சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள்

 


சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள்
(பூர்ண வித்யா - என்ற நூலில் இருந்து )

பல சிஷ்யர்கள் அனேக சமயங்களில் குருவிடம் செயல்படும் தன்மை, பழகும் விதம், பேசுகின்ற முறை, தனித்து சொல்கின்ற சொற்கள், கேட்கின்ற விதம் முதலியன ஸத்சிஷ்யர்களுக்கு உகந்தவைகளாக காணப்படவில்லை.

அதலின் சிஷ்யர்கள் விலக்க வேண்டிய சில தவறான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன:

1.குருவை கேலி அல்லது தூஷணை செய்தல்

2.குருவை தன் மனம்படி செயல்பட கட்டளையிடல்

3. குருவுடன் கொடுக்கல் வாங்கல் முதலியவை செய்தல்

4.குருவின் எதிரியோடு பழகுதல். குரு தூஷணையை காதால் கேட்டல்

5. குருவின் சொல்லும் செயலும் - உலக இயல்புக்கு மாறாக உள்ளதே என்று நினைத்தல்; சொல்லுதல்

6. குருவும் மனிதப்பிறவிதானே அதனால் குறைகள் இருக்கும் என்று எண்ணுதல்

7. பகவானே குருவாக எழுந்தருளி இருக்கிறார் என்பதில் சந்தேகம்

8. குரு ஸமர்ப்பணத்தில் லோபமான எண்ணம்

9. குருவின் கட்டளையை உலகுக்கு பயந்து செய்யாமல் இருத்தல்

10. பிறர் பார்க்கிறார்களே என்று குருவுக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்படுதல்

11. குருவை நீண்ட நாட்கள் பார்க்காது இருத்தல்

12. குருபாதுகை தான் கிடைத்து விட்டதே இனி ஸ்தூலமாக குரு எதற்கு என்ற எண்னம்

13. குருவிடம் இன்ன பலன் பெறுவதற்கு இன்ன மந்த்ரங்கள் கொடுங்கள் என்று கேட்பது. இந்த மந்த்ரம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரிடம் கூறுதல்

14. எனக்கு ஒரு விதமாகவும் அவனுக்கு ஒருவிதமாகவும் கொடுத்தீர்களே என்று குருவிடம் கேட்டல்; மந்த்ரம் இவ்வளவு சின்னது தானா? என்று கேட்டல்

15. வேறு சிஷ்யர்கள் குருவிடம் நெருங்கி பழகுதல் கண்டும், அவர்களுக்கு குரு செய்யும் அதிக சலுகைகள், உபசாரங்களைக் கண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அஸூயை(பொறாமை) கொள்ளுதல்

16. பிறர் குருவிடம் பேசும் போது அது என்ன என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தல்

17. எல்லா மந்த்ரங்களும் உபதேசம் பெற்றாகி விட்டது; இனி என்ன பயம் என்ற எண்ணம்

18. (குரு உறவினரக இருப்பின்) உபதேசம் செய்து கொண்ட பின்னரும் உறவு கொண்டாடுதல்

19. உபாஸனைகள் பல இருக்கும் போது, தான் செய்வதே சிறந்தது அல்லது முக்யமானது எனக் கூறிக் கொள்ளல்

20. தான் இதை இவ்வாறு செய்து முடித்தேன் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளுதல்

21. வாழ்கை நடத்த வேண்டிய பணம் இல்லாத நபர்களையும், உபாஸனைக்கு பணம் செலவழிக்க முடியாதவர்களையும் கேலி செய்தல்

22. தன் அனுபவங்களை குருவிடம் கூறாமல் பிறரிடம் கூறுதல்

23. மந்த்ர சாஸ்த்ர ரஹஸ்யங்களை ப்ரஸித்தமாக வெளியே பேசுதல்

24 அங்க ஹீனர்களை கேலி செய்தல்

25 ஸ்த்ரீகளை தூஷித்தல், துன்பம் உண்டாக்குதல் - மரியாதையின்றி அடி என்று அழைத்தல்

26 ஸ்த்ரீகளை அடிமையாக நினைத்தல் கேலியாக பேசி சிரித்தல்

27. எல்லா ஸ்த்ரீகளும் தேவியின் வடிவங்களே என்ற அடிப்படை உண்மையை நம்பாமை

28. நான்தான் குருவிற்கு அத்யந்தம், ப்ரியமானவன் என்று கூறல்


பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்


முத்தி தரும்வேத மொழியாம் புலம்பல்சொல்ல

அத்தி முகவன் தன் அருள்பெறுவதெக் காலம். 1

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம். 2

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து

தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம். 3

தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு

வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம். 4

ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல்

மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். 5

மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்

காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம். 6

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு

மாயா அனுபூதி வந்தடுப்ப தெக்காலம். 7

சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து

பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம். 8

பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத்

தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம். 9

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி

மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம். 10

பெண்ணினல்லா ராசைப் பிரமையினை விட்டொழிந்து

கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம். 11

வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குல் பைதனிலே

தட்டுண்டு நிற்கை தவிர்வதுவு மெக்காலம். 12

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்

தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம். 13

தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே

சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம். 14

மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல்

தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். 15

பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்

ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம். 16

உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்

புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். 17

வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும்

வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம். 18

பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம். 19

ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். 20

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்

கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம். 21

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்

செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். 22

ஒழிந்தகருத் தினைவைத் துள்ளெழும்புவெள் ளெலும்பாய்க்

கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். 23

அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து

கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம். 24

கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்

உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம். 25

தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள் முன்சூழ்ந்தாற்போல்

மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம். 26

தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல்

ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம். 27

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற

வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். 28

அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்

சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். 29

அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்

தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம். 30

பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக்

குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம். 31

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். 32

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே

ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம். 33

மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். 34

இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே

மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம். 35

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற்

பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம். 36

செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே

சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். 37

கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும்

வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம். 38

ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து

போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம். 39

நவசூத் திரவீட்டை நானென் றலையாமல்

சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். 40

மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக்

கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். 41

இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த

பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம். 42

உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே

அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம். 44

சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு

பாதைதனைக் கழித்துப் பயனடைவ தெக்காலம். 45

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டதுபோல்

பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்காலம். 46

சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்

ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம். 47

தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல்

உடக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம். 48

ஆசைவலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசைமணி தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம். 49

கூறறிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத

பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம். 50

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்

எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம். 51

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 52

பருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்

தெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம். 53

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து

குருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம். 54

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி

யம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம். 55

பற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்

சுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம். 56

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்

சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம். 57

மருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்

உருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம். 58

தன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்

என்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம். 59

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்

தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம். 60

எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்

கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம். 61

கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்

சொன்னபரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம். 62

ஆக மிகவுருக வன்புருக யென்புருகப்

போக வநுபூதி பொருந்துவது மெக்காலம். 63

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்

பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம். 64

அன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்

துன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம். 65

கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்

அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம். 66

தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்

பொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம். 67

ஆதார மூலத் தடியில் கணபதியைப்

பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம். 68

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்

கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம். 69

அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவதெக்காலம். 70

மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம். 71

வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்

தோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம். 72

வட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக்

கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம். 73

உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம். 74

பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந்தானாகி

வேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம். 75

கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்

சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம். 76

கள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங்

குள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம். 77

அட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே

பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம். 78

அறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம்

பிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம். 79

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்

பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம். 80

தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல்

ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம். 81

புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி

யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம். 82

நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள்

கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம். 83

நானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி

தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம். 84

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே

தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம். 85

ஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை

வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம். 86

இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு

சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம். 87

அமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங்

கிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம். 88

கூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்

மாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம். 89

ஊனிறைந்த காயமுயிரிழந்து போகுமுன்னம்

நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம். 90

கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த

சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம். 91

தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்

நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம். 92

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்

தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம். 93

காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்

வாசி தனிலேறி வருவதினி யெக்காலம். 94

ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச்

சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம். 95

இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில்

தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம். 96

மூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில்

பாலைஇறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம். 97

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல

ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம். 98

பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில்

சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம். 99

மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று

நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம். 100

ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்

தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம். 101

அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு

மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம். 102

வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று

சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம். 103

மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி

நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம். 104

எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்

கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம். 105

என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும்

தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம். 106

ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை

வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம். 107

ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன்

காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம். 108

மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை

நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம். 109

முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால்

உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம். 110

கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்

விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம். 111

கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க

நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம். 112

ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும்

பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம். 113

நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை

முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம். 114

முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்

அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம். 115

சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை

நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம். 116

வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும்

யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம். 117

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே

அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம். 118

அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற

குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம். 119

நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந்

தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம். 120

என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு

தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம். 121

ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல்

வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம். 122

ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து

வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம். 123

காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல்

பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம். 124

பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச்

செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம். 125

ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்

கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம். 126

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம். 127

சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற்

றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம். 128

ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். 129

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்

புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம். 130

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 131

தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை

வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம். 132

பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை

ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம். 133

ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று

பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம். 134

காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம்

பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம். 135

ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின்

நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம். 136

குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்

பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம். 137

மத்தடுத்து நின்று மருளாடு வார்போல

பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம். 138

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்

வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம். 139

என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின்

தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம். 140

உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக்

கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம். 141

வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல்

பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம். 142

பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல்

பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம். 143

நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய்

ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம். 144

பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்

காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம். 145

பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல்

நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம். 146

காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே

ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம். 147

உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி

இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம். 148

வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து

நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம். 149

பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல்

விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம். 150

அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்

கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம். 151

ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே

எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம். 152

பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு

நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம். 153

ஆசார நேய அனுட்டானமும் மறந்து

பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம். 154

பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே

அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம். 155

ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை

ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம். 156

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்

சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம். 157

அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த

சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம். 158

இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல

முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம். 159

ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந்

தானாகி நின்ற தனையறியவ தெக்காலம். 160

என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க

உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம். 161

இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச்

சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம். 162

மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம். 163

என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த

உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம். 164

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்

நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம். 165

நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல்

சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம். 166

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து

மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம். 167

கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல்

வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம். 168

கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல்

உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம். 169

அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல்

கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம். 170

பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல்

உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம். 171

நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற

வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம். 172

சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்

ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம். 173

இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்

கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம். 174

கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க

உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம். 175

வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்

கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம். 176

கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல்

உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம். 177

இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல்

அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம். 178

மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்

என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம். 179

கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல்

கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம். 180

பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை

காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம். 181

செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக

வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம். 182

ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப்

பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம். 183

ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை

நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம். 184

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்

போகா உடலகன்று போவதென்ப தெக்காலம். 185

நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு

வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம். 186

வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை

திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம். 187

எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க்

கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம். 188

உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங்

கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம். 189

ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்

ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம். 190

சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்

சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம். 191

போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்

தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம். 192

நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம். 193

அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்

பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம். 194

நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்

ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம். 195

தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்

பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம். 196

நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்

சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம். 197

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்

திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம். 198

மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்

தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம். 199

பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே

கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம். 200

வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்

கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம். 201

பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி

ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம். 202

அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து

முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம். 203

நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல்

நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம். 204

எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல்

உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம். 205

அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல்

என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம். 206

அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல்

சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம். 207

பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று

மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம். 208

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை

என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம். 209

ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல்

ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம். 210

தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல்

உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம். 211

சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக்

காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம். 212

என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து

தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம். 213

தன்னை மறந்து தலத்து நிலைமறந்து

கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம். 214

என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து

தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம். 215

தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே

உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம். 216

இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல்

துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம். 217

ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்

தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம். 218

முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால்

அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம். 219

கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால்

தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம். 220

தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே

ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம். 221

நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து

தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம். 222

தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி

ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம். 223

உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே

மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம். 224

ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந்

தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம். 225

ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில்

மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம். 226

காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு

மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம். 227

நானாரோ நீயாரோ நன்றாம் பரமான

தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம். 228

எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார்

அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம். 229

உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை

நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம். 230

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்

களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம். 231

என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்

முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம். 232

மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்

காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம் 233

ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து

நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம். 234


 


முதல்வன் முறையீடு


கன்னி வனநாதா - கன்னி வனநாதா

1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா!

