Showing posts with label புதுவை சித்தர்கள். Show all posts
Showing posts with label புதுவை சித்தர்கள். Show all posts

 



அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி ஸ்வாமிகள் சமாதி 


இதுவரை நமது புண்ணியம் தேடி பகுதியில் பல கோவில்களை பற்றிதான் பார்த்திருக்கிறோம். எப்பவாவது ஒருசில  சமயத்துல, கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் சித்தர்கள், சாமியார்கள் ஆசிரமம் பற்றி தனிப்பதிவா பார்த்திருக்கோம். ஆனா,  இதுவரை இல்லாமல் நம் தொடரில் தொடர்ந்து சித்தர்களின் சமாதிகளை பற்றி பகிரப்படுகிறது ஏனென்றால், மானிடராய் பிறந்தவர்களின் துர்க்குணங்களையும், துன்பத்தையும்  மாற்றி, தூய்மையானவர்களாக்குவதற்காக அவதரித்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசித்திருப்பதையும் விழித்திருப்பதையும் பெரிதும் விரும்புபவர்கள். எப்பொழுதும் சிவபரம்பொருளையே தியானித்துக்கொண்டு இருப்பவர்கள். சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில் பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை நாம் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும், நாங்கள் சந்தித்த கடைக்காரர் சொன்ன மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றது.  அவற்றைதான் நமது பதிவுகளில் தொடர்ந்து பார்த்து, படித்து, தரிசித்து வருகிறோம்.

சரி கடந்தவாரம் நாம ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்தோம். இந்த வாரம் நாம தரிசிக்கப்போவது அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் ஜீவசமாதியை. வேதாந்த சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து வெளியே வரும்போது,மதியம் ஆகிவிட்டது. பெரும்பான்மையான திருக்கோவில்களில் மதியம் 12:௦௦ மணிக்குமேல் நடையடைத்து விடுவது வழக்கம். சரி இனி சாப்பிட்டு போகலாம்ன்னு பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு, பக்கத்துல இங்க பக்கத்தில் எதாவது பார்க்குறமாதிரி இருக்கான்னு ஹோட்டல்காரங்கக்கிட்டயே விசாரித்தோம்.  ம்ம் இருக்கு.  இங்கன பக்கத்திலயே கம்பளி சித்தரின் ஜீவசமாதி இருக்கு போய் பார்ருங்க. ரொம்ப விஷேசமானதுன்னு  சொல்லி கூடுதல் தகவலாய்  பாண்டிச்சேரி முழுக்க 51 சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கு நீங்க ஒவ்வொண்ணா பாருங்க எனக்கூறி கம்பளி சித்தர் ஜீவ சமாதிக்கு போகும் வழியை சொன்னார்.

நாங்க அங்க போனதும், சித்தர் சமாதிக்குதான் வந்துட்டோமா?! இல்ல எதாவது கார்ப்பரேட்  சாமியார்கள் ஆஸ்ரமத்திற்கு வந்துட்டோமான்னு  ஜெர்க் ஆனோம். ஏன்னா, அங்கு, வெளிநாட்டுக்காரங்க அதிகம் இருந்தனர். இதிலிருந்து ஒரு உண்மை புரிகிறது. வெளிநாட்டவர்கள் நம்முடைய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்து இந்துமத்தை பின்பற்றி அமைதியான வாழ்வு வாழ்ந்து அமைதியை தேடுகின்றனர் போலும். ஆனா, அதேநேரத்தில்  சில தவறுதலான வழிகாட்டுதல்மூலம் சிலருக்கு சில பிரச்சனைகள் வந்துவிடுகின்றன.  வீட்டைவிட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டால் நல்லா இருக்கலாம்ன்ற பாடல்வரிகள் நினைவுக்கு வந்தது. சரி சரி, நமக்கெதுக்கு  ஊர்வம்பு?! நாம  வந்தவேலையை பார்ப்போன்னு  ஜீவசமாதியை நோக்கி சென்றோம்.

