகழாதே - நெஞ்சே
கருத்திச்சை தள்ளி கருதென்று செப்பின்
கருத்திச்சை தள்ளு கருத்துள். 96

உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை - உள்ளே
மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால்
உனதறிவால் பார்த்து நீ ஓது. 97

ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய வணுகாமல் காக்கும். 98

காக்குந் தினமே கடியப் பிறப்பறுத்து
கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் - நோக்குமந்தி
வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை
யுந்து மதையுணர்ந்தில் வாழ். 99

வாழுநீ நெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை
வருத்தந்தீர்த் தன்பன்மனமதனில் தங்கு
பருத்தரத்தி னத்தைப் பணி. 100

பணிந்து துதிமனமே பல்லுயிர்கட் கெல்லாம்
அணுவிலணு வாங்கியிருந் தானை - துணிவாய்ப்
பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்வைத்
திறமாக நம்பிச் செலுத்து. 101

கோயில் திரு அகவல் - 1

கோயில் திரு அகவல் - 1

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க ! 5

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன. 15

தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை; 20

இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள் 25

பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி; 30
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை. 35

ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை,
நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு 40

முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே ! 45

சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !

திருச்சிற்றம்பலம்

கோயில் திரு அகவல் - 2

கோயில் திரு அகவல் - 2

காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து 5

அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை; 10

நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்; 15

மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை; 20

ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில் 25

பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்; 30

அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட காட்சி;
அதனினும் அமையும் பிரானே! அமையும்;
இமைய வல்லி வாழிஎன் றேத்த 35

ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!

கோயில் திரு அகவல் - 3

பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து                   5

இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்;
ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்;
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்;                                     10

ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்;
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின                                                    15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை                                       20

எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக்                                       25

கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்
கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,
ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை.                                              30

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்,
கடுவெளி உருட்டிய சகடக் காலைப்                                                      35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப்                            40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்;
வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்;
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்;                                     45

அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்;
மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்,
தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்                                 50

எம்பெரு மானின் இணையடிக்கு அபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!