2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!
பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா!

3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!
மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா!

4. மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா!
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

5. மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா!
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.

6. மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே:
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே.

7. வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே:
சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே:

8. மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே:
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே.

9. கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே:
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே:

10. மாற்றும் சலவை மறக்கேனே என்குதே:
சோற்றுக் குழியும் இன்னம் தூரேனே என்குதே.
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

11. ஐந்து புலனும் அடங்கேனே என்குதே:
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.

12. காமக் குரோதம் கடக்கேனே என்குதே:
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே

13. அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே:
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே:

14. நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே!
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே.

15. கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே.

16. அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே.

17. நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே.
உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே.

18. குரும்பை முலையும் குடிகெடுப்பேனே என்குதே.
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே.

19. மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே.
ஆதரவும் அற்று இங்கு அரக்காய உருகிறண்டா!

20. கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா!
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

21. புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?

22. கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?

23. பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ?

24.அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ?

25. தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ?

26. நோய்உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ?

27. ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ?

28. பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ?

29. நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாராம் எடுத்தநாள் போதாதோ?

30. காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ?

31.நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ?

32. உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ?
வருத்தம் அறிந்தையிலை! வாவென்று அழைத்தையிலை!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

33. பிறப்பைத் தவிர்த்தயிலை. பின்னாகக் கொண்டையிலை:
இறப்பைத் தவிர்த்தையிலை. என்னென்று கேட்டையிலை.

34. பாசம் எரித்தையிலை: பரதவிப்பைத் தீர்த்தையிலை:
பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை:

35. அடிமை என்று சொன்னையிலை: அக்கமணி சந்தையிலை:
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை:

36. உன்னில் அழைத்தயிலை: ஒன்றாகிக் கொண்டையிலை:
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை:

37. ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை.

38. நாமம் தரித்தையிலை: நான் ஒழிய நின்றையிலை:
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை:

39. முத்தி அளித்தையிலை: மோனம் கொடுத்தையிலை:
சித்தி அளித்தையிலை: சீராட்டிக் கொண்டையிலை.

40. தவிப்பைத் தவிர்த்தையிலை: தானாக்கிக் கொண்டையிலை:
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை.

41. நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை:
துன்றங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை:

42. கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை:
நிட்டையிலே நில் என்று நீ நிறுத்திக் கொண்டையிலை.
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா)

43. கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா!
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா!

44. காதல் தணியேனா! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ!

45. உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ!
பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேலேனா!

46. ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ!
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ!

47. வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ!
சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ!

48. இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ!
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ!

49. ஆனை உரிபோர்த்த அழுகுதனைப் பாரேனோ!
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ!

50. மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ!
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனா!

51. கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டார் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!

52. அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!

53. செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!

54. முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!

55. மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!

56. கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான் சடையில் பூண்ட விதம் பாரேனோ!

57. சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!

58. கொக்கிற்கு சூடிநின்று கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!

59. தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!

60. வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ!

61. அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!

62. சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! கன்னி வனநாதா!)

63. கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!

64. நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?

65. வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?

66. வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?

67. ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம் அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?

68. என்னென்று சொல்லுவண்டோ? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கன்னி வனநாதா!-கன்னி வனநாதா!)

69. அன்ன விசாரமது அற்ற  இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?

70. உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?

71. ஒப்புவமை பற்றொடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?

72. வாக்கு மனாதீத வகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!



புண்ணாக்குச் சித்தர்

புண்ணாக்குச் சித்தர்


இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின் சீடரான இவர், கன்னடத்துக்காரர் எனப் போகர் குறிப்பிடுகின்றார். ஓர் ஆத்தி மரமே இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர வைணவ பக்தர் என்றும் கூறுவர். இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான். தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி மரத்திலேயே சமாதியானதாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் வந்ததற்கான காரணம் புலப்படவில்லை. இவரது பாடல்கள் ஞானம்மா என்பவரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை. இவர் இப்படி முன்னிறுத்திய ஞானம்மா யாரென்பதைத் தம் முதல் பாட்டிலேயே தெரிவிக்கின்றார். ‘தேவி மனோன்மணியாள் திருப்பாதங் காணவென்று தவித்திருந்தேனே’ என்று கூறுவதன் மூலம் மனோண்மணியம்மையை இவர் ஞானம்மா என்று குறிப்பிடுவது புலனாகிறது. அஞ்ஞானத்தைக் கடந்து அறிவை மிகச் செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டு கொண்டால் அதுதான் விலையில்லாத ரத்தினமாகும் என்று கூறுகின்றார். ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்றும், ‘ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி’ என்றும் கூறும் சித்தர் வாக்கியத்தை, “காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஞானம்மா ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு இப்பாடல் ‘கசமாலம்’ என்ற சென்னைத் தமிழ் வழங்குவதிலிருந்து இவர் சென்னைப் பகுதியில் நடமாடிய பிற்காலச் சித்தராய் இருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக் கீசரிலும் இவர் மாறுபட்ட வேறு சித்தராய் இருத்தல் வேண்டும். 20 கண்ணிகள் ஒரு பாடலும், 45 பாடல்களில் ஒரு முப்பூச் சுண்ணச் செயநீர் பாடலும் இவர் இயற்றியதாகக் காணப்படுகிறது. ஆயினும், இரண்டின் நடையையும் ஒப்புநோக்கக் கால வேறுபாடு தெள்ளெனப் புலப்படும். ஆகவே, முப்பூச் சுண்ணச் செயநீர் பாடிய புண்ணாக்குச் சித்தரும், மனோன்மணியாளைப் பாடிய புண்ணாக்குச் சித்தரும் வேறு வேறானவர் என்பது ஏற்பதற்குரியது. இப்பாடல் தொகுதி பிற்காலப் புண்ணாக்குச் சித்தருடையது.

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே. 1

அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி. 4

தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார். 5

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம். 6

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே. 7

நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே. 8

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள். 9

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி. 10

பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி. 11

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி. 12

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி. 13

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே. 14

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி. 15

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே. 16

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி. 17

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன. 18

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு. 19

அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே. 20

வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்

குறவஞ்சிப்பா

ஆதிபெருஞ் சோதிதனை அனுதினமும் நாடி
ஐயர்பதந் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியெனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.                                                     1

ஆங்காரம் தனையடக்கி அருள்நிலையை நோக்கி
அரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி
பாங்காகப் பெரியோர்கள் பாதமதுபணிவோம்
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம்.                                     2

பேய்க்குணத்தைச் சுட்டல்லவோ பிரமநிலை கண்டோம்
பிரமபதி தான்கடந்து சுழிமுனையுள் கொண்டோம்
நாய்போலே அலையாமல் நாமிருந்தோம் தவசில்
நல்லதொரு ஆங்காரம் அடக்கிமிகப் பவுசாய்.                                              3

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்
பஞ்சமா பாதகரை ஒருநாளும் பாரோம்
பாவவினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம்.                               4

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
ஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி
தாயிஉமை மனோன்மணியாள் எனக்கு சொன்னசித்தைத்
தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே.                         5

நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்துஉருகி வாடி
நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமுந் தேடி
கலைஅறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனேபடித்தோம்.                                     6

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம்                                  7

தந்தைதாயார் சுற்றமொடு தளர்ந்துஉற வாடோம்
தவநிலையைப் பெற்றுணராச் செய்கையைத் தேடோம்
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம்
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம்.                                    8

நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம்
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம்
வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம்
வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம்.                   9

சக்திசக்ர பீடமேறிச் சுத்தவெளியைக் கண்டோம்
சகலமும்பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம்
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம்
சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம்.                                 10

தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்களைக் கொண்டோம்
தய்யபர வெளிதனிலே அய்யர்பதம் கண்டோம்
விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டேன் யானே
மேலான பரவெளியின் ஒளிவைக்கண்டுதானே.                                      11

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.                                         12

சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே.                                                       1

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே.                                                2

முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய்.                                  3

அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து
மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி                      4

நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி                               5

தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி                                        6

தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி.                          7

பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி.                                                    8

துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி.                                              9

வஞ்சகம்பொய் சூதுகொலை மானார் மயக்கமெனும்
சஞ்சலதை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி.                                     10

ஆசைப் பெருக்காறதில்வீழாது உன்பந்த
பூசைப் புரியப் புலம்பித் தவிக்கிறண்டி                                                       11

ஊணுறக்கம் இன்பதுன்பத் துஉற்றவினை யைஒழித்துக்
காணுதற்கு எட்டாப்பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி                        12

பஞ்சபூதாதிப் பகுப்புகள்பொய் யென்றுணர்ந்துன்
செஞ்சரணக் கஞ்சம் அதைத் தேடி அலைகிறண்டி                               13

ஆசை ஒழிந்தும் அருள்ஞானம் கண்டு அறிந்தும்
பேசத் தெரியாமல் பேய்போல் அலைகிறண்டி.                                      14

ஆங்காரம் விட்டு அருள்வெளியைக் கண்டு அடுத்து
நீங்காப்பே ரின்ப நிலையறித் தேடுறண்டி?                                              15

சருவம் பிரமம் எனத் தான்தெரியுந் தன்மை
மருமம் கா ணாமல் மயங்கித் திரிக்கிறண்டி.                                         16

ஐங்காயக் கோட்டை அதுமெய்யென்று உன்பாத
பங்கயம்போற் றாமல் பரிதவித்து நிற்குறண்டி.                                    17

பச்சைப்பாண் டத்தைப் போலநாள் இருக்குமென
நிச்சயமாய் எண்ணி நிலைதவறி வாடுறண்டி.                                      18

நீரிற் குமிழியைப்போல் நில்லா உடம்பினைவி
சாரிக்கப் பொய் என்றே தானறிந்து வாடுறண்டி.                                 19

நானென்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத்
தான் என்ற அமிர்மந் தனைஅறிய வேண்டுறண்டி.                             20

யோகந் தெரிந்ததன்றன் னுண்மை யறிவதற்குப்
பாகமுண ராமற் பதறி யலைகுறண்டி.                                                      21

மவுனத்தை உச்சரித்து மந்திரபீ டத்தேறிக்
கெவுன மறிந்து கிலேசம்அதை விட்டேண்டி.                                         22

கற்பஞ்சாப் பிட்டே கனத்தவஞ் செய்ததினால்
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள்                                 23

