பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்


முத்தி தரும்வேத மொழியாம் புலம்பல்சொல்ல

அத்தி முகவன் தன் அருள்பெறுவதெக் காலம். 1

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம். 2

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து

தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம். 3

தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு

வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம். 4

ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல்

மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். 5

மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்

காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம். 6

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு

மாயா அனுபூதி வந்தடுப்ப தெக்காலம். 7

சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து

பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம். 8

பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத்

தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம். 9

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி

மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம். 10

பெண்ணினல்லா ராசைப் பிரமையினை விட்டொழிந்து

கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம். 11

வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குல் பைதனிலே

தட்டுண்டு நிற்கை தவிர்வதுவு மெக்காலம். 12

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்

தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம். 13

தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே

சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம். 14

மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல்

தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். 15

பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்

ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம். 16

உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்

புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். 17

வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும்

வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம். 18

பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம். 19

ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். 20

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்

கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம். 21

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்

செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். 22

ஒழிந்தகருத் தினைவைத் துள்ளெழும்புவெள் ளெலும்பாய்க்

கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். 23

அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து

கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம். 24

கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்

உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம். 25

தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள் முன்சூழ்ந்தாற்போல்

மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம். 26

தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல்

ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம். 27

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற

வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். 28

அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்

சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். 29

அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்

தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம். 30

பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக்

குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம். 31

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். 32

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே

ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம். 33

மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். 34

இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே

மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம். 35

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற்

பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம். 36

செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே

சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். 37

கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும்

வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம். 38

ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து

போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம். 39

நவசூத் திரவீட்டை நானென் றலையாமல்

சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். 40

மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக்

கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். 41

இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த

பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம். 42

உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே

அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம். 44

சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு

பாதைதனைக் கழித்துப் பயனடைவ தெக்காலம். 45

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டதுபோல்

பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்காலம். 46

சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்

ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம். 47

தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல்

உடக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம். 48

ஆசைவலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசைமணி தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம். 49

கூறறிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத

பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம். 50

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்

எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம். 51

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 52

பருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்

தெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம். 53

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து

குருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம். 54

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி

யம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம். 55

பற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்

சுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம். 56

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்

சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம். 57

மருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்

உருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம். 58

தன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்

என்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம். 59

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்

தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம். 60

எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்

கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம். 61

கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்

சொன்னபரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம். 62

ஆக மிகவுருக வன்புருக யென்புருகப்

போக வநுபூதி பொருந்துவது மெக்காலம். 63

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்

பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம். 64

அன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்

துன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம். 65

கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்

அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம். 66

தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்

பொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம். 67

ஆதார மூலத் தடியில் கணபதியைப்

பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம். 68

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்

கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம். 69

அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவதெக்காலம். 70

மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம். 71

வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்

தோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம். 72

வட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக்

கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம். 73

உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம். 74

பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந்தானாகி

வேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம். 75

கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்

சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம். 76

கள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங்

குள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம். 77

அட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே

பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம். 78

அறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம்

பிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம். 79

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்

பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம். 80

தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல்

ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம். 81

புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி

யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம். 82

நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள்

கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம். 83

நானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி

தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம். 84

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே

தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம். 85

ஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை

வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம். 86

இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு

சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம். 87

அமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங்

கிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம். 88

கூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்

மாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம். 89

ஊனிறைந்த காயமுயிரிழந்து போகுமுன்னம்

நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம். 90

கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த

சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம். 91

தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்

நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம். 92

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்

தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம். 93

காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்

வாசி தனிலேறி வருவதினி யெக்காலம். 94

ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச்

சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம். 95

இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில்

தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம். 96

மூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில்

பாலைஇறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம். 97

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல

ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம். 98

பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில்

சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம். 99

மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று

நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம். 100

ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்

தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம். 101

அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு

மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம். 102

வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று

சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம். 103

மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி

நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம். 104

எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்

கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம். 105

என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும்

தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம். 106

ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை

வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம். 107

ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன்

காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம். 108

மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை

நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம். 109

முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால்

உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம். 110

கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்

விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம். 111

கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க

நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம். 112

ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும்

பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம். 113

நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை

முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம். 114

முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்

அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம். 115

சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை

நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம். 116

வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும்

யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம். 117

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே

அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம். 118

அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற

குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம். 119

நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந்

தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம். 120

என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு

தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம். 121

ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல்

வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம். 122

ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து

வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம். 123

காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல்

பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம். 124

பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச்

செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம். 125

ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்

கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம். 126

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம். 127

சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற்

றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம். 128

ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். 129

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்

புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம். 130

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 131

தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை

வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம். 132

பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை

ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம். 133

ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று

பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம். 134

காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம்

பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம். 135

ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின்

நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம். 136

குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்

பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம். 137

மத்தடுத்து நின்று மருளாடு வார்போல

பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம். 138

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்

வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம். 139

என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின்

தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம். 140

உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக்

கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம். 141

வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல்

பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம். 142

பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல்

பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம். 143

நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய்

ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம். 144

பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்

காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம். 145

பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல்

நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம். 146

காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே

ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம். 147

உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி

இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம். 148

வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து

நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம். 149

பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல்

விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம். 150

அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்

கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம். 151

ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே

எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம். 152

பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு

நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம். 153

ஆசார நேய அனுட்டானமும் மறந்து

பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம். 154

பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே

அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம். 155

ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை

ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம். 156

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்

சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம். 157

அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த

சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம். 158

இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல

முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம். 159

ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந்

தானாகி நின்ற தனையறியவ தெக்காலம். 160

என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க

உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம். 161

இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச்

சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம். 162

மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம். 163

என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த

உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம். 164

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்

நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம். 165

நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல்

சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம். 166

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து

மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம். 167

கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல்

வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம். 168

கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல்

உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம். 169

அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல்

கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம். 170

பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல்

உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம். 171

நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற

வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம். 172

சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்

ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம். 173

இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்

கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம். 174

கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க

உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம். 175

வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்

கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம். 176

கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல்

உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம். 177

இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல்

அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம். 178

மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்

என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம். 179

கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல்

கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம். 180

பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை

காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம். 181

செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக

வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம். 182

ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப்

பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம். 183

ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை

நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம். 184

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்

போகா உடலகன்று போவதென்ப தெக்காலம். 185

நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு

வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம். 186

வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை

திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம். 187

எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க்

கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம். 188

உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங்

கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம். 189

ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்

ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம். 190

சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்

சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம். 191

போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்

தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம். 192

நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம். 193

அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்

பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம். 194

நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்

ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம். 195

தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்

பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம். 196

நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்

சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம். 197

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்

திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம். 198

மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்

தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம். 199

பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே

கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம். 200

வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்

கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம். 201

பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி

ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம். 202

அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து

முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம். 203

நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல்

நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம். 204

எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல்

உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம். 205

அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல்

என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம். 206

அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல்

சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம். 207

பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று

மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம். 208

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை

என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம். 209

ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல்

ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம். 210

தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல்

உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம். 211

சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக்

காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம். 212

என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து

தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம். 213

தன்னை மறந்து தலத்து நிலைமறந்து

கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம். 214

என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து

தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம். 215

தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே

உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம். 216

இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல்

துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம். 217

ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்

தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம். 218

முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால்

அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம். 219

கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால்

தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம். 220

தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே

ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம். 221

நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து

தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம். 222

தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி

ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம். 223

உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே

மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம். 224

ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந்

தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம். 225

ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில்

மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம். 226

காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு

மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம். 227

நானாரோ நீயாரோ நன்றாம் பரமான

தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம். 228

எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார்

அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம். 229

உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை

நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம். 230

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்

களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம். 231

என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்

முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம். 232

மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்

காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம் 233

ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து

நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம். 234


 


No comments:

Post a Comment