இந்த சித்தரை பற்றி யாருக்கும் சரியான விவரம் தெரியாதாம்.  ஆனா, இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்ததாக மட்டும் செவிவழி செய்தி. இவருடைய உண்மை பெயர், பெற்றோர் விவரங்கள் யாருக்கும் தெரியலை. இவர் கம்பளி போர்வையை எப்பயுமே போர்த்திக்கிட்டு இருக்குறதால, மக்கள் இவரை கம்பளி சாமியார்ன்னு கூப்பிடப்போய் அதுவே பின்னாளில் கம்பளி சித்தர்ன்னு ஆகிட்டது. புதுச்சேரியில் உள்ள பாக்குமுடையான் பட்டு, முத்தியால்பேட்டை, கவுண்டன்பாளையம் போன்ற இடங்களில் அடிக்கடி நடமாடுவாராம். அதிலும் கவுண்டன்பாளயத்திலுள்ள  சாஹையார்ன்னு பேர்க்கொண்ட குடும்பத்தினரிடம் மட்டும்தான் பேசுவாராம். ஒரு இஸ்லாமிய பெரியவர்,   இவருக்கு குருவாக இருந்தார் சொல்றாங்க. வேலாயுதம் என்ற வைத்தியரும் இவரிடம் நெருக்கமாகவும், இருவரும் நல்ல நட்பு கொண்டவராக இருந்தனர் என்றும் சொல்லப்படுது.


இந்த கம்பளி சித்தர் நிறைய கல்வி அறிவு பெற்றவர். சுத்த பிரம்மச்சாரி. மாயையை வென்றவர் என்றும் தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு நிறைய நன்மைகளை இந்த சுவாமிகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய நோய் வந்துவிட்டால்  அவர்களுக்கு பச்சிலையும் விபூதியும் தந்து குணமாக்குவாராம். மேலும், இவரைப்பற்றி  செவிவழியாக சொல்லப்படுவது என்ன்னா,  இவர் நினைத்த இடத்தில் மறைந்து, நினைத்த இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவராக இருந்துள்ளார். சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை ஸ்தூலத்திற்கு அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர் என்றும் இதை அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவங்க பார்த்திருக்காங்கன்னும் பார்த்தவங்க வழிவழியா வந்தவங்க சொல்லி கேட்டவங்க சொல்றாங்க.  


வீதியில் நடமாடும்போது இவரது தோற்றத்தை கண்டு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்டப்பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம். இதுவும் செவிவழியா பரவி இங்கு சொல்லப்படுது.  சிலசமயம் சாலையில் நின்று .வாயில் ஒரு சுருட்டை வைத்துக்கொண்டு போவோர், வருவோரிடம் நெருப்பு கேட்பாராம். அவர்கள் கண்டும் காணாமல் சென்றால்  தன் ஆட்காட்டி விரலை சுருட்டுக்கு முன்னால் பத்த வைப்பதுபோல் நீட்டுவாராம் . சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளுமாம். அதேபோல் சுவாமிகள் ஒருமுறை கள்ளுக்கடைக்கு சென்றார். கையை நீட்டினார். கடைக்காரர்,  இன்னும் போணியாகலை போ” ன்னு கள்ளுக்கடைக்காரன் விரட்டினானாம். உடனே, சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்து விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவே இல்லை. கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி ஓடினார். வெகு சிரமத்திற்குபின் சுவாமிகளை கண்டுப்பிடித்து கடைக்கு கூப்பிட்டார். சுவாமிகள்,”நான் வருகிறேன்  நீ முன்னால் போ” என்று சொல்லி அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை வண்டியில் வேகமாக  கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே வந்து அங்கு உட்கார்ந்திருந்தார். அதுவும் இவரது சித்துவிளையாட்டுகளில் ஒன்று என சொல்லப்படுகிறது.

மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை நீட்டினார் சுவாமிகள். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று சுவாமிகளுக்கு சாராயம் கொடுக்கவில்லை. சுவாமிகளும் அங்கிருந்து போய் விட்டார். அன்று முழுதும் அந்த கடையில் எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க முடியவில்லை. அதேபோல் பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய் கேட்டார்.  வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார். சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து பார்க்கும்பொழுது ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது. உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்புகேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது. ஒரு சமயம்,  சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது. உடன் வந்தவர்கள்  சுவாமிகள் இறந்திருப்பார், என்று நினைக்க,காட்டில் அந்த  பாம்பு இறந்து கிடந்தது. இவருக்கு பாதரசத்தை தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையும் தெரியும். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை என்றுமே கொண்டதில்லையாம்

சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தண்ணீரில்தான் செய்து வந்தாராம். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம். நீரின் மேலேயே படுத்துக் கிடப்பார். சுவாமிகள்  ஏதோ ஒரு காரணத்தால்தான் எப்பொழுதும் ஜலத்தில் ஸ்தம்பனம் செய்து கொண்டிருந்தார்.அப்படியே சில நாட்களில் ஜல சமாதியடைந்தார். அந்தநாள் சரியாக 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் உள்ள குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர் இதை கவனிக்கவில்லை. மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே கம்பளி தண்ணியிலே“. இக்குரல் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தது. மக்கள் ஒன்றுகூடி அவரது  திருவுடலை, நீரிலிருந்து வெளிக்கொணர்ந்து அங்கயே சமாதி எழுப்பி ஊர்மக்கள் அந்த சமாதியின்மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்தனர். சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர். கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு பெரியவர் என்னும் மகானின் சமாதியும் இருக்கிறது.

இப்பழுது இந்த சித்தர் சமாதிக்கோவில், வெளிநாட்டிலிருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது.அவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப்பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர். அவர்கள்தான் இங்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த கம்பளிச் சித்தர் சமாதி கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதியும் உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேர் வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது. பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச்சந்நிதிகளில் விநாயகர் முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிலைகள் எல்லாம் கலைநயமும், புதுமையும்  மிக்கவை. இங்கிருக்கும் முருகன் சந்நிதிக்கு  எதிரிலுள்ள மயில் வாகனமும் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளது.

படம் உதவி: முகநூல் 
முருகப்பெருமான் சந்நிதியை அடுத்து கஜலட்சுமி தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இந்த சந்நிதியில் கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகளுக்கு பதிலாக எதிரில் ஒரேயொரு யானை மட்டுமென இதிலும் வித்தியாசம் காணப்படுகிறது. அதுவும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், சக்தியும் அருள்பாலிக்கின்றனர். வெண்கலத்தினாலான திருஉருவங்கள் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்  விநாயகர், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.

கூடவே கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் இங்குள்ளது. அகத்திய முனிவருக்கும் ஒரு சிலை இருக்கு. இந்த சித்தர் சமாதியில் குழந்தை பிறந்தவர்கள் பால் வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். சித்தரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதும், சமாதிக்கோவிலின் முகப்பில் உள்ள சிவசக்தி ரூபம் நம்மை பரவசமடைய செய்கிறது. ஒரு அக்கினி வளையத்தின் நடுவே சிவனும் சக்தியும் ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல் நுனிபூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை, உயரத்தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம், கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம் என சிலாரூபம் மிக அழகு. மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள் சுமார் முப்பது அடிஉயரம் கொண்டதாய் இருப்பது மிக அழகு.

இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அந்த கதவை வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்களாம். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு மகாசிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்வாராம். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணிநேரம் பூஜை நடக்குமாம். பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குவாராம். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. கடந்த சிவராத்திரியில் பக்தர்கள் இவ்வட்டத்தைச் சுற்றி நின்று தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லியபடி சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளை ஏந்தி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்வது பார்ப்பதற்க்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்குமாம்.


அதைவிட முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பூஜை முடிந்தவுடன் அன்றுமட்டும் பக்தர்கள் பாதாளலிங்கத்தை சென்று தரிசிக்கலாம். வருடத்திர்ற்கு ஒருமுறை மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். இதேபோல், குப்பம்மாள் என்பவர் மகோதர நோயால் கடும் அவதிப்பட்டு  கொண்டிருந்தார். வேதனை தாங்காது ஒருநாள் சித்தரின் சமாதியில் விழுந்து அழுதாராம். சிலநாட்களில் எந்த மருந்துமில்லாமல்  அந்த நோய் குணமாகியது. என்றும் செல்லப்படுகிறது.