காயசித்தி யோகசித்தி கண்டதனில் ஒண்டினதால்
மாயசித்தி யாலே மயங்காது இருக்கிறண்டி.                                        24

ஓமென்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும்
தாமென்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி.                                25

பிரணவமும் தானறிந்து பேச்சடங்கி நின்ற
சொருபந் தெரிந்தத் துலக்கத்தில் நிற்குறண்டி.                                   26

நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி.                                                        27

அட்டகரு மம்தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும்
இட்ட மதிற்சற்றும் இல்லாது இருக்குறண்டி.                                           28

நானென்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும்
தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி.                                           29

எட்டாச் சுழிமுனையி லேயிருந்து என்மனதுக்கு
எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி.                                        30

சாகாக்கால் இன்னதெனத் தானறிந்து கொண்டதன் பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.                                           31

மோகாந்த காமெனும் மோகம் தவிர்ந்தன்பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.                                          32

சரியைகிரி யையோகந் தாண்டியபின் ஞான
புரிக்கோட்டைக் குள்ளே புகுந்து திரிகுறண்டி.                                     33

மந்திரமுந் தந்திரமும் மாய விசர்க்கமெலாம்
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி.                        34

சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னுரு என்று ஓர்ந்தறிந்து கொண்டேண்டி.               35

சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே.                                                       1

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே.                                                2

முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய்.                                  3

அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து
மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி                      4

நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி                               5

தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி                                        6

தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி.                          7

பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி.                                                    8

துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி.                                              9

வஞ்சகம்பொய் சூதுகொலை மானார் மயக்கமெனும்
சஞ்சலதை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி.                                     10

ஆசைப் பெருக்காறதில்வீழாது உன்பந்த
பூசைப் புரியப் புலம்பித் தவிக்கிறண்டி                                                       11

ஊணுறக்கம் இன்பதுன்பத் துஉற்றவினை யைஒழித்துக்
காணுதற்கு எட்டாப்பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி                        12

பஞ்சபூதாதிப் பகுப்புகள்பொய் யென்றுணர்ந்துன்
செஞ்சரணக் கஞ்சம் அதைத் தேடி அலைகிறண்டி                               13

ஆசை ஒழிந்தும் அருள்ஞானம் கண்டு அறிந்தும்
பேசத் தெரியாமல் பேய்போல் அலைகிறண்டி.                                      14

ஆங்காரம் விட்டு அருள்வெளியைக் கண்டு அடுத்து
நீங்காப்பே ரின்ப நிலையறித் தேடுறண்டி?                                              15

சருவம் பிரமம் எனத் தான்தெரியுந் தன்மை
மருமம் கா ணாமல் மயங்கித் திரிக்கிறண்டி.                                         16

ஐங்காயக் கோட்டை அதுமெய்யென்று உன்பாத
பங்கயம்போற் றாமல் பரிதவித்து நிற்குறண்டி.                                    17

பச்சைப்பாண் டத்தைப் போலநாள் இருக்குமென
நிச்சயமாய் எண்ணி நிலைதவறி வாடுறண்டி.                                      18

நீரிற் குமிழியைப்போல் நில்லா உடம்பினைவி
சாரிக்கப் பொய் என்றே தானறிந்து வாடுறண்டி.                                 19

நானென்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத்
தான் என்ற அமிர்மந் தனைஅறிய வேண்டுறண்டி.                             20

யோகந் தெரிந்ததன்றன் னுண்மை யறிவதற்குப்
பாகமுண ராமற் பதறி யலைகுறண்டி.                                                      21

மவுனத்தை உச்சரித்து மந்திரபீ டத்தேறிக்
கெவுன மறிந்து கிலேசம்அதை விட்டேண்டி.                                         22

கற்பஞ்சாப் பிட்டே கனத்தவஞ் செய்ததினால்
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள்                                 23

காயசித்தி யோகசித்தி கண்டதனில் ஒண்டினதால்
மாயசித்தி யாலே மயங்காது இருக்கிறண்டி.                                        24

ஓமென்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும்
தாமென்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி.                                25

பிரணவமும் தானறிந்து பேச்சடங்கி நின்ற
சொருபந் தெரிந்தத் துலக்கத்தில் நிற்குறண்டி.                                   26

நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி.                                                        27

அட்டகரு மம்தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும்
இட்ட மதிற்சற்றும் இல்லாது இருக்குறண்டி.                                           28

நானென்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும்
தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி.                                           29

எட்டாச் சுழிமுனையி லேயிருந்து என்மனதுக்கு
எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி.                                        30

சாகாக்கால் இன்னதெனத் தானறிந்து கொண்டதன் பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.                                           31

மோகாந்த காமெனும் மோகம் தவிர்ந்தன்பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.                                          32

சரியைகிரி யையோகந் தாண்டியபின் ஞான
புரிக்கோட்டைக் குள்ளே புகுந்து திரிகுறண்டி.                                     33

மந்திரமுந் தந்திரமும் மாய விசர்க்கமெலாம்
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி.                        34

சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னுரு என்று ஓர்ந்தறிந்து கொண்டேண்டி.               35

சதோத நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்


அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியைக் கண்டறிந்து கொண்டேன்,
கவலையை விட்டேன் என்று தாமறிந்த இன்பத்தைப் பாடலாக வடித்துள்ளார்.

கண்ணிகள்

அக்கரங்கள் தோன்ற அருள்கொடுக்கும் பூரணிஎன்
பக்கம் இருந்து பலகலையும் சொல்வாளே. 1

வாலை அபிராமி மாரிதிரி சூலிஅருட்
பாலை எனக்கருளும் பார்வதியின் தாள்போற்றி 2

அம்பிகையால் சோதரி என்னாத்தாள் திருப்பாதம்
கும்பிட்டு ஞானக் குயிற்கண்ணி கூறுவனே. 3

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே. 4

இயம்பும் இடைகலைக்கும் இன்பதாம் பிங்கலைக்கும்
சுயமாம் சுழிமுனையுந் தோற்றுமடி மாங்குயிலே. 5

ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே. 6

அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே. 7

சூரியனும் சந்திரனும் தோன்றும் இடைநின்றே
பூரித்து னந்த போகமுற்றேன் மாங்குயிலே. 8

ஊமையெழுத் தாலேதான் ஓங்கார மாகினதைச்
சீமையிலுள் ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே. 9

முப்பாழும் தாண்டி முடிவின் இடந்தாண்டி
அப்பாழும் தாண்டின் அறிவுளதோ மாங்குயிலே. 10

அட்டாங்க யோக மறிந்து தெரிந்தபின்பு
வெட்டவெளி யுண்மை விளங்குமே மாங்குயிலே 11

ஆறாதா ரத்தில் அறிவை மிகச்செலுத்திச்
சீராய்த் தவசிலிருந்து சிக்கறுத்தோம் மாங்குயிலே. 12

துர்க்குணத்தைச் சுட்டறுத்துச் சூட்ம நிலைதெரிந்து
நற்குணத்தோடு எண்டியங்கு நானிருந்தேன் மாங்குயிலே. 13

அல்லலெல்லம் நீக்கி அறிவைஅறிவால் அறிந்து
வல்லசித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே. 14

ஆனந்தம் பொங்கி அறிவே மயமான
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே. 15

மெய்பொருளைக் கண்டுடனே வேதாந்தவீடடைந்த
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே.16

நாதாந்த உண்மை நடுவறியா மாந்தருக்கு
வேதாந்தப் பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே. 17

நித்திரையும் விட்டு நினைவைஅறிவிற்செலுத்தி
சித்தியெலாம் பெற்றுத் தெளிவுற்றேன் மாங்குயிலே. 18

பேச்சொடுங்கி நின்ற பிரமநிலையைஅறிந்தோர்
ஏச்சுக்கு இடமற்று இருப்பார்காண் மாங்குயிலே. 19

காணாப் பொருளதனைக் கண்டுபிரமானந்தமுற்று
வீணாள் ஒழித்துமுத்தி வீடடைந்தேன் மாங்குயிலே 20

அருள்வெளியி னுட்பொருளை ஆராயமோனக்
குருமொழியை அன்றியில்லை கோதையெனும் மாங்குயிலே 21

அத்துவிதம் தன்னை அதுவதுவாய்க்காண்பதற்குத்
தத்பதத்தைக் காட்டித் தருவாயே மாங்குயிலே. 22

நம்பி உனைப்பணிந்து நாடோறும்பூசிப்பதற்குத்
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே. 23

நிசிபகலென் றெண்ணாது ஞேயஞா னத்தால்
அசிபதத்தை நீயென் றருள்செய்வாய் மாங்குயிலே. 24

நித்தநித்தம் என்னுளத்தில் நீஇருப்பதுஉண்மை எனில்
தத்துவம் சிற்பொருளைத் தந்தருள்செய் மாங்குயிலே. 25

சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால்உதித்த
வத்துவெலாஞ் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே. 26

தேறாப் பொருள் அனைத்துந் தேறித்தெளிவதற்கு
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே. 27

அசரசரத்தின் உற்ற அண்டபிண்டம் பல்லுயிரும்
நசிதம் எனக் கண்டறிந்து நின்றேன் நான் மாங்குயிலே. 28

பாசபந்தம் விட்டுப் பரகதிஎன் றேயிருந்தால்
பேசஒண்ணாப் பிரமம் பிறக்குமே மாங்குயிலே. 29

அந்தக்கர ணத்தை அடக்கிப் பரவெளியைச்
சொந்தமென நம்பித் துதிப்பாய்நீ மாங்குயிலே. 30

சுத்தப் பிர மத்தின் தொடர்புவழி யேகாணில்
முத்தியைத் தேட முழிப்பாயோ மாங்குயிலே. 31

எக்கனியை யும்பரித்து ஏக்கமறச் சாப்பிடலாம்
கைகனியே பிரமமெனக் கண்டுதேர் மாங்குயிலே. 32

துர்க்கந்தத் தால் எடுத்த தூலமிது பொய்யென நீ
நற்கந்த மானசுக ஞானம் அறி மாங்குயிலே. 33

வெட்டவெளியதனில் மெய்ப்பொருளைக் கண்டபின்பு
பட்டப் பகற்தீபப் பார்வையேன் மாங்குயிலே? 34

எங்கும் நிறைத்துநின்ற ஏகபர வத்துவினை
அங்கைநெல் லிக்கனிபோல் யானறிந்தேன் மாங்குயிலே. 35

சத்தாகிச் சித்தாகித் தாபரமுந் தானாகி
வித்தாகி வந்த விதம்தெரிவாய் மாங்குயிலே. 36

அருவாய் உருவாகி அண்டர் அண்டந்தானாய்க்
கருவாகி வந்த கணக்கறிவாய் மாங்குயிலே. 37

ஆதிசகத் தென்றும் அனாதி மகத்தென்றும்
சோதிச் சுயவடிவாய்த் தோன்றுமே மாங்குயிலே. 38

பார்க்குள் ஆகாயமதைப் பார்த்துப்பார்த்து எல்லைகண்டு
யார்க்கும் சொல்எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே. 39

அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியைக்
கண்டறிந்து கொண்டேன் கவலைவிட்டேன் மாங்குயிலே. 40

அணுவுக்கு அணுவாய் அருட்சோதி என்றகுரு
மணியாய் விளங்கும் மகிமைஅறி மாங்குயிலே. 41

பற்றற்று நின்றே பரவெளியைக் கண்டேன்நான்
வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே. 42

சங்கிலிச் சித்தர் பாடல்

கும்மி

மூலக்க ணேசன் அடிபோற்றி எங்கும்
முச்சுட ராகிய சிற்பரத்தில்
வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை
மனத்திற் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே.               1

எங்கள் குருவாம் திருமூலர் பாதம்
எப்போதும் போற்றித் துதித்தோன்
சங்கைகள் அற்றமா சித்தர்கு ழாங்களின்
தாளைப் பணிவாய் ஆனந்தப் பெண்ணே.                   2

ஓங்கார வட்டம் உடலாச்சு பின்னும்
ஊமை எழுத்தே உயிராச்சு
ரீங்காரம் ஸ்ரீங்கார மான வகையதை
நீதா னறிவாய் ஆனந்தப் பெண்ணே                               3

அகாரம் உகாரத் துடன்பொருந்த அது
யகார மானது அறிந்துகொண்டு
சிகார மான தெளிவினி லேநின்று
தேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே                  4

பஞ்ச பூ தங்களைக் கண்டறிந்தோர் இகப்
பற்றினைச் சற்றும் நினைப்பாரோ
சஞ்சலம் இல்லாது யோக வழியதைத்
தானறிந்துய்வாயா ஆனந்தப் பெண்ணே                   5

தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே.                    6

வாசி நிலையை அறிந்துகொண்டால் தவம்
வாச்சுது என்றே மனது கந்து
தேசி எனும்பரி மீதேறி நாட்டம்
செய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே.                   7

நந்தி கொலுவைத் தெரிந்தோர்கள் வாசி
நாட்டம் விடார்கள் ஒருக்காலும்
உந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை
உற்றறிந் துய்வாய் ஆனந்தப் பெண்ணே.                   8

மாலுந் திருவும் வசித்திருக்கும் இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே.               9

எந்தெந்தப் பூசை புரிந்தாலும் பரம்
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும்
சிந்தையும் அடங்கு உபாயம் சதாசிவன்
சீர்பாதம் அல்லோவா ஆனந்தப் பெண்ணே.             10

தானே தானாக நிறைந்து நின்ற சிவ
தற்பரம் ஆகிய உற்பணத்தை
நானே நான் என்று அறிந் துக்கொண்டு பர
நாட்டம் அறிவாய் ஆனந்தப் பெண்ணே.                   11

வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே.                           12

சரியை கிரியை கடந்தாலும் யோகம்
சாதித்து நின்றருள் பெற்றாலும்
உரிய ஞானவி சர்க்கம் இலாவிடில்
ஒன்றும் பயனின்று ஆனந்தப் பெண்ணே.                 13

தன்னைஇன் னானெனத் தான்தெரிந்தால் பின்னும்
தற்பர னைப் பார்க்க வேணுமோதான்
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்
அறிந்தவன் ஞானி ஆனந்தப் பெண்ணே.                   14

எண்சாண் உடம்பும் இதுதாண்டி எழில்
ஏற்கும் நவவாசல் உள்ளதடி
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டுத்
தலங்கள் தோணும் ஆனந்தப் பெண்ணே.                  15

அஞ்சுபேர் கூடி அரசாள ஒரு
ஆனந்தக் கட்டடங்கட்டி வைத்த
செஞ்சிக் கோட்டையைக் கண்டிதுதானெனத்
தெரிந்துக் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே.           16

ஊத்தைச் சடலம் இதுதாண்டி நீ
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி
பீத்தத் துருத்தி இதுதாண்டி நன்றாய்ப்
பேணித் தெளிவாய் ஆனந்தப் பெண்ணே.                 17

ஆத்தாள் எந்தனைப் பெற்றுவிட்டாள் என்தன்
ஆப்பனும் என்னை வளர்த்துவிட்டார்
வேத்தாள் என்று நினையாமல் இதன்
விபரங் கேட்பாய் ஆனந்தப் பெண்ணே.                        18

இந்தச் சடலம் பெரிதென எண்ணியான்
இருந்து வீண்காலந் தான்கழித்துச்
சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில்
சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே.            19

மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண் னோடுபின்
மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்தப் பெண்ணே.                    20

எல்லா பொருள்களும் எங்கிருந்து வந்த
என்றுநான் உற்றிதைப் பார்க்கையிலே
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்றுபின்
நன்றாய்த் தோணுதே ஆனந்தப் பெண்ணே                 21

செத்தபின் கொண்டே சமாதிசெய்து அப்பால்
சிலநாள்கள் கழித்தந்த மண்ணெடுத்து
உய்த்தோர் பாண்டம் ஆகச் சுட்டுப்பின்
உலகோர்க்குதவு ஆனந்தப் பெண்ணே.                        22

சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதைச்
சற்று நிதானித்துப் பார்க்கையிலே
பகவான் அங்கங்குஎள் ளெண்ணெய்யைப் போலவே
பற்றி இருப்பார் ஆனந்தப் பெண்ணே.                          23

மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் பார்த்து
வைத்த பொருளும் அழிந்துவிடும்
கண்ணினில் காண்பது அழிந்து விடுமென்று
கண்டறிந்து கொள் ஆனந்தப் பெண்ணே.                  24

பெற்ற தாய் தந்தை சதமாமோ? உடல்
பிறப்புச் சுற்றஞ் சதமாமோ?
மற்றுஉள் ளோர்கள் சதமாமோ கொண்ட
மனைவி சதமாமோவாய் ஆனந்தப் பெண்ணே.     25

யாரார் இருந்துஞ் சதமலவே நம
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது
ஊரார் ஒருவர் சதமிலை என்பதை
உற்றுநீ காண்பாய் ஆனந்தப் பெண்ணே.                  26

இந்த வழியைத் தெரிந்துகொண்டே இவ்
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே
சொந்தம தாகஎன் பாட்டன் போகரிஷி
சொல்லை அறிவாய் ஆனந்தப் பெண்ணே.               27

வழி தெரியாது அலைந்தோர்கள் இந்த
மாநிலந் தன்னில் கோடானகோடி
சுழிமுனை தன்னைத்தெரிந்து கொண்டால்பின்
சுகவழி கண்டோர் ஆனந்தப் பெண்ணே.                    28

ஆசைஒ ழிந்தருள் ஞானம்கண்டு வீண்
ஆண்மையைத் தான்சுட் டறுத்து த்தள்ளி
பாசத்தை விட்டுநீ யோகத்தைச் செய்திந்தப்
பாரினில் வாழ்வாய் ஆனந்தப் பெண்ணே.               29

இரவைப் பகலாய் இருத்தித் தெரிந்து நீ
ஏக வெளியையும் கண்டறிந்த
விரைவாய் இந்த விதத்தெரிந்தால் இம்
மேதினி போற்றும் ஆனந்தப் பெண்ணே                   30

பெற்றதாய் தந்தை இருந்தால் என் கொண்ட
பெண்டீர் பிள்ளை இருந்தால் என்
நற்தவஞ் செய்யாது இருக்கில் நமனுக்கு
நாம்சொந்தம் காண்பாய் ஆனந்தப் பெண்ணே. 31

தீர்த்தம் ஆடிக் குளித்தாலும் பல
தேவா லயம் சுற்றி வந்தாலும்
மூர்த்தி தரிசனஞ் செய்தாலும் நாலாம்
மோனம் உண் டோசொல் ஆனந்தப் பெண்ணே. 32

காடு மலைகள் அலைந்தாலும்
கன்மானுட் டானம் புரிந்தாலும்
ஓடுஞ்சித் தத்தை நிறுத்தார்க்குப் பர
உற்பனம் வாய்க்காது ஆனந்தப் பெண்ணே.          33

மாயா உலக மயக்கத்தையும் நல்ல
வஞ்சியர் மீதுற்ற மோகத்தையும்
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு
சேருவது இல்லை ஆனந்தப் பெண்ணே.                   34

நாலாவகைக் கலைகள் அறிந்தாலும்
ஞான வழிகள் தெரிந்தாலும்
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா
வீடுறு வார்கள் ஆனந்தப் பெண்ணே.                       35

சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு நற்
தவயோகஞ் செய்துஅங்கு இருக்கையிலே
சங்கிலிச் சித்தனென்று என்பாட்டன் வந்து
சாற்றைத்தெரியும் ஆனந்தப் பெண்ணே.              36

சட்டை முனி முன் ஞானம்

கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார் முன் ஞானம் நூறு பாடல்

‘பொங்குகின்ற காமம் என்ன? சிவத்தின் கூறு!
பொல்லாத ஆசை என்ன? மாலின் கூறு!
மயங்குகின்ற மோகம் என்ன? மகேசன் கூறு!’

இவ்வாறு ஆராய்கிற இந்தச் சித்தர் முன் ஞானம் நூறு பின் ஞானம்
நூறு என இருநூறு பாடல்கள் இயற்றி இருக்கிறார். இவர் நவநாதர்களில்
ஒருவராகத் தம்மைக் குறிப்பிட்டிருக்கிறார்.

1:

அகண்டபரி பூரணமாம் உமையாள் பாதம்
அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்றுநின்ற கணேசனொடு நாதாள் பாதம்
புகழ்பெரிய வாக்குடைய வாணி பாதம்
நிகன்றெனவே யெனையாண்ட குருவின் பாதம்
நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்றெனையீன் றெடுத்தசின் மயத்தின் பாதம்
மூவுலகு மெச்சுதற்குக் காப்புத் தானே.

2:

தாங்கிநின்ற சரியையிலே நின்றுசடம் வீழில்
தப்பாது கிரியையுள்ளே சாரப் பண்ணும்
வாங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
மகத்தான வுடலெடுத்து யோகம் பண்ணும்
ஓங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
உத்தமனே! உயர்ந்துநின்ற ஞானந் தோற்றும்
பாங்கில்நின்ற அச்சென்மம் மவுன முத்தி
பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்து கொள்ளே.

3:

அறிந்திருந்த நான்குக்கும் விக்கின முண்டாம்
அப்பனே! ஆகாயமியஞ் சித்தி னோடே
மறிந்துநின்ற பிராரத்தந் தோயத் தோடு
மகத்தான நாலுக்கும் விக்கின மாச்சு;
பிரிந்துநின்ற நாலினாற் செய்வதென்ன?
பேரான வறுமையொடு கிலேசந் துக்கஞ்
செறிந்துநின்ற பெண்பொன்னால் மண்ணினாலே
சேத்துமத்தி லீப்போலத் தியங்கு வாரே.

4:

தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சகத்தி னுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினா ருலகத்திற் கோடி பேர்கள்;
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு;
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு;
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே.

5:

பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ?
பரந்தமனஞ் செவ்வையாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயோ!
காழான வுலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதென்றால் மூலம் பாரே.

6:

மூலமதி லாறுதலங் கீழே தள்ளி
முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக்
கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக்
கொடியதொரு ஞானசக்திக் குள்ளே மைந்தா!
பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப்
பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்
காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங்
கைவிட்ட சூத்திரம்போல் சடமு மோங்கே.

7:

ஓங்கார முதற்கொண்டைந் தெழுத்தோ டாறும்
உற்றுநின்ற பஞ்சகர்த்தா ளிருந்தி டாறும்
ஆங்கார மாணவம்நா னெனலும் போனால்
அப்பவலோ அகாரமுத லுகாரங் காணும்
பாங்கான மகாரமொடு விந்துநாதம்
பரவியதன் மேல்நிற்கும் பராப ரந்தான்
வாங்கான மவுனத்தைப் பற்றி யேறு
மருவிநின்ற லகிரியைத்தா னொத்துக் காணே.

8:

ஒத்துநின்ற ஓங்காரம் மண்ணை யுண்ணும்
உருவியந்த மண்சென்று சலத்தை யுண்ணும்
பத்திநின்ற சலமதுதான் தீயை யுண்ணும்;
பாங்கான தீச்சென்று காலை யுண்ணும்;
வெத்திநின்ற கால்சென்று விண்ணை யுண்ணும்;
விழுந்ததப்பா சடமென வேதாந்தப் பேச்சு;
முத்திகண்டு கூடுவது மெந்தக் காலம்?
மூடரே மதுவையுண்டு மேல்பா ரீரே.