இந்த ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோவிலுக்கு சென்னையில் இருந்து ECR வழியாக புதுச்சேரி சென்று அங்கிருந்து , தட்டாஞ்சாவடி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் சென்று, அங்கிருக்கும் ருத்திரபூமி பகுதியில் உள்ள இந்த சித்தரின் சமாதிக்கு செல்லலாம். அல்லது ஆட்டோக்காரர்களிடம் சொன்னால் சரியாக சித்தர் சமாதியில் கொண்டு இறக்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் இந்த சித்தரை வழிபட்டால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரலாம் .இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்


தொள்ளைக்காது சித்தர்

 

தொள்ளைக்காது சித்தர்



தொந்தி இல்லாத அழகிய விநாயகரை உடைய இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேஇருந்த ஒரு கோவில் ஆகும்.

மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும் புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. அங்கே ஒரு சித்தரின் ஜீவா சமாதி உள்ளது அவரின் திரு நாமம் தொள்ளைக்காது சித்தர்

தொள்ளைக்காது சுவாமிகளின்
இயற் பெயர் என்ன ? தாய் தந்தையர் யார்?
எப்பொழுது பிறந்தார்?

எங்கிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் தான் ஊர் மக்கள்முதலில் பார்த்தார்களாம்.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார். வாய் பேசா ஊமையானார்.

ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு யாவற்றையும் உணர்ந்தார். அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-
கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார். தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு( தற்போதைய பிள்ளைத் தோட்டம் ) வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல
சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.

அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது.

அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.

விநாயகர் என்றதும் யானைத்தலை, பானை வயிறு இந்த இரண்டும்தான் நமக்கு நினைவுக்கு வரும். நன்கு உன்னிப்பாக பார்த்தால் யானைக்கு இருப்பது போன்று சிறிய கண்கள், விசிறி போன்று காது, ஒடிந்த நிலையில் ஒரு தந்தம், திறனை வெளிப்படுத்தும் துதிக்கை, கொஞ்சமாக பேச வேண்டும் என்பதை உணர்த்தும் சிறிய வாய் போன்றவற்றை பார்க்கலாம்.

ஆனால் மணக்குள விநாயகருக்கு தொப்பை கிடையாது. அவரது உருவமும் மற்ற விநாயகர் சிலை அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுபற்றி ஆலய குருக்கள் கூறியதாவது:-

மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் உருவ அமைப்பு எங்களுக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மிக அருகில் இருந்து நுட்பமாக பார்த்தால்தான் அந்த வித்தியாசம் தெரியும். அந்த விநாயகரின் வடிவம் தொன்மைக் காலச் சிற்பக் கலை நுணுக்கத்தோடு உள்ளது. விநாயகர் உடல் மெலிந்த உடல்வாகு போன்றிருக்கும்.

தன் இரண்டு கால்களையும் மடக்கிச் சப்பணம் போட்டு அமர்ந்த கோலத்தில் அவர் உள்ளார். இத்தகைய உருவ அமைப்பில் உலகில் வேறு எங்கும் விநாயகர் சிலை இல்லை. இவ்வாறு கணேஷ் குருக்கள் கூறினார்.
இவர் குறிப்பிடும் விநாயகர் தற்போது ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் கருவறையில் இருந்து பெயர்த்து படகில் எடுத்துச் சென்று கடலில் தூக்கி வீசினார்கள்.
ஆனால் அவர்கள் கரைத்த திரும்புவதற்குள் இவர் கரை திரும்பி இருந்த இடத்துக்கே வந்து விட்டார்.

வெள்ளைக்காரர்களின் கை, இவர் மீது பட்டதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக நீண்ட நாட்களாக பக்தர்களும், சமயப் பெரியவர்களும் கூறி வந்தனர். அதற்கான பரிகாரங் கள் செய்யப்பட்டாலும் அந்த விநாயகரை மீண்டும் வெள்ளைக்காரர்கள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் புதுச்சேரி மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் தொள்ளைக் காது சித்தர் ஜீவசமாதி ஆனார். அவரது உடல் மணல் குளத்தின் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதும் விநாயகர் கோவில் வழிபாடுகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற தொடங்கின. அப்போது ஆகம விதிப்படி வெளிநாட்டவர் கைபட்ட சிலை தீட்டுப்பட்டது என்றும் எனவே வேறொரு புதிய விநாயகர் சிலையை கருவறையில் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்றும் சமயச் சான்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து வழிபாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு நேராத வண்ணம் மற்றொரு விநாயகர் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படுகிறது. அன்று முதல் ஆலய கருவறையில் இரண்டு விநாயகர்கள் உள்ளார்கள். பிரெஞ்சுக்காரர்களால் கடத்தப்பட்டு மீண்டு வந்த விநாயகர் ஆதி விநாயகர் என்றும், புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட விநாயகர் மூல விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

கருவறையில் உள்ள இந்த இரு விநாயகர்களுக்கும் ஒரே மாதிரி அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது.






’கண்களின் கடவுள்’ பாண்டிச்சேரி மதர்!

 

நமக்கு அனுகூலம் தரக்கூடிய ஒரு காரியம் குறிப்பிட்ட ஒருவரால் ஆக வேண்டும் என்றால், என்ன செய்கிறோம்?  தொடர்ந்து அவருக்கு அறிவுறுத்தி, அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டே இருப்போம் அல்லவா?!  அது மட்டும் அல்லாமல் காரியத்தைச் செய்து கொடுக்க வேண்டியவர் முகம் சுளிக்கா வண்ணம் மனம் நோகா வண்ணம் அவருக்கு பணிவான குரலில் போன் மூலமாகவோ, இதமான வார்த்தைகளில் எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தெரிவித்துக் கொண்டே இருப்போம் அல்லவா? கிட்டத்தட்ட இதை நச்சரிப்பு என்று சொல்லலாம். இதே நச்சரிப்பை இன்னும் நாசூக்காக-இறைவனிடம் வைப்பதுதான் பிரார்த்தனை.  என்ன ஒன்று, இறைவனுக்கு போன் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தகவலைப் பரிமாறிக் கொள்ள முடியாது. பிழைத்தார் இறைவன்!

ஒரு உதாரணத்துக்காக நச்சரிப்பையும், பிரார்த்தனையையும் இங்கு ஒப்பிட்டிருக்கிறேனே தவிர, இரண்டும் வேறு வேறு. சில காரியங்கள் நச்சரிப்பின் விளைவாகவே பூர்த்தி ஆகின்றன.  ஆனால், எல்லாமும் அப்படி ஆவதில்லை.  இதற்குதான் பிரார்த்தனைகள் கைகொடுகின்றன.  பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையின் அன்பார்ந்த பக்தர்கள் பிரார்த்தனையின் நம்பிக்கையயும் வலிமையையும் நன்கு அறிந்தவர்கள்.  இடைவிடாத பிரார்த்தனை மூலம் தங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரட்டுவதற்கு அன்னை அருளிய பிரார்த்தனை முறை களைக் கண் கண்ட மருந்தாகக் கருதி வருகிறார்கள். உள்ளன்போடும் உருக்காத்தோடும் பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள்.  பிரார்த்தனை நம்மை ஆண்டவன் பாதையில் பாதி வழிக்குக் கொண்டு செல்லும்.  உபவாசம் இறைவனுடைய அரண்மனை வாயில் வரை செல்வதற்கு நமக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும் என்பது ஒரு பாரசீகப் பழமொழி.

அன்னை சொல்வார்; தெய்வீக சக்தியின் கருணையை மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும்.  அப்போது நிலையான அற்புதங்களை அது நிகழ்த்தும். ஆம்! வலிமையான பிரார்த்தனை இல்லாவிட்டால் தெய்வீக சக்தியின் கருணையை நாம் பெற முடியாது. வாழ்க்கையின் சிரமமான இறுதி நிலைக்கு வந்த பிறகு.  அன்னையிடம் பிரார்த்தனை வைத்து. அதன் மூலம் நிமிர்ந்து அடுத்த சுற்றை வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் அநேகம். புதுவை ஆசிரமத்திலேயே வளர்ந்து வந்த ஒரு குழந்தைக்குக் கடுமையான பேதி.  உடல் அயர்ச்சி.  டாக்டர்கள் தினம்தோறும் பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்தார்கள்.  ஆனால் குழந்தை கண் விழித்துப் பார்க்கவில்லை.  பத்து நாட்கள் படுத்த படுக்கையாக இருந்த அந்தக்குழந்தையைப் பதினோரம்தினம் காலை அன்னையின் தரிசனத்துக்காகத் தூக்கி வந்தார்கள்.  அன்னையின் பார்வை பட்ட மறுகணம் குழந்தை துள்ளி எழுந்து. ஓடியது.  அன்னையின் அருகே மலர்ச்சியுடன் நின்றது. சாக்லெட் கேட்டது.

ஒரு முறை புதுவையில் பலத்த புயல் வீசியது.  மரங்கள் வேரோடு சாய்ந்தன.  கடல் பொங்கிச் சீறியது. கடல் நீர் ஆசிரமத்தின் உள்ளேயே வெள்ளமெனப் பாய்ந்து பலரையும் அழித்து விடுமோ என்ற அச்சம் ஆசிரமவாசிகளுக்கு! அன்னையிடம் ஓடிப் போய் அனைவரும் வேண்டினர்.  ஒரு சில விநாடிகளுக்கு தியானம் மேற்கொண்ட அன்னை, சூட்சம வடிவில் கடல் தேவதையின் முன்னால் போய் நின்றார்.  உன் சீற்றத்தக்கு அப்பாவி மக்கள்தானா இலக்கு? என்று கேள்வி கேட்டார். மிகப் பெரிய பாறாங்கற்களைக் கரையோரம் அடுக்கி, இதைத் தாண்டி நீ நகருக்குள்ளும் ஆசிரமத்துக்குள்ளும் வரக் கூடாது என்று   தேவைதக்கு அன்புக் கட்டளை இட்டார்.  அன்னையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட கடல் தேவதை தன் சீற்றத்தைக் குறைத்துக் கொண்டாள்.  புயல் நீங்கியது. ஆபத்து விலகியது.

இன்றைக்கு உலகம் முழுக்க அன்னைக்குப் பல லடசக்கணக்கான பக்தர்கள்.  புதுவைக்கு வந்தும், இருந்த இடத்தில் இருந்தப்படியும் அன்னையை ஆராதிக்கிறார்கள். வழிப்பாட்டின்போது அன்னையை எப்படி விளிப்பது? மதர் - அம்மா - அன்னை.  இவற்றில் எந்த சொல் உங்களுக்கு இதம் தருகிறதோ, மனம் அமைதிப்படுகிறதோ, அந்த வார்த்தையைச் சொல்லி அழைத்து வழிபடலாம். 1878-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21- ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் அன்னை அவதரித்தார்.  அன்னையின் பூர்வீக பெயர் பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா. சிறு வயதில் இருந்தே ஆன்மீக ஆற்றல்கள் மிர்ராவுக்குள் பெருகின.  கலைகளுக்கும் நாகரிகத்துக்கும் பேர்போன பிரான்ஸ் நாட்டில் பிறந்த மிர்ரா, பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பாரத தேசத்தின் தொன்மையாலும் ஆன்மிக சக்தியாலும் கவரப்பட்டார்.

படிக்கின்ற காலத்திலேயே அடிக்கடி தியான நிலைக்குப் போய் விடுவார் மிர்ரா.  சமைக்கும்போதும், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும் திடீர் திடீரென சாமதி நிலைக்கப் போய் விடுவார்.  இறை சக்தியோடு இணைந்து விடுவார். சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டில் இருந்து கடைக்குப் புறப்பட்டார்.  பிரான்ஸ் தேசத்தின் பிஸியான சாலை ஒன்றை மிர்ரா கடக்க நேரிட்டது.  பாதி சாலையைத் தாண்டிக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு தியான நிலை வந்து விட்டது.  கால்கள் நகர மறுத்தன,  சுய நினைவில் இருந்து விலகினார்.  சட்டென்று சிக்னல் கம்பத்தில் பச்சை விளக்கு ஒளிர... வண்டிகள் வேகம் பிடித்தன.  மிர்ராவின் அருகே பெரிய பேருந்து ஒன்று இடித்துத் தூக்கி விடுவது போல் வந்தது.  அந்த பிஸியான சாலையில் யாரோ ஒருவர் வந்து மிர்ராவை ஒரு பக்கமாக இழுத்துப் பல அடி தூரம் தள்ளி உள்ள சாலையோரம் வீசிப் போட்டார்.  அடுத்த விநாடி சுய நினைவு வரப் பெற்றவராக மிர்ரா இயல்பாக எழுந்தார்.  நடந்தார்.  உடலில் காயம் இல்லை. இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் வியந்து போனார்கள் .

 
பிரான்ஸில் இருந்தபோது அவரது கனவில் பல ஆன்மிகப் பெரியவர்களும் அவ்வப்போது தோன்றி போதித்திருக்கின்றனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடன் கூடிய ஒருவர் அடிக்கடி கனவில் வந்து இந்திய தத்துவங்கள் மற்றும் வேத உபநிஷத்துக்களை மிர்ராவுக்குப் போதித்திருக்கிறார்.  ஒவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மிர்ரா, தன் கனவில் அடிக்கடி வரும் அந்த தாடிக்கார அன்பரை உருவமாக வரைந்தார்.  பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தபோது அவரே தனக்கு கனவில் வந்து உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரைத்தான் படமாகத் தீட்டி வைத்தருக்கறோம் என்பதையும் உணர்ந்தார். ஸ்ரீஅரவிந்தர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியான மிர்ராவை ஆட்கொண்டிருக்கிறார்.  சிறு வயதிலேயே கீதையைப் படித்திருக்கிறார் மிர்ரா.  அதில் வரும் கண்ணபிரானைத் தரிசிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.  பின்னாளில் இந்தியா வந்தபோது மகரிஷி அரவிந்தரைப் பார்த்து வணங்கியவுடன் அவர் கண்டது மகான்  அரவிந்தரை அல்ல.... சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பகவானை!

உலகமே கண்டு வியந்த மகான் - ஸ்ரீஅரவிந்தர்.  சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து. பின்னாளில் ஆன்மிக வெள்ளத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  மகா பெரியவா மற்றும் ஸ்ரீரமண மகரிஷியின் தரிசனம் பெற்ற ஆங்கிலேயர் பால் பிரண்ட்டனை, ஆன்மிக அன்பார்கள் அறிவார்கள்.  தனக்கு ஒரு குரு வேண்டும் என்று மகா பெரியவாளிடம் கோரிக்கை வைத்தார் பால் பிரண்ட்டன்.  அதற்கு மகா பெரியவர், உங்களுக்கு குருவாக இருக்கும் தகுதி கொண்டவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மோனத்தில் புதுவையில் இருப்பதால், அவரை உங்களால் சந்திக்க முடியாது.  அடுத்தவர் ரமணர்.  திருவண்ணாமலையில் இருக்கிறார்.  அவரைப் போய் பாருங்கள் என்று அனுப்பினார். பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் தன்னைத் தேடி வருகின்ற பக்தர்களுக்கு நிம்மதியையும் பரிபூரண அருளையும் கொடுக்க வல்லது.  இத்தகைய இடத்தில்தான் கண்களைக் கவரும் இதமான இயற்கைச் சூழலில் பல விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளின் நடுவே இன்றைக்கு அன்னை அமர்ந்திருக்கின்றார்.  மூன்று தேவியாரின் (ஸ்ரீலட்சுமிதேவி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாகாளி) ஒருங்கிணைந்த வடிவாக அன்னை பார்க்கப்படுகின்றார்.  மகான் ஸ்ரீஅரவிந்தர் இந்த மூன்று வடிவிலேயேயும் அன்னையைப் பார்த்துப் பரவசம் கொண்டார். புதுவை ஆசிரமத்தில் இருந்தபோது அன்னை தினசரி தரும் பால்கனி தரிசனம் மிகவும் பிரசித்துப் பெற்றது.  இந்த தரிசனத்துக்காகக் காத்துக் கிடந்தார்கள் அன்பார்கள்.  இந்த தரிசனம் பெற்ற அனைவருமே பாக்கியசாலிகள்.  திருமண பாக்கியம் வேண்டியும், பிள்ளைப் பேறு வேண்டியும் அன்னையின் முன் பிராத்தனை செய்து, பலன் அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.
 
மந்திரம் இல்லை; ஸ்லோகம் இல்லை; அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டாம்; அபிஷேகச் சீட்டும் வேண்டாம், நம்பிக்கை நம்பிக்கை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் . அன்னையிடம் உங்கள் பிரார்த்தனையை வைத்து பரிபூரண பலன் பெறலாம்.  பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற சந்தேகம் உங்களுக்குள் முளைத்தால், எதுவுமே பலிக்காது.  தவிர, நம்பிக்கை இல்லாதவர்கள் அன்னையின் பக்தர்களாக இருக்க முடியாது,  அன்னையிடம் வைத்த பிரார்த்தனை ஒருவேளை உங்களுக்குப் பலிக்கவில்லை என்றால் அன்னையிடம் முழுமையான நம்பிக்கையை நீங்கள் வைக்கவில்லை என்று பொருள்.  அன்னையைத் தேடிப் புதுவைக்குக்கூடச் செல்ல வேண்டாம்.  இருந்த இடத்தில் இருந்தே அன்னையை வரவழைக்கலாம்.  உங்களது ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அன்னை.  அன்னையை ஆராதிப்பது மிகவும் எளிது.  நீங்கள் வாழ்ந்து வருகின்ற இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  எப்படிஇல்லத்திலும், வெளியிலும் சுத்தத்தைப் பேணுகிறீர்களோ, அதேபோல் உங்களது அகத்தூய்மையும் அமையட்டும்.  சத்தியம், அன்பு, கருணை, சேவை மனப்பான்மை, அடக்கம் எல்லாம் வாய்த்தவராக நீங்கள் விளங்குதல் வேண்டும் . தீய குணங்கள் அணுவளவும் உங்களிடம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


யோகத்தை ஏற்பதற்கு நாம் விலக்க வேண்டுபவை என்று நான்கு விஷயங்களை அன்னை சொல்கிறார்.  அவை; அரசியல், தாம்பத்திய உறவு, புகைப்படிப்பது, மது. பூக்களுக்கும் அன்னைக்கும் பொருத்தமான தொடர்பு ஏராளம் உண்டு. எப்படி கடல் தேவதையுடன் பேசினார்.  என்று மேலே பார்த்தேமோ, அதுபோல் செடியுடன், மரங்களுடன், பூக்களுடன் பேசுவார்.  அன்னையின் சிரிப்பில்கூட அந்தப் பூக்கள் மலர்ந்த தருணம் உண்டு. ஆத்மார்த்தமாக அன்னையிடம் சரண் அடையுங்கள்.  உங்களுக்கு உண்டான பிரச்னையை ஒரு நண்பரிடம் - தீர்வு வேண்டிச் செல்பவரிடம் சொல்வது போல் உருக்காமாக எடுத்துரையுங்கள்.  மூன்று நாட்கள் இடைவிடாமல் வாயாலோ மனதாலோ பிரார்த்தனையைச் சொல்லுங்கள்.  எப்போதெல்லாம் உங்கள் மனம் வாடுகிறதோ, அப்போதெல்லாம் அன்னையை நினையுங்கள். ஒருவன் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல.  இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வசித்தத்துக்குத் தன்னை முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும் என்கிற அன்னையின் திருவாக்கை ஏற்றுக் கொண்டு நடந்தால், நாம் ஒவ்வொருவரும் ஞானிகளே!  1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினேழாம் தேதி இரவு 7.25-க்கு அன்னை மகா சமாதி அடைந்தார். இருந்தாலும், இன்றைக்கு உலகெங்கும் உள்ள அன்பர்களுக்கு அருளி வருகிறார்.