9:

பாரப்பா அகாரமுத லுகாரங் கொள்ளும்;
பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும்;
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும்;
நேரான விந்துவது நாதம் கொள்ளும்;
சேரப்பா நாதமுற்றுச் சத்தி கொள்ளும்;
சேர்ந்துநின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும்;
ஆரப்பா சிவந்தன்னைப் பரந்தான் கொள்ளும்;
அப்பரத்தைக் கொண்டவிடம் அறிந்தே யுன்னே.

10:

உன்னிநின்ற மூலமுத லாறும் பார்த்தே
உருகிநின்ற சுழுமுனையை யறிந்த பின்பு
மன்னிநின்ற மதிமேல்சாம் பவியைக் கண்டு
மருவிநின்று மனமுறைந்து தேர்ந்த பின்பு,
பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்;
பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்;
கன்னிநின்ற விடங்கண்டா லவனே ஞானி
காட்டுவான் கேசரியைக் காட்டு வானே.

11:

காட்டுவான் கிரியுன்னை மேலே யேற்றிக்
கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக் குள்ளே
மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
ஆட்டுவா ளண்டரண்ட மாலை பூண்டாள்
ஆதிவத்து அனாதிவத்து இரண்டு மொன்றே
ஊட்டுவாள் நிர்க்குணத்தி னமிர்தவல்லி
உயர்ந்துநின்ற ஞானசத்தி யுறவு தானே.

12:

உறவென்னத் தாறைவிட வுறவு முண்டோ?
உலுத்தரையோ வாமத்தைத் தூடிப் பார்கள்
குறைவென்ன திரோதாயி சமயந் தோறுங்
கூடியல்லோ மாயவலை கூட்டி யாட்டி
மறவென்ன ஞானமென்ன மங்கித் தள்ளி
மகத்தான சமுசார வலையிற் போட்டாள்
நிறவென்ன வாமத்தால் ஞான மாச்சு
நின்றவனே சிவயோகி வாசி பாரே.

13:

வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை
மகத்தான சாம்பவிகே சரியும் ரண்டு
தேசி யென்றால் யோகத்துக் காதி வித்தை
திறமான மவுனமென்றால் ஞான வித்தை
மாசியென்ற மனமுடைத்தா லிரண்டு மாகா;
மருவுநின்றே அறிவறிந்தா லிரண்டு மாகும்;
தூசியென்ற வெளியல்லோ அண்ட வீதி
சொக்காமல் கிரிகொண்டே ஆக்கி யேறே.

14:

ஆக்கிநின்ற பரிசத்தால் கொசுவி றந்த
தாச்சரியம் ரூபத்தில் வண்டி றந்த
பாக்கிநின்ற மணியொலியால் மானி றந்த
பாழான வுரிசையினால் மீனி றந்த
தாக்கிநின்ற கெந்தியினா லெறும்பு சென்று
சாதகமாய் மாண்டதிந்த ஐந்தும் பாரு;
பாக்கிநின்ற இந்திரிய விடயத் துள்ளே
பாழான மனஞ்சிக்கிப் படுகு வாரே.

15:

வாரான வுலகத்தில் மனிதர் கோடி
மருவிநின்றே யுண்டுடுத்துச் சையோ கித்துத்
தாரான கசதுரக ரதங்க ளேறிச்
சகலரத்ன பூடணங்கள் தரித்து விம்மி
மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா!
மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை
கூரான சிவபோக ஞானம் வந்தால்
கூடழிந்து போகாது கூடு கூடே.

16:

கூடுவதம் பரமோகே சரமோ வென்னில்
கூர்மையுள்ள வானோவ தீதமோ வென்னில்
ஆடுவதாச் சரியநின் மலமோ வென்னில்
அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில்
பாடுவது பதங்கடந்த பூரணமோ வென்னில்
பகலிரவு மற்றிடமோ பராபரமோ வென்னில்
ஊடுவதெங் கேபின்னை யெங்கு மில்லை
உம்மென்றா லூமவெள்ள மோகங் காணே.

17:

மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி
முசியாம லிடிப்பதற்கைம் பொறியுங் கோல்தான்
பாகமென்ற கோபம் வந்தே யுருவாய் நின்று
பதையாமற் சண்ணிச்சே யுலக மெல்லாந்
தாகமென்ற ஞானம்வந் தென்ன செய்யும்?
சண்டாள இந்திரியச் சார்பி னாலே
வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு
விண்ணுக்கு ளேநிற்க வெளியாய்ப் போமே.

18:

வெளியேது வெளிக்குள்ளே வெளியங் கேது?
வேதாந்த வெளிகடந்த வொளியங் கேது?
அளியேதவ் வளிகடந்த அண்ட மேது?
அப்புறத்தே தோற்றுகின்ற சோதி யேது?
நெளியேது நினைவேதுநிர்க் குணந்தா னேது?
நேரான பூரணத்தின் நாத மேது?
சுழியேது? சுழியடக்குஞ் சூட்ச மேது?
தோற்றுமப்பா வானத்தை யொத்துப் பாரே.

19:

ஒத்துநின்ற சரியையொடு கிரியை ரண்டும்
உறவாதி செய்தவப்பா நன்றாய்க் கேளு;
பத்திநின்ற யோகமுதல் ஞானம் ரண்டும்
பாங்காகச் சித்தருக்கே அடுத்தவாறே
அந்திநின்ற ஆகாம்யசஞ் சிதபிரா ரத்வம்
ஆருக்கு மடுக்குமென்றால் யோக மெய்தி
முத்திநின்ற ஞானத்திற் புகுந்தோர்க் கையா
மூன்றுமிலை பிரபஞ்ச முழுதும் போச்சே.

20:

போச்சென்பர் முக்காலம் பிறகே நின்று
புரிமுருக்குப் போலேறிப் புணர்ந்து கொல்லும்
ஆச்சப்பா காலமென்ன வென்று சொல்லி
அவரவர்கள் சபஞ்செய்வா ரறிந்த மட்டும்;
நீச்சப்பா அகாலவெள்ளம் கடப்பா ரென்றால்
நேரான ஞானியல்லோ கடந்து நின்றார்
மூச்சப்பா அற்றிடத்தைப் பாரு பாரு
மூட்டுவிக்கு முகிடந்தான் ஞானத் தீயே.

21:

தீக்குள்ளே வெந்துநின்ற பற்பம் போலச்
செகசால முதற்கொண்டு காலம் போகும்;
தீக்குள்ளே விழுந்தெழுந்த நெய்யைப் போலச்
சிறப்பான ஞானமது திரண்டே யேறும்;
தீக்குள்ளே காட்டமொடு கோலுங் கூடித்
திரண்டாற்போற் கருவியெல்லாம் கணத்தில் மாளும்;
தீக்குள்ளே பராபரந்தா னிருந்த தாயின்
செகமெல்லாம் வித்தையென்று தெளிந்து போமே.

22:

தெளிந்தவிடங் கண்டாரார் சித்தர் யோகி
செகமெல்லாம் நரனென்பார் திருட்டுஞானம்
ஒளிந்துவிட முனைந்ததால்கே சரிக்குள் நிற்பாள்
உற்றுப்பார் மகாரம்வைத்தே யூகி யூதே
அளிந்தவிடம் நிர்க்குணந்தா னதிலே கேளு;
ஆச்சரிய மகாரமென்ற யுண்ட துண்டு;
களிந்தவிடம் நிராகார மொன்று மில்லைக்
காட்டுந்தா ரறிவுகொண்டே யுற்றுக் காணே.

23:

உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி தலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே.

24:

சமயமெல்லாஞ் சக்தியுண்டு சிவமு முண்டு;
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளி னார்கள்;
சமயமெல்லாம் வேதாந்தசித் தாந்த முண்டு
சாதகத்தைப் பாராமற் றயங்கி னார்கள்;
சமயமெல்லாம் நாதமுண்டு விந்து முண்டு;
காக்காமற் கொட்டார்க ளுலகத் தோர்கள்;
சமயமெல்லாம் அம்பரமாம் ஞான முண்டு
தாயைவிட்ட பாவத்தால் தவறிப் போச்சே.

25:

போச்சப்பா ஆறாறும் பானத் தாலே
புத்தியுள்ளோர் பானத்தாற் கண்டா ரையா!
ஆச்சப்பா வாமமென்ன நிசித மென்பார்
அதன் குணமோ திரோதாயி யனுட்டா னந்தான்!
ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர்
உயர்ந்தவரைக் கண்டவர்பா னத்தா லன்றோ?
காய்ச்சமரம் பட்டதென்ன வேரற் றாற்போல்
கசடரென்ற அறுசமயங் கேட்டே பாங்கே.

26:

பாங்கான குண்டலிக்குள் மூல மொன்று;
பாரப்பா கண்டத்தில் மூல மொன்று
போங்கான புருவமைய மூல மொன்று;
புகழான விந்துவிலே மூல மொன்று
வாங்கான சத்தியிலே மூல மொன்று
மருவிநின்ற பராபரத்தில் மூல மொன்று
தேங்காம லிவையாறுங் கண்ட ஞானி
சேர்ந்துநின்ற மும்மூல யோகி யாமே.

27:

ஆமப்பா நகாரமுதல் யகாரம் நிற்கும்
அவ்வளவும் யோகத்தின் மூல மாச்சு;
தாமப்பா அகாரமுதல் உகாரந் தொட்டுச்
சாதகமாய் மகாரவரை ஞான மூலம்
ஓமப்பா திசைநாத மவுனத்திற் காணும்
உற்றேற வுற்றேற அகண்ட வீதி
காமப்பா லுண்டக்கால் யோக சித்தி
கடுங்கானற் பாலுண்ட ஞான மாச்சே.

28:

ஆச்சிந்த வரிசைவிட்டே யுலக ஆசான்
ஆதிஅந்த மொன்றுரவி மதிதா னென்பான்;
மூச்சற்ற விடங்காட்டத் தெரியா நின்று
முன்னேது பின்னேது சாங்க மென்பான்;
வாச்சிந்த மயக்கத்தா லுலகோர் கேட்டார்
மதுவைவிட்டே றியல்லோசை யத்தோர் கேட்டார்
ஓச்சிந்த விதமறிந்தோன் யோக ஞானி
உம்மென்று ஆகுமென்ற நாத மாமே.

29:

நாதமப்பா யோகத்தி லைந்து நாதம்
நலமான மவுனத்தி லைந்து நாதம்
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம்
வெட்டவெளிக் குள்ளே யொரு நாதமுண்டு
போதமப்பா கடந்திடத்தே யந்த நாதம்
புகழாகச் சேவித்து நிற்கு மென்றும்
காதமப்பா தூரமல்ல அந்தோ அந்தோ!
கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்துகாணே.

30:

விண்ணேது வெளியேது வொளியங் கேது?
விரைந்திந்த மூன்றுங்கே சரிதா னாச்சு;
கண்ணேது காதேது மூக்கங் கேது?
கண்டிப்பாய்க் கண்டவெல்லாம் அழிந்து போச்சே
ஒண்ணிரண் டேதுசம ரசந்தா னேது
உற்றுப்பார் வெட்டவெளி யொன்றுமில்லை;
எண்ணேது நினைவேதிங் கறிவு மேது?
ஏகமாய்க் கலந்துத்தி யிடத்தைக் காணே.

31:

உத்திகொண்டு ஞானநூல் பார்த்துப் பார்த்தே
உலகத்தோர் ஞானமெல்லாம் வந்த தென்று
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணைப் பாரார்
பாழான மனத்தையங்கே நிறுத்த மாட்டார்
முத்திகண்ட விடமெங்கே யென்று காணார்
மூச்சற்று நின்றிடத்தை நோக்கிப் பாரார்
சித்திகண்டால் சித்திகொண்டு செய்ய மாட்டார்
சேர்ந்துமதா யிருக்கறியார் திருடர் தானே.

32:

தானென்ற ஆணவத்தை நீக்க மாட்டார்
சண்டாள கோபத்தைத் தள்ள மாட்டார்
ஊனென்ற சுகபோக மொழிக்க மாட்டார்
உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்
பானென்ற ஞானவெள்ள முண்ண மாட்டார்
பதறாமல் மவுனத்தே யிருக்க மாட்டார்
வானென்ற பொருளென்ன எளிதோ மைந்தா!
மகத்தான மனமடங்க எய்யுங் காணே.

33:

காணிந்த வுலகத்தில் மாயக் கூத்தும்
கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும்
பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும்
புகழான செனனமொடு மானக் கூத்தும்
ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும்
ஆங்காரம் மனம்புத்தி யான கூத்தும்
தோணிந்தப் படிபடைத்த பாமே யையா!
சொற்பெரிய பூரணமே யென்று கூவே.

34:

கூவையிலே யாத்தாளைத் தொழுது கூவக்
குறையாத கருணையினால் திரும்பிப் பார்த்துத்
தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று
சார்வாக எடுத்துப்போ லுன்னை மைந்தா!
தேவையிலே யெடுத்தணைத்தே யுயிரை வைப்பாள்
செகசால மாடுகிற திருட்டுத் தாய்தான்
பாவையிலே மனஞ்சென்று பரவா விட்டால்
பாராது போலிருப்பாள் பாரு பாரே.

35:

பாரப்பா செகமனைத்தும் அண்ட மெல்லாம்
பாங்கான சூழ்ச்சியில்வைத் திருந்த கன்னி
நேரப்பா இவளைவிட்டு யோகம் பார்த்தேன்
நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்
சேரப்பா சுத்தவிழல் மனமோ பேயாம்
செகசாலக் கூத்தைவிட்டுத் தெளிய மாட்டார்
ஆரப்பா அவளை விட்டு ஞானங் கண்டோர்
அலைக்கழிக்கு மாசையென்ற பாம்பு தானே.

36:

பாம்பையல்லோ ஆபரணம் பூண்ட ஈசன்
பரிவாக மதியோடு கொன்றை சூடிப்
பாம்பையல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன்
பாங்கான கரியுரித்த பாணி பாணி
பாம்பையல்லோ கங்கணமாய்த் தரித்துக் கொண்டு
பரியுழுவைத் தோலுடுத்துப் பாதந் தூக்கிப்
பாம்பையல்லோ மனைக்குமோ திரமாய்ப் போட்டு
பாரென்றே அகண்டத்தி லாடி னாரே.

37:

ஆடினதோர் கூத்தெல்லா மாத்தாள் மெச்சி
அண்டையிலே யழைத்தானை யிருத்திக் கொண்டாள்
நாடினதோ ரவளருகி லரனு மெய்வான்
நாமறியோ மவனவளு மொன்றே யொன்றே
ஊடினதோ ரிடமெங்கே? ஒலிகேட் பெங்கே?
ஒன்றாகக் காணுகிற நடன மெங்கே?
கூடினதோ ரகண்டத்தின் சோதி யெங்கே?
கூசாமல் மவுனத்திற் கூடிக் காணே.

38:

காணப்பா மகாரவரை நாத வோசை
கன்னிக்குப் பீடமடா மவுன ஞானம்
ஊணப்பா வூணப்பா நாதத் தோடே
ஒருமுனையா யொருவழியா யொன்றா யோடும்
தோணப்பா தோற்றுவதங் கொன்று மில்லை
சுத்தவெளி ரவிகோடி சூழவன்னி
ஆணப்பா மாகோடி கண்கொள் ளாதே
ஆச்சரிய மதிகமென்ற மகாரங் காணே.

39:

மகாரமல் லோமுந்தி யாசான் சுட்டி
வழிகாட்டு முறைமையது ஞான மார்க்கம்
மகாரமல்லோ அடங்கியந்த நாதந் தாண்டி
மருவிநின்ற இடமல்லோ கேசரி மைந்தா
மகாரமென்ன மெலெழுத்தே யென்பார் மாண்பார்
மாட்டுவதை முன்றெழுத்த தென்று காணார்
மகாரமென்ன மகாரவித்தை யதீத வித்தை
வாய்திறந்து பேசாதே மௌன மாமே.

40:

மௌனவித்தை யாதெனில்மூன் றெழுத்தே யென்பார்
மாட்டுகிற இனங்காணார் மார்க்கங் காணார்
மௌனவித்தை யாவதென் வாய்மூட வென்பார்
மாடுமுதற் குதிரையினா லாவ தென்ன?
மௌனவித்தை கேட்டார்கூட் டுறவு காணார்
வாய்மூடி வழியோடே நாதங் கேளார்
மௌனவித்தை யாசான்றான் தூண்டிக் காட்டில்
மணிமுதலாய்த் திசைநாதங் கேட்குந் தானே.

41:

கேட்கையிலே மதியினிட மமிர்தஞ் சிந்துங்
கெடியான துவாசமுர்தங் கடந்து தோன்றும்
வாழ்க்கையிலே யாசையறும் நினைவும் போகும்
வாரிதிபோ லண்ணாக்கி லமிர்த மோடும்
தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும்
சச்சிதா னந்தவொளி தானே தோன்றும்
மூட்கையிலே மேலமிர்த லகரி மீறும்
மூன்றுகமும் கணமாகு மூட்டிப் பாரே.

42:

மூட்டையிலே யுலககிரி கொண்டு மூட்டு
முதிர்ந்தபின்பு விண்ணுள்கிரி வந்து காக்கும்
கூட்டையிலே மகாரத்தை யறிந்து கூட்டும்
கும்மென்ற நாதத்தில் கூடி யேறும்
மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும்
மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே
ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால்
உத்தமனே யச்சின்ன முத்தி யையா!

43:

ஐயனே! குருவான அகண்ட மூர்த்தி!
அதிதமென்ற ஞானமெல்லாம் அருளிச் செய்தாய்;
மெய்யனே! ஏறுகிற சாதகஞ் சொல்
வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு
துய்யனே! நிலைதோறு மெழுத்தைச் சொல்லு
சொற்பெரிய பிராணாய சூட்சஞ் சொல்லு
தையனே! தையமென்ற நிர்த்தஞ் சொல்லு
சாதகமாய் லட்சயத்தைச் சாற்றி டாயே.

44:

சாற்றிடென்று கேட்டமா ணாக்க னேகேள்;
சந்தோட மாச்சுதிப்போ சார்பு சொல்வேன்;
ஏற்றமென்ற மூலத்தில் வாசி வைத்தே
எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி
ஆற்றுமென்ற குண்டலிக்குள் நடனங் கண்டால்
ஆதித்தன் கோடியைப்போல் காந்தி காணும்
மாற்றுமென்ற கண்டத்தி லங்கென் றூணு
வாய்திறக்க வொட்டாது வழிசெய் வாயே.

45:

வழியோடே நின்றுரைத்துப் பழக்க மாகி
மனோன் மணியாம் புருவமையத் தூடேசென்றே
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்;
உத்தமனே! சாம்பவியைக் கண்டு கொள்வாய்
நெளிவோபோ யிவ்வளவும் யோக மார்க்கம்
நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு;
தெளிவோடே விந்துவென்ற குரு பதத்தில்
தேக்கப்பா மவுனத்தைத் தாரை யாமே.

46:

ஆமப்பா விந்துரவி மதியோர் கூடி
ஆச்சரியங் கண்கூசி மயக்க மாகி
ஓமப்பா நாதத்திற் செவிடு பட்டே
ஊமையென்ற வெழுத்துடைய வுருவங் காணும்
தாமப்பா சத்தியிலே வன்னி யோடு
சதகோடி ரவிமதியு மொவ்வா வொவ்வா
வாமப்பா லுண்டவர்க்கித் தனையுங் காணும்
வாய்பேசா ஞானிக்கு மாயந் தானே.

47:

தானென்ற சிவத்துக்குள் மௌனஞ் சென்றால்
சதகோடி நவகோடி வன்னிரவி சோமன்
பானென்ற பரத்தின்கீழ் முப்பா ழுண்டு
பார்மகனே அகாரமொன் றுகார மொன்று
வானென்ற மகாரமொன்று முப்பா ழாக
வழங்கிற்றே அதனொளியைச் சொல்லப் போகா
தேனென்ற மொழியுடைய னமனாந் தத்தைத்
தேவிபத மென்றகே சரிதான் காணே.

48:

காணிந்தக் கேசரத்தின் தாயின் காந்தி
கண்கொள்ளா விண்கொள்ளா கரையுங் கொள்ளா
ஆணிந்தப் பரையென்பார் அம்பரந்தா னென்பார்
அவளுக்குள் மவுனமுண் டறிவாய் பாராய்
ஊணிந்த மௌனத்தை நிட்களமாய்ப் போவாய்
ஓகோகோ அம்பரத்தி லேதோ வேதோ
தோணிந்தப் படியிருந்தால் லயத்தின் நேர்மை
சொல்லரிதாம் அப்புறத்தே சோதி தானே.

49:

சோதியென்று பராபத்தி லறுவரை யுண்டு
சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லிக் காணோம்
ஆதியென்ற மூலகுரு பேரால் மைந்தா
ஆண் பிள்ளைச் சிங்கமென்ற கொங்க ணர்கேள்
வாதியென்றா லவர்வாதி ஞான வாதி
மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி
பேதியென்றால் மேருப்போ லேயும் பண்ணும்
பெருவாதி ரசவாதி பேருள் ளோனே.

50:

பேருள்ள கொங்கணர்தாம் குளிகை யிட்டுப்
பேரான பூரணத்தி லறுவரை கண்டார்
ஆருள்ளா ருலகத்தில் வரைகுரு சொல்ல
ஆச்சரியஞ் சித்தருக்குக் கீர்த்தி வைத்தார்
நேருள்ள ரிடிகளொடு முனிவ ரையா
நேராகச் சமாதியிலே கண்டோ ருண்டு
தாருள்ள சலத்தோடுஞ் சென்றா ரில்லை
சமர்த்தான மனத்தினிடச் சத்தி தானே.

51:

சத்தியுள்ள வாசனையாங் குரங்கு கேளு
தாண்டியல்லோ இந்திரியக் கொம்புக் குள்ளே
பத்தியுள்ளே யலைத்தடித்துப் பேய்க்கூத் தாக்கிப்
பாங்கான மனத்தையல்லோ சின்னம் பண்ணி
முத்தியுள்ள வாசலுக்கே யேறொட் டாது
முழுமோசச் சனியனப்பா ஞானத் துக்குக்
கொத்தியுள்ள வாசனையை யடக்கிப் பார்த்தால்
குருடனுக்கும் ஞானவழி கூடுங்காணே.

52:

கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி!
குரங்கைவிட்டே அகலுகிற வழியைச் சொல்க;
நாடுவது முலகத்து வாதம் வந்தால்
நன்மனமுண் டானால்சாத் திரத்திற் சொல்வார்
ஊடுவது சாதுசங்கம் வேதாந் தம்பார்
உத்தமனே வாசனையாங் குரங்கு போகும்;
ஆடுவது தொய்தவா சனையி லேற்றும்
அப்படியே யுலகத்தி லனேகம் பேரே.

53:

பேரான வுலகத்தில் ஞான முற்றும்
பேசாம லருகிருந்த விடத்தில் மைந்தா!
வாரான மோதத்தி லிங்க மாகும்
வாதிக்கு மேருவுக்கும் நடுவே கோடி
காரான காமத்தால் பாண்டி லிங்கம்
கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கந்
தாரான மலைதோறும் பூமி தோறுஞ்
சாற்றரிது சாற்றரிது சார்ந்து பாரே.

54:

பாரப்பா சுயம்பில்வந்து பிட்சை யேற்றால்
பலித்ததப்பா ஞானசித்தி மவுன சித்தி;
நேரப்பா வொன்பது பேரிவரு ளாறு
நிகராகப் பெலிகொண்டோர் நீடு மூவர்
காரப்பா விண்ணையென்றால் சாவார் கர்த்தார்
காத்தாலே ஞானசித்தி கலந்து கூடும்;
ஊரப்பா வாதியைப்போல் நீங்கள் கெட்ட
உலுத்தரென்பார் சித்தர்கள்தா முரைத்தி டீரே.

55:

உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்?
உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னா னையன்?
மறைக்கவா சனைலகிரி கொள்ளு மென்றான்
மகத்தான தெட்சணா மூர்த்தி யாசான்
நிறைக்கவல்லோ யோகமுதல் ஞானஞ் சொன்னான்
நிற்கவிட மற்றநிர் மலமாஞ் சோதி
இறைக்கவல்லோ வூறினதோர் கேணி யைப்போல்
எடுக்கெடுக்க வெழும்பும்வா சனைதான் காணே.

56:

எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி;
ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்
எழும்பாமல் கருவிகளை யிருக்கச் சாடி
இருத்தினவன் சிவயோகி வாத யோகி;
எழும்பாம லடிப்பதற்குச் சூட்சஞ் சொல்வேன்;
என் மக்காள்! மவுனத்தே யிருந்தாற் போகும்;
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால்
ஏதுமில்லை சுத்தவெளி யிருளும் போச்சே.

57:

போச்சென்றே இருக்கிறதோர் ஞானத் துக்குப்
புகழான வல்லமைதா னென்ன மைந்தா!
வாச்சென்ற அகண்டத்துள் வரைக ளாறு
மருவினால் சடத்தோடே யவனே சித்தன்;
நீச்சென்ற வரைப்பார்த்து வாரேன் மக்காள்
நில்லுங்கோள் குகையினுள்ளே யென்று சொல்லித்
தோச்சென்ற பூரணத்திற் சொக்கி நின்ற
சுந்தரா னந்தன்வந்து தொழுதிட்டானே.

58:

தொழுதுகொண்டு பதம் பிடித்த அகண்டத் துள்ளே
சொக்குகிறோ மென்றுசொன்ன சுந்தரமே பையா!
விழுதுகொண்ட ஆலைப்போல் நெட்டிட் டேறி
வெளிகடந்தே ஆறுகலங் கண்டு வாரேன்;
முழுதுகண்டா னென்பிள்ளை யென்று கீர்த்தி
மூட்டிவைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா
பழுதுகொண்டு வருகிறேன் திரும்பா விட்டால்
பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே.

59:

பாரப்பா அகண்டவெளி சுத்தக் கானல்
பார்ப்பதற்கோ அங்கொன்று மிடமே யில்லை;
நேரப்பா ரவிகோடி வன்னி கோடி
நேரான மதிகோடி கண்ணோ கூசும்
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி
அதற்குள்ளே செல்லரிது மைந்தா போபோ;
காரப்பா குகையொன்று பட்டங்கட்டிக்
கடுங்குளிகைச் சோடிட்டுக் கலந்திட்டேனே.

60:

கலந்திட்டே னொருவரையில் நாத வோசை
கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கமாச்சு;
சலந்திட்டேன் மறுவரையி லிடியோ கோடி
கண்கெட்டேன் மதிக்கெட்டேன் காதுங் கெட்டேன்;
(,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,)
கலந்திட்டேன் மூவரையிற் காந்திக் குள்ளே
கடுகவந்தேன் கொங்கணரை யழைத்திட் டீரே.

61:

அழையுமென்ற சொற்கேட்டுச் சுந்த ரானந்
தன்கணத்திற் கொங்கணரை யதிசீக் கிரத்தில்
விழைவுடனே யோடிவந்து தெண்ட னிட்டு
விரைவுடனே கொங்கணர்தா னிக்க ணத்தில்
அழையுமென்றா ரெங்களைய ருங்க ளைத்தான்
ஆச்சரியஞ் சொல்லுதற்கே யடியேன் வந்தேன்
அழையுமென்ற சீடனுக்குப் பின்னே வந்தே
அடியேன்தான் வந்ததென்று பணிந்திட் டாரே.

62:

பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து
பராபரமே நிர்க்குணமே பண்புள் ளோனே!
அணிந்திட்ட அறுவரையிற் சொக்கிச் சென்ற
ஆதியென்ற பராபரமே யையா வையா!
மணியிட்ட சிலம்பொலியைக் கேட்ட மூர்த்தி
மார்க்கத்தை யெப்படித்தா னேறி னீரோ
கணியிட்ட நிர்மலா மனத்தி னாலே
கைலாய தேகமென்ன தங்க மாச்சு.

63:

ஆச்சப்பா அப்படியே வரணு மென்றே
ஆசைகொண்டே யிருக்கவழைத் தனுப்பு வித்தீர்;
வாச்சப்பா மனுவொன்ற வடியே னுக்கு
மைந்தன்மேல் கடாட்சத்தால் சொல்லவேணும்
ஓச்சப்பா கொங்கணரே யுபசார மென்ன
ஓங்கினதை யுரைக்கின்றேன் கேளு கேளு;
காச்சப்பா வுலகத்தி லெடுத்த தேகம்
கைலாயச் சட்டையாங் கருவைச் சொல்லே;

64:

கருவென்ன வொன்றுமில்லை மேரு நேரே
காணப்பா வீசானங் கைலா யமாச்சே;
உருவென்ன வெடுத்துகை லாய தேகம்
உத்தமனே நிராகார ஞான சித்தி
குருவென்ன நிர்க்குணத்தின் மவுனத் துள்ளே
குவிந்துரைத்த பெருமையின் கைலாய மாச்சே;
அருவென்ன மகாரவித்தை முட்டிக்கொண்டு
ஆதிவிர்த்த கற்பமது வுண்டு பாரே.

65:

பாரப்பா சூதமுண்டு மவுனந் தாக்கப்
பளிச்சென்ற ஏழுசட்டை பண்ணாய்ப் போதும்
நேரப்பா அச்சடங்கை லாய தேகம்
நிமிடத்தே சித்தியாமுன் னினைவுக் கையா
ஆரப்பா வுனைப்போல நினைத்த பண்ணல்
அரிதரிது கூடாகி மூடர் பேரால்
சேரப்பா சொல்லிவிட் டேனென்ற பேச்சுச்
செப்புமுன்னே கைலாய முற்றுப் பாரே.

66:

உற்றுநின்ற பலநூலைப் பார்த்துப் பார்த்தே
உரையாவே தாந்தசித் தாந்த மென்று
பற்றிநின்ற பரவசத்தா னென்றே உன்னிப்
பாராம லலைந்துகெட்டா ரனந்தங் கோடி:
முற்றிநின்ற விடமெங்கே ஞான மெங்கே?
(. . . . . . . . . . . . . . .)
கொற்றி நின்ற மேல்மூலத் துரிய மெங்கே?
கூடுவார் மெய்ஞ்ஞானக் குரைவி தாமே.

67:

குறைவேது வாசனையாந் தொய்தத் தோடு
கூடவல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும்;
மறைவேது மறையதனின் அந்த மேது?
மறைவற்று நின்றதொரு வெளியங் கேது?
துறையேது துறைக்குள்ளே சோதி யேது?
சூட்டியிருந்த விவரமெல்லாம் ஞானந் தோற்றும்
அறையேது? அல்லவென்று சமுசா ரத்துள்
அழுத்துமப்பா தொய்தத்தி னாண்மை தானே.

68:

ஆண்மையென்றால் தொய்தத்தி ணாண்மை யல்லோ
அகண்டமுத லண்டமெல்லாம் ஞானந் தோற்றும்
மாண்மையென்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில்
மண்ணையள்ளிக் கூறுகொண்டு மலங்கப் பார்த்துக்
கேண்மைகொண்டே யுககெல்லாங் கெடுத்தே ஆட்டிக்
கெடியான பெண்ணுபொன் னாணி னாலே
தான்மையென்ற பிறப்பிறப்பை மீறப் பாய்ந்து
சண்டாளக் கோபத்தைத் தள்ளு தள்ளு.

69:

தள்ளுகின்ற வுறுப்பு வந்தால் கருவைக் கேளு;
சாதகமாய்க் குண்டலிக்குள் வாசி வைத்துத்
தெள்ளுகிற பிராணாயம் பண்ணித் தீருந்
திரண்டொலியுஞ் சிலம்பொலியுங் காணும் காணும்;
நள்ளுகின்ற கண்டத்தே யங்கென் றூணும்
நலம்பெரிய புருவமையந் திறந்து போகும்
அள்ளுகின்ற கனிபோலே யமிர்தம் வீழும்
அப்பொழுது காயசித்தி யறிந்து கொள்ளே.

70:

அறிந்திந்த மதியான விந்து விட்டும்
அப்பனே யோகமிதே யறிந்து கொள்ளு;
பரிந்திந்த விந்துமுதல் நாதஞ் சித்தி
பாங்கான சிவத்தோடு பரந்தான் கேளு;
அறிந்திந்தப் பராபரத்தோ டாறுகேளு
அப்பனே மவுனத்தைத் தூக்கிக் கொண்டால்
செறிந்து நின்ற ஞானத்தின் யோக மாச்சு;
செயல்தம்ப மவுனத்தைச் சென்று காணே.

71:

காணப்பா பராபரத்தின் மேலே யாறு
கைவிட்ட அகண்ட முநிர்க் குணத்தா னொன்று
பூணப்பா நிர்க்குணந்தான் நிராகா ரந்தான்
புகழான நிர்மலந்தான் போதத் தந்தம்
தோணப்பா விவையாறுங் காணப் போகச்
சொல்லுகிற வார்த்தையென்றால் கேட்டி ருப்போம்
ஊணப்பா சடம்விட்டே அறிவு விட்டே
உற்று நின்ற அண்டத்தே யறித்து கொள்ளே.

72:

அறிந்து கொள்ளு மதியளவு பிண்டத் துள்ளே
அப்பனே யாறுதலம் அறிந்து காணும்;
அறிந்து கொள்ளு விந்துவின்மேல் பரத்தின் மட்டும்
அறிவுக்குள் சக்கரந்தா னப்பா கேளு;
அறிந்து கொள்ளு பரத்தின் மேல் போத மட்டும்
ஆதார நிர்மலத்தின் வரைக ளாறும்
அறிந்துகொள்ளு மேலாறுங் காணப் போகா
ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே.

73:

காணப்பா தசதீட்சை கடந்த பின்பு
கைவிட்ட சூத்திரத்தை யாசான் காட்ட
ஊணப்பா அது மவுனம் மற்ற தெல்லாம்
உரவார்த்தை அகாரமுத லுகாரமென்பார்
வீணப்பா சிரமேல்வே தாந்தக் காட்சி
விரைந்ததிலே யும்மென்றே ஊணென் பார்கள்
பூணப்பா வும்மென்ற நாத மாமோ
போக்கறியான் சொல்லுகிற ஞானந் தானே?

74:

தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச்
சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி
வானென்ற வெளியோடறு தலமுங் காட்டி
வாய்மூடி னாதிக்க வகையும் காட்டி
ஊனென்ற வுடம்பைவிட்டுக் கேசரியுங் காட்டி
ஊமைநின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக்
கோனென்ற குருவெனும் வாய் பேசலாமோ
குறும்பரே குருசொல்ல விரண்டு மாமே.

75:

ஆமிந்த வுலகத்தோர் ஞான வீதி
அறிந்தேறிக் கூடுவதும் அரிது மெத்த
ஓமிந்தக் குண்டலியைத் தொட்ட ரற்ற
ஊதுவது கடினமெத்த யோக மார்க்கம்
வாமிந்த வாமத்தே நின்று கொண்டு
மகத்தான பானமுண்ண வாய்க்கும் ரண்டும்
சோமிந்தச் சடைவைத்துச் சின்மயம் காட்டும்
சொற்பெரிய பூரணந்தான் சொன்ன வாறே.

76:

வாறான குருவினுடை வாழ்க்கை கேளு
மகத்தான சடையின் மேல் மதியுஞ் சூட்டித்
தாறான நெற்றியிலே தீயை வைத்துச்
சர்ப்பமல்லோ ஆபரண மாகப் பூண்டு
வீறான கரித்துகிலை மேலே போர்த்து
விளக்கியதோர் புலித்தோலை யிடையிற் கட்டிக்
கூறான சுடுகாட்டிற் குடியு மாகிக்
கொள்கின்றார் பலியெடுக்கக் கொள்கின் றாரே.

77:

பலியெடுத்த குருவினிட வாம பாகம்
பகிர்ந்துநின்ற என் தாயின் பரிசு கேளு;
பொலியெடுத்த அட்டமா சித்திநிற்கப்
புகழ்பெரிய ரத்னவகை யாரம் பூண்டு
நலிவில்லா யோகாப்பி யாசஞ் செய்து
நண்ணுமிரு பதச்சேவை காண்ப தற்கே
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர்
ஒன்றாகக் கணநாதர் போற்று வாரே.

78:

அறிந்துகொள் என்தாயே துரைப்பெண் ணப்பா!
அப்பனோ எருதேறும் ஏழை யேழை
அறிந்துகொள் இவளைமுன்னே யையா வைத்தே
ஆதரித்துக் கேட்டதெல்லா மருளிச் செய்வாள்
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி
ஆத்தாளைப் பூசித்தா லறுப தீவாள்
அறிந்துகொள் சடமெல்லா மவளே யாச்சே
அப்பனுக்கு மெலும்போடு நரம்பி ரண்டே.

79:

இரண்டான வாயுவினி லொன்று சத்தி
ஈராகச் சிவமேது பிராண வாயு
ஒன்றாக நாடிநின்றால் சுழுனை யாச்சு
யோகமுமாம் ஞானமுமா முற்றே யேறு
தண்டான சுழுமுனைதா னடுவில் நிற்குஞ்
சாதகமா யிதற்குள்முக் கிரந்தி யுண்டு
நன்றான சுழுமுனையிற் பிராண னேரில்
நாதாந்த யோகமிது நாடிக் காணே.

80:

காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு
உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்
புசுண்டருக்குச் சித்திகை லாய தேகம்
தோணப்பா நவகோடி மானா கண்டார்
சுகயோக மாவது இந்தத் துறையு மாமே.

81:

ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்
அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்
செகமெலாம் பெண்ணான வுருத்தா னப்பா!
ஓமப்பா பொன்மண்வா சனையி னாசை
ஒற்றிநின்ற விந்திரிய மயக்கத் தாசை
நாமப்பா வென்றுசொன்ன ஆண்மை யாசை
நல்வினைக்குந் தீவினைக்கும் வித்து மாச்சே.

82:

வித்துக்குள் பாவமென்ன புண்ய மென்ன
வெகுகோடி புண்ணியத்தால் புருட சன்மம்
புத்துக்குள் வெகுகோடி பாவ புண்யம்
பாழான பெண்செனன மெடுத்த வாறு
கொத்துக்கு ளிவையறிந்து பாவ மான
குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி யையோ!
எத்துக்கு ளிவையறிந்து வேறாய் நின்றே
இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான வீச னாமே.

83:

பூரணமே யகண்டமே யகத்தி னந்தம்
பொங்கிநின்ற நிர்க்குணமே யென்னை யீன்ற
காரணமே யலகிற்பெண் ணாசை போலக்
கலந்துநின்ற சுகமில்லை கருதிக் கொண்டேன்.
ஆரணமே யதீதத்தில் சுகந்தா னென்ன
அப்பவே சொல்லுகிறே னறிந்து கொள்ளு;
காரணமாங் குவிமுலையா ளாசை விட்டால்
மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே.

84:

நேரான பெண்ணாசை நீங்கிற் றானால்
நிலையான திரோதாயி மாய்கை போச்சு
தூரான வேதாந்த வெளியிற் சொல்வார்
சும்மென்ற சகஞ்சொல்வா யோகி யல்லை
வாராய்நீ யென்மகனே பெண்ணாற் சிக்கி
மகத்தான ரிடிகள்சித்தர் கோடி கெட்டார்;
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள்
தயங்கி நின்று படும்பாடு சாற்று வேனே.

85:

சாற்றுவேன் வீதிபடு குழிதா னுண்டு
தன்மேலே புல்லோடு செடியு மூடி
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்த
வாறொக்கும் பெண்ணான மாயக்கூபம்
ஆற்றுவே னென்றாலு மாற்றப் போகா
அரகரா பெண்ணரவு கடித்த தானால்
போற்றுவே னென்றாலும் பொல்லாக் காமம்
பொறிவிட்ட நெய்போலப் பொங்கும் பாரே.

86:

பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;
பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு.
மங்குகின்ற மோகமென்ன? மகேசன் கூறு;
மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
தங்குகின்ற யோகம்போய் ஞானம் பாழாய்ச்
சமாதியெல்லா மிந்திரியச் சார மூடித்
தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகச்
சூனியமாய் ஞானமெல்லாந் தோற்று மாறே.

87:

வெட்டினார் மௌனியந்த விந்து பாம்பை
வேதாந்த மென்றதொரு வாளி னாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே
சச்சிதா னந்தவெள்ளச் சார்பி னாலே;
ஒட்டினா ரொட்டினநிர்க் குணத்தின் மட்டும்
உத்தமனே யதுவல்லோ ஞான வீதி?
தெட்டினார் தெட்டினார் சகல ரெல்லாம்
செகசால வித்தையென்று தெளிந்து பாரே.

88:

தெளிவதுதா னெளிதல்ல வாய்ப்பேச் சல்ல;
சிங்காரப் பெண்கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே யடுத்த கூறாம்
அதரமுண்டு கூடுது போக மென்பார்
கழிவதுதான் காலேது வாசி யேது
கைவிட்ட மைதுனத்திற் கலப்ப தேது?
ஒழிவதுதா னெந்நாளோ வென்று லோகர்
ஒருகோடி மாண்டார்க ளூன்றிக் காணே.

89:

காணப்பா பிறப்பிறப்புப் பெண்ணா லாச்சு;
கைகடந்த மாயமெல்லாம் பெண்ணா லாச்சு;
பூணப்பா இந்திரியம் பெண்ணா லாச்சு;
புகழ்பெரிய வாசனையும் பெண்ணா லாச்சு;
தோணப்பா மனம்புத்தி யாங்கா ரத்தில்
சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு;
ஊணப்பா வூணப்பா வுரைக்கச் சொன்னேன்;
உலகத்திற் றிரியாதே விண்ணி லாடே.

90:

ஆடையிலே விண்ணுக்குட் சித்தர் கோடி
அந்தந்த மலைகளினால் தாக்க வோடி
ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி
உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி
தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு
சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார்
நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு
நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு.

91:

கேளப்பா இதைவிட்டே யுலக ஞானி
கேட்டதெல்லாஞ் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்!
நாளப்பா செகமெல்லாஞ் சாங்க மென்பான்
நலமான நூல்பாரான் தீட்சை யாவான்
காளப்பா மவுனமென்பான் விண்ணைப் பார்ப்பான்
காதகத்தை விட்டுச்சீ வனத்திற் செல்வான்
நாளப்பா தினந்தோறுந் தர்க்கம் பேசி
நலமான பெண்ணோடு மயங்கு வானே.

92:

மயங்குவான் பொன்தேடப் புரட்டும் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்;
தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே யென்பான்;
செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து;
முயங்குவான் சமாதிவிட் டேனையோ வென்பான்
மூடமொற்ற ஞானமெல்லா முலகிற் பாரே.

93:

பாரப்பா சரீரமிது சமாதிக் காக!
பாழான தூலமிது வென்பார் கோடி
நேரப்பா வாதம்வந்தால் ஞானம் என்று
நேரப்பா அலைந்தவர்கள் கோடா கோடி;
ஆரப்பா வுலகத்தில் ஞானி யுண்டோ?
ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா அழுதலோவெள் ளாமை யாகும்?
ஏரில்லா னறுத்தடித்த கதையு மாச்சு.

94:

கதையாச்சே யுலகத்தில் ஞானம் வாதங்
கைகண்டாற் சொல்வாரே கல்போல் நெஞ்சே!
அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால்
அவன்கையி லொன்றுமில்லை யறிந்து கொள்ளே;
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம்
உதுவான வன்வாதி யுண்மை கேளு;
சுதையாச்சே ஆனாலும் பொங்கி யுள்ளம்
சுடுவான்பார் ரசயோகி ஞானி தானே.

95:

தானென்ற வாதியிலே யிருவ ருண்டு;
சண்டாள வாதியென்றா லுண்டு டுத்து
வானென்ற ஞானமென்ன வேதை பின்பு
மகத்தான பெண்ணோடே கூடி யாடிக்
கானென்ற ராககே ளிக்கை பார்த்துக்
கண்டபெண்ணைத் தாய்போலக் கருதிச் சென்றே
ஊனென்ற உடம்பெடுத்துப் போக வென்பான்
உலுத்தனுக்குச் செனனமென்ற நரகந் தானே.

96:

நரகமென்ற பெண்மேலே யாசை விட்டு
நாதாந்த வேதாந்த சிந்தாந் தம்பார்;
நரகமென்ன வுலகமெலா மனத்தில் வைத்து
நலமான தேவிகிரி யையிலே நின்று
நரகமென்ன சடமுதல்நா மல்லவென்று
நாட்டினுள்ளே தசதீட்சை கடந்த பின்பு
நரகமென்ற சிவசொத்தை வறுமை தின்று
நாமறியோம் வாதமென்றே யிருப்பார் காணே.

97:

இருக்கையிலே சதகோடித் தொழிலைச் செய்வார்;
இத்தனைக்கும் பொருளெதிவன் வறுமைக் கென்பார்;
இருக்கையிலே செயநீர்செந் தூரஞ் சுன்னம்
எடுத்தெடுத்தே யடுக்கிவைப்பார் அநேகங் கோடி;
இருக்கையிலே தொழிலெடுப்பா ரார்க்குக் காட்டார்;
இல்லையென்பா ருண்டென்பா ரனேகம் பேர்கள்
இருக்கையிலே சதாநித்த மறிவா லூட்டி
இருப்பார்கள் மவுனமுத்த வாதி யாமே.

98:

வாதியென்றா லவன்வாதி மவுன வாதி
மகத்தான பிரபஞ்சத் திருந்தா லென்ன
வாதியென்றால் ரசவாதி ஞான வாதி
வாங்காமற் சமாதியிலே யிருந்த வாதி
வாதி யென்றால் நிசவாதி நிர்மல வாதி
வாய்திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதியென்றா லவரிடத்தே சித்தர் செல்வார்
மயக்குகின்ற செனனமில்லை முத்தி தானே.

99:

முத்தியிந்த வாதிக்கு வருகு மென்று
மூச்சு முதற் சிவன்சொன்னா ரென்று சொல்லிப்
பத்தியிந்த சிவசொத்தைப் பெண்ணுக் கீந்து
பாழான விடயமெல்லாம் பண்ணிப் பண்ணி
அத்தியென்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி
ஆங்காரத் தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரக மெய்தி
மாளுவார் கோடி சென்ம மருளு வாரே.

100:

மருளாம லிருக்கவல்லோ வாதஞ் சொன்னார்?
மாண்டிறந்து மாண்டிறந்து பிறக்கை நன்றோ?
வெருளாமல் மனம்பிடித்த வாதி யானால்
வெகுசுளுக்கே யேறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ வென்றே யெண்ணி
அலையாமல் நின்றவனே ஆதியோகி
இருளாமோ வெளியாமோ வென்றே யெண்ணி
ஏகவெளி சுத்தவிரு ளாகிப் போமே.

101:

ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும்
அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு;
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம்நூறு
அப்புறத்தே சொன்னதொரு ஞானம்நூறு
ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான்
அறிந்தமட்டும் சொல்லிவந்தேன் வல்லோருண்டோ
ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி
ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே.