நடேசர் கும்மி

ஆனந்த பைரவி
ஆனந்த பைரவி

ஆதி தாளம்

பல்லவி:

கும்மியடி பெண்ணே கும்மியடி இரு
கொங்கை குலுங்கவே கும்மியடி

அனுபல்லவி

நம்மை யாளு பொன் னம்பல வாணனை
நாடிக் கும்மி யடியேடி பதம் பாடிக் கும்மி யடி யேடி!

சரணங்கள்:

1. காமம் அகற்றிய தூயனடி சிவ
காம சவுந்தரி நேயனடி!
மாமறை யோதுசெவ் வாயனடி மணி
மன்றெனு ஞானவா காயனடி!

2. ஆனந்தத் தாண்டவ ராசனடி நமை
ஆட்கொண் டருளிய தேசனடி!
வானந்த மாமலை மங்கைமகிழ் வடி
வாளன டிமண வாளனடி!

3. கல்லைக் கனிவிக்குஞ் சித்தனடி முடி
கங்கைக் கருளிய கர்த்தனடி!
தில்லைச் சிதம்பர சித்தனடி தேவ
சிங்கம டியுயர் தங்கமடி!

4.பெண்ணொரு பால் வைத்த மத்தனடி சிறு
பிள்ளைக் கறிகொண்ட பித்தனடி!
நண்ணி நமக்கருள் அத்தனடி மிக
நல்லனடி யெல்லாம் வல்லனடி!

5. அம்பலத் தாடல்செய் ஐயனடி - அன்பர்
அன்புக் கெளிவரு மெய்யனடி!
தும்பை முடிக்கணி தூயனடி! சுயச்
சோதிய டிபரஞ் சோதியடி!

சூரியானந்தர்




சூத்திரம்

1. சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற
தெட்சிணா மூர்த்தியுடைய பாதங் காப்பு:
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்
பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை யெல்லாம்
நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னை
நிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்
ஆர்கொண்ட வேணியனா ருமக்குச் சொன்னார்
ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.

2. அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதி
ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்
மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்
மண்ணான வுப்பதுவே சாரஞ் சாரம்
கறைந்திட்ட வூசருக்குக் கேற்ற வுப்பைக்
காணாமற் போனதினாற் கலக்க மாச்சு
இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்
இந்தவிரண் டோரிடத்தி லிருக்கும் பாரே.

3. இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்
இந்துவொன் றிரவியொன்று வன்னி யொன்று
பெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்
பிருதிவியே தூலமெனப் பேச லாகும்
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்
கருதையிலே யெழுதோற்றங் காண லாகும்
உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்
உற்றுப்பா ரண்டபிண்ட முண்மை தானே.

4. தானாக நின்றதுவே பாரு மாச்சு
சகலசித்துப் பிரகிருதி யுயிரு மாச்சு
வானாகி நின்றதுவே சாட்சி யாகும்
மன்னுயிரெல் லாஞ்சோதி மயமுமாச்சு
ஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்
குதவியல்லோ பிரகிருதி யோனி யோனி
கோனாக நின்றகுரு வுபதே சத்தாற்
குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே.

5. கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்
கூர்ந்துபா ரூசரத்தைக் கொள்கிக் கொண்டு
விள்ளுவார் யோனியின் படிவி டாமல்
மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்
துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சு
துருசுப்புப் பணவிடையாற் றொந்த மேற்றித்
தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்
சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே.

6. ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சை
ஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்?
மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்?
மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்?
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்
ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டா மென்று
பேச்சப்பா பேசினதி லாவ துண்டோ
பிண்டவுப்புக் கேழுவிதம் பேச லாமே.

7. பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்
பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்
வீசுகின்ற சூதத்தின் துறைக ளெல்லாம்
மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்
பாசையினாற் சொன்னார்கள் வெளிதோன் றாது
பாலனுக்குந் தோன்றுமிந்த நூலை பார்த்தால்
கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்
குகைக்குள் மறைத் திட்டதனாற் கூறொண் ணாதே.

8. ஒண்ணான நூலாகு மிருநூற் றைந்தில்
ஓதிவைத்த கருத்தெரியு மிருபத் தைந்திற்
கண்ணாகு மிந்த நூல் பதின்மூன் றுக்குள்
கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்
வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்
வாதியென்ற பேரேது வாத மேது?
பெண்ணாணின் சுரோணிதமும் விந்துங் கண்டால்
பேரான பூரணத்தின் பெருமை தானே.

9. பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்
பேரான அடியோடு முடியும் போச்சு
அருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசை
அப்பனே கண்டமதி லங்கெண் றூணு
புருவமையத் துள்ளேவும் மென்று கும்பி
போதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சு
தருமவித்தை பிரகிருதி மூச்சா டாது
சகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே.

10. நில்லாத மூலிகையாற் காய சித்தி
நிட்டைமவு னத்தாலே யோக சித்தி
கொல்லாத மூலமதில் அபான சுத்தி
கூடாம லிருந்துவிட்டா லேது முத்தி?
சொல்லாத வீசனுப்பு மதிசூ தத்திற்
சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தை
எல்லாரு மிருந்தவிதம் பாட மாட்டார்
இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே.

11. உப்பான வெடியுப்புச் செயநீ ராலே
ஒருகோடி வித்தையெல்லா மாட லாகும்
அப்பான கல்லுப்பு நீரி னாலே
ஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்
செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்
சிவன் வேறு தானுண்டேயிவனல் லாமல்
தப்பாமற் செய்தென்ன சவுக்கா ரந்தான்
சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே.

12. தாக்கிப்பா ராகாசஞ் சருவ சாட்சி
சதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்
நோக்கிப்பார் வாயுலயப் படுவ தற்கு
நூதனமாய் வன்னியதிற் கூட வேணும்
மூக்கிற்றா னோடுவது பிராண வாயு
மூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்
தூக்கித்தான் விட்டவர்க்கு யோக மெய்தும்
சூரிய னந்தனிவை சொல்லும் நூலே.

13. சொல்வதென்ன ரேசகத்தை வெளிவி டாதே
துடியான பூரகத்தைப் பின்னி டாதே
வெல்வதென்ன கும்பகத்தை யடிவி டாதே
மேலேற்று மாத்திரையை மறந்தி டாதே
செல்வதென்ன கற்பத்தை மறந்தி டாதே
செந்தூரஞ் சேர்க்கையிலே சிதறி டாதே
கொல்வதென்ன அமூதயலேபிறக்கு மிந்தக்
குளிகைக்குச் சாரணைசெய் குணமு முற்றே.

1 எண்ணா யிரத்து லிருநூறு மந்திரம்
அண்ணார் சொன்னாரடியே னறிந்தேன்
சொன்னார் சிவப்புச் சோர்பச்சை ரூபம்
வண்ணா னறிவான் வகாரத் திரையமே

என்று திருமூலர் திருமந்திரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.

சித்தர்கள் போற்றி

 


பெளர்ணமி நாளில் அனைத்து சித்தர்களையும் போற்றி வணங்கி அருள் பெறுவோம். 

108 சித்தர்கள் போற்றி !!!!

ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி
ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றி
ஓம் மச்சேந்திரநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலர் திருவடிகள் போற்றி
ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி
ஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றி
ஓம் போகர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி
ஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் பத்திரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூர்ணானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகர் திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணனார் திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பேய் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டைமுனி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் விஸ்வாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் காரைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாகார்ஜுனர் திருவடிகள் போற்றி
ஓம் வாசுகியார் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி
ஓம் குமாரத்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
ஓம் வள்ளலார் திருவடிகள் போற்றி
ஓம் முத்துத்தாண்டவர் திருவடிகள் போற்றி
ஓம் காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி
ஓம் பராசரர் திருவடிகள் போற்றி
ஓம் ஹனுமான் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் திருதட்சியாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் டமரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபால சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் கெளதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகன்நாதர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் துர்வாச முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்வாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்கள முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பீர்முஹம்மது திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாக்கோபு சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி.
ஓம் வியாச முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டு சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்ட மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சீரடிபாபா திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்ட மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் யூகி முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளை திருவடிகள் போற்றி
ஓம் வேதவியாசர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர்n திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி

சுவாமி விவேகானந்தர்

 


சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து,  வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 12, 1863

பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 1902

தொழில்: தத்துவவாதி, துறவி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும் 

ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.

உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்

சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும்  கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.

இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.

 ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று

எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.

இந்தியாவில் அவரது பயணம்

 1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.

 சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.

 மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்

 1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.

 ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்

 மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900  வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

 இறப்பு

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

காலவரிசை:

1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.

1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.

1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.

1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.

1897: இந்தியா திரும்பினார்

1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.

1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்று

 பரம்பொருளாகிய கந்தப் பெருமான், குருதேவ் சுவாமி சிவானந்தஜீ ம<கராஜ் மற்றும் அருளாளர் அருணகிரிநாதர் ஆகியோரைப் போற்றிப் பணிந்து வணங்கி அவர்களின் திருவடிகளில் இந்த நூலைப் பூஜை மலராகப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

    அத்வைத ஆசார்யர் ஆதிசங்கரர், ஷண்மத ஸ்தாபனம் செய்தார்; ஆறுசமய வழிபாட்டை வகுத்தளித்தார். இந்து ஆறு வழிபாட்டு முறைகள் அல்லது மரபுகளில் ஒன்று கௌமாரம். இந்தப் மரபைச் சார்ந்தவர்கள் (கௌமாரர்கள்) மதிப்புடனும், மரியாதையுடனும் குமரனை, ஸ்கந்தனை, சண்முகனை மற்றும் கார்த்திகேயனை பரம்பொருளாகப் போற்றி வழிபடுகின்றனர். கௌமார குருநாதர்களில் அருணகிரிநாத சுவாமிகளை முதன்மையான குருவாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் மதித்துப் பாராட்டிப் போற்றுகின்றனர். அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். இது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலம். இந்த புனிதத் திருத்தலம் மற்றும் பல காரணங்களாலும் புகழ் பெற்றது. இது, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று நம்பப்படுகிறது.


    முற்காலத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும் ஞானிகள் வாழ்க்கையைப் போலவே அருணகிரிநாதர் வாழ்க்கை சம்பந்தமாகவும் ஆதாரபூர்வமான பதிவுகள் இல்லை. அவரது பிறப்பு, ஜாதி சம்பந்தமாக உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆகவே, இயற்கையாகவே அவரைப்பற்றி பல தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. அவரைப் பற்றிய சிறுசிறு விஷயங்களில்கூட பல்வேறு விதமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எது சரி, எது தவறு என்று நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. அருணகிரிநாதரின் வரலாற்றை அதிகமதிகமாகப் படிக்கப்படிக்க அதிகமதிகமான குழப்பங்கள்தான் மனதில் ஏற்படுகின்றன. அருணகிரிநாதரைப் பற்றி எழுதிய நூல் ஆசிரியர்கள் இறைவன் மீதும் அருணகிரிநாதர் மீதும் கொண்டுள்ள பக்தியால் பல்வேறு விஷயங்களை எந்த ஆதாரமும் இன்றி எழுதியுள்ளனர். எனக்குக் கிடைத்த சில நூல்களைப் படித்தபின் அருணகிரிநாதரைப் பற்றி நூல் எழுத நான் தயங்கினேன். ஏனெனில், ஏற்கனவே இருக்கும் குழப்பம் போதாதென்று நானும் குழப்பத்தை அதிகரித்துவிடுவேனோ என்று எண்ணினேன். ஆனால், இருக்கும் குழப்பம், முரண்பாடுகளில் சிலவற்றையாவது எனது நூல் தெளிவுபடுத்தும் வகையில் அமையுமாயின், மற்றுமொரு விளக்கமான நூலை எழுதுவதில் தவறில்லை என்று எண்ணி எழுதத் தீர்மானித்தேன். எனவே நம்பத் தகுந்த ஆதாரங்களை மட்டும் தொகுத்துச் சேர்க்க முயற்சி செய்திருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் பல்வேறு நூல்களில் கூறப்படுவதுபோல அருளாளர் அருணகிரிநாதர் அடைந்த அருள், ஞானநிலை சாதாரணமானதல்ல என்பது மட்டும் உறுதி.


அருளாளர் அருணகிரி நாதரின் போற்றத்தக்க வாழ்க்கை வரலாற்றை அகச்சான்றுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் சுருக்கமாக பின்வருமாறு கூறலாம்.

வடதேசத்திலிருந்து வந்து திருவண்ணாமலை அருகில் முல்லந்திரம் மற்றும் பிற கிராமங்களில் குடியமர்ந்த கௌட பிராமண குடும்பத்தில் பிறந்தவர் அருணகிரிநாதர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். அவர் இளமைப் பருவத்திலிருந்தே தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவருக்கு நன்கு கல்வி போதிக்கப்பட்டது. அவர் நன்கு வளர்க்கப்பட்டார். அவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருந்தனர். ஒருவேளை அவருக்கு நற்கல்வி அளிக்க அவரது பெற்றோர்கள் திருவண்ணாமலைக்கு வந்து வசித்திருக்கலாம் அல்லது திருமணமானபிறகு ஜீவனம் நடத்துவதற்காக அவர் திருவண்ணாமலைக்கு வந்திருக்கலாம். அவருக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் விதிவசத்தால் அவர் திருவண்ணாமலையில் விபச்சாரிகளின் மோக வலையில் சிக்கித் தவித்தார். சிற்றின்பச் சேற்றில் மூழ்கினார். விபச்சாரிகளை திருப்திப்படுத்த தன் செல்வம் முழுவதையும் இழந்தார். மேலும் கருமிகளைப் புகழ்ந்து பாடிப் பணம் பெற்று விபச்சாரிகளுக்கு கொடுத்தார். அவர்களுடன் கொண்ட தகாத உறவால் அவர் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். உற்றார் உறவினரும் விபச்சாரிகளும் அவர் நிலை கண்டு ஏளனமாகச் சிரித்தனர். அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்கினர். காலம்தான் குணப்படுத்தும் மகத்தான சாதனம். அருணகிரி தனது செயலுக்காக வெட்கப்பட்டார். கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைத் தான் வீணாக்கிவிட்டதற்காக வருந்தினார். வேதனைப்பட்டார். ஒரு முதியவர் அவரைப் பார்த்து முருகப் பெருமானை வழிபடுவதிலும், தியானிப்பதிலும், அவரிடம் பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தைச் செலவிடுமாறு அறிவுரை கூறினார். அதன்படி கோவில் கோபுரத்தின் அருகில் அமர்ந்து இறைவன் மீது மனதைச் செலுத்தி தியானித்தார். ஆயினும் மனம் அமைதி பெறவில்லை. இறுதியாக, தரம் தாழ்ந்த தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும், தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடவும் அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார். கோவில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். முருகனைப் பிரார்த்தித்தார். தற்கொலை செய்துகொள்ள கோவில் கோபுரத்திலிருந்து கீழே குதித்தார். அவர் பூமிக்கு அருகில் வரும்போது அவர் வணங்கும் முருகன் தனது அபார கருணையினால் அவரை தனது திருக்கரங்களில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். தனது வேல் கொண்டு அருணகிரியின் நாவில் “ஓம்” எனும் புனிதமான பிரணவ மந்திரத்தை எழுதினார். அவருக்கு ஒரு ஜபமாலையைத் தந்தார். தனது புகழைப் பாடுமாறு அருளாணை பிறப்பித்தார். பாடுவதற்கு ‘முத்தைத்தரு’ என்று முதலடியும் எடுத்துக் கொடுத்தார். பாவியான அருணகிரி நொடிப் பொழுதில் இறைஞானம் பெற்ற பரமஞானியாக மாற்றம் பெற்றார். தீராத நோய் தீர்ந்து முழுமையான ஆரோக்கியமான உடல்நலம் பெற்றார். பல்வேறு தெய்வீக அனுபவங்களைப் பெற்றார். அவர் முகம் அருட்பொலிவுடன் பிரகாசித்தது. கோவில் கோபுரத்தின் அடிவாரத்தில் அருணகிரியை முருகன் காப்பாற்றிய இடத்தில் முருகனுக்கு ஒரு கோவில் உள்ளது. அது “கோபுரத்து இளையனார் கோவில்” என்றழைக்கப்படுகின்றது. அருணகிரியார் வீடுவாசலற்ற துறவியானார். எப்பொழுதும் இறைவன் புகழைப் பாடும் பணியே பணியாய் மேற்கொண்டார். திருவண்ணாமலையில் கோவில் கொண்டிருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடினார். அவர் புகழ் திக்கெட்டும் பரவியது. அந்த தேசத்து மன்னன் பிரவுட தேவன் அருணகிரிநாதரைப் போற்றி வணங்கி அவர் பக்தராக மாறினார். அருணகிரியாரைக் காப்பாற்றியருளிய முருகனை மன்னன் தரிசிக்க விரும்பினார். அதற்காக அருணகிரியை வேண்டினார். அருணகிரியும் அதற்காகக் கூட்டிய ஒரு சபையில் ‘அதலசேடநாராட’ என்ற திருப்புகழ் பாடலைப்பாடி முருகப்பெருமானை காட்சி அளிக்கப் பிரார்த்தித்தார். அவ்வண்ணமே, முருகப் பெருமான் மன்னன் மற்றும் திரளாகக் கூடியிருந்த மக்கள்முன் ஒரு கம்பத்திலிருந்துத் தோன்றி, ஆடிடும் மயில் மீது ஏறிவந்து காட்சி தந்தார். மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்தான். மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். முருகன் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு காட்சியளித்த இடத்தில் முருகனுக்குக் கோயில் இருக்கிறது. அது “கம்பத்து இளையனார் கோவில்” என்று அழைக்கப்படுகின்றது. கர்ண பரம்பரைக் கதைகளில் கூறப்படுவதுபோல முருகனை தரிசித்ததால் மன்னன் கண்பார்வையை இழக்கவில்லை; மன்னன் கண்பார்வைபெற பாரிஜாத மலரைக் கொண்டுவர அருணகிரி தேவலோகம் செல்லவுமில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அருணகிரி திருத்தல யாத்திரை செய்தார். இந்தியா முழுவதும் உள்ள முருகன் திருக்கோவில்களையும் மற்ற கோவில்களையும் தரிசித்தார். அங்கு கோவில் கொண்டுள்ள முருகனையும் மற்ற தெய்வங்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினார். இந்த யாத்திரையில் அவருக்குப் பலவிதமான அனுபவங்களும் இறைவன் தரிசனமும் கிடைத்தன. திருச்செந்தூரில் முருகன் குழந்தை வடிவில் வந்து நடனமாடி காட்சி அளித்தார். இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் வில்லிபுத்தூராருடன் இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டு, “கந்தர் அந்தாதி” பாடி, அவரை வென்றார். அதன்பின் கடல் கடந்து ஈழம் (இலங்கை) சென்றார். ஸ்ரீலங்காவில் அவர் அருக்கோணமலை மற்றும் கண்டி ஆகிய ஊர்களுக்குச் சென்று தரிசித்தார். அதன்பிறகு அவர் பிரசித்தி பெற்ற கதிர்காமம் சென்றார். பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து அகத்திய முனிவர் தங்கித் தவம் செய்த பொதிகைமலை சென்றார். அங்கு, “இறைவா! (i) நீ என்னை உன் அருகில் அழைத்துப் பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, (ii) வேல், மயில் ஆகிய சின்னங்களைப் பொறித்து அருள்வாயாக,” என்று பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து திருத்துருத்தி என்னும் தலத்திற்குச் சென்றார். அங்கே முருகன் அருணகிரியின் கனவில் தோன்றி, அவரது தோள்களில் வேல் மற்றும் மயிலின் சின்னங்களைப் பதித்து “கந்தர் அனுபூதி” பாடல்களைப் பாட அருளாணை பிறப்பித்தார். அருணகிரி உடனடியாக கந்தர் அனுபூதிப் பாடல்களை திருத்துருத்தியிலேயே பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது, பொதிகைமலையில் அகத்தியர் போன்ற தவசீலர்கள் பட்டியலில் தன்னையும் சேர்த்துக் கொள்ள இறைவனிடம் பிரார்த்தித்தார். திருத்தணிகையில் தங்கி, இறைவன் சித்தம் களிகூர ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட அருள்புரியுமாறும் அவர் பிராத்தனை செய்தார். அங்கிருந்த வட இந்திய யாத்திரையைத் தொடங்கி காசி, ஹரித்வாரம், கயிலை மலை, மற்றும் பூரியில் ஜகந்நாதரையும் தரிசித்துத் திரும்பிவரும்போது இந்த இரு வேண்டுதல்களையும் நிறைவேற்ற முருகன் அவரை திருத்தணிகைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி, அருணகிரி திருத்தணிகை சென்று சில ஆண்டுகள் தங்கி ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டார். கடும் தவம் செய்தார். அந்த வேளையில் அற்புதமான திருவகுப்புப் பாடல்களை இறைவன் உள்ளம் மகிழ்ச்சி அடையும் பொருட்டுப் பாடினார். எனவே, இவற்றில் விபச்சாரிகளின் காமக் களியாட்டங்கள் பற்றிய குறிப்புகள் முற்றிலும் இல்லை. மரணபயம் பற்றிய குறிப்பும் ஒரு சில பாடல்கள் தவிர மற்ற பாடல்களில் இல்லை. இறுதியாக, அவர் எங்கிருந்து தனது திருத்தல யாத்திரையைத் தொடங்கினாரோ அந்த சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். இந்த பாரத யாத்திரையின்போது அவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சுமார் 1300 பாடல்களே நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவர் யாத்திரையின் போது ‘கந்தர் அனுபூதி’, ‘கந்தர் அந்தாதி’, ‘கந்தர் அலங்காரம்’ மற்றும் பிற நூல்களையும் பாடியுள்ளார்.

    அருணகிரிநாதர் தனது நீண்ட யாத்திரையை நிறைவு செய்து திருவண்ணாமலைக்குத் திரும்பி வந்தபோது மன்னன் பிரவுட தேவன் உரிய மரியாதையுடன் வரவேற்றான். அருணகிரியார் தனது இறுதிக் காலத்தை தியானத்தில் தவத்தில் கழித்தார். நாளடைவில் இறைவனோடு இரண்டறக் கலந்து, அத்வைத நிலையாகிய சாயுஜ்ய நிலையை அடைந்தார். அவர் தனது பூத உடலை உதறித்தள்ளியபோது, தனக்கு இறைவனை தரிசிக்கும் வாய்ப்பை அருளித்தந்த அருணகிரிநாதருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னன் பிரவுடதேவன், அவர் உடலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலைப் பிராகாரத்தில் அடக்கம் செய்து, அத்துடன் அவருக்கு ஒரு சிறிய கோவிலும் அமைத்தான். அதில் அருணகிரிநாதரின் கல் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்து, அதற்கு தினசரி பூஜை செய்வதற்கும் ஏற்பாடு செய்தான். இந்தச் சமாதிக் கோவிலை இன்றும் நாம் காணலாம்.

    என்னே மன்னனின் புத்திக்கூர்மையும், பெருந்தன்மையும், நன்றியறிவும், அருணகிரியாரிடம் பக்தியும் மற்றும் விசுவாசமும்! அன்று கோவில் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள அருணகிரியார் முயன்றபோது அவரை முருகப் பெருமான் தடுத்து ஆட்கொண்ட இடம் (கோபுரத்து இளையனார் கோவில்); அருணகிரியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து மன்னன் மற்றும் மக்கள் மத்தியில் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு முருகன் காட்சி அளித்து அருளிய இடம் (கம்பத்து இளையனார் கோவில்), --- இந்த இரண்டு இடங்களும் (கோவில்களும்) உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே, அருணகிரிநாதர் அடக்கமான இடமும் (அருணகிரிநாதரின் சமாதியும், அத்துடன் அவருக்கு ஒரு சிறு கோவிலும்) அமைத்தான் மன்னன் பிரவுட தேவன். இது அவனது மிகவும் போற்றத்தக்க செயல்.

    (இந்தச் சிறு சமாதிக் கோவிலில் அருணகிரிநாதரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருத்தணிகையில் அருணகிரிநாதர் நீண்ட காலம் தவத்தில் ஈடுபட்டிருந்தபின் அவரது உடல் அமைப்பு எப்படி இருந்தது என்பதை இந்த விக்கிரஹம் வெளிப்படுத்துகிறது).

    இவ்வாறு அருணகிரிநாதர் போற்றத்தக்க இறைஞானம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார். மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அற்புதச் செயல்களை நிகழ்த்திக் காட்டினார். மக்களை சம்ஸார வாழ்க்கை எனும் மாயையிலிருந்து விடுவித்தார். அவர்கள் நிரந்தரமாக இறைவனைப்பற்றிய விழிப்புணர்வுடன் வாழ வழிகாட்டினார். அவர் இன்றும்கூட பக்தர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலைத் தந்து கொண்டிருக்கிறார். பக்தர்கள் ஆன்மீகப் பூரண நிலையை அடைய வழிகாட்டுகிறார். அருணகிரிநாதரின் அருளாசி நமக்கு என்றும் கிடைக்கட்டும். அனைத்து அருளாளர்கள் மற்றும் ரிஷி முனிவர்களின் அருளாசி மனிதகுலத்துக்கு என்றென்றைக்கும் கிடைக்கட்டும்.

 “அறுமுகனருளால் பாவி ஞானியாக மாறிய அருணகிரிநாதரின் அற்புத சரிதம்” என்ற ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆய்வு நூலிலிருந்து (112 பக்கங்கள் கொண்டது) தொகுக்கப்பட்டது.

அருளாளர் அருணகிரிநாதரின் சமாதி-கோவில்

அருணகிரிநாதர் அடக்கமான இடம்

படம் 1: அருணகிரிநாதரின் புனிதமான சமாதி மண்டபம். இங்கே அவர்

உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்புரத்தில் அவருக்கு

சிறிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. (படம் 2ஐக் காண்க.)

படம் 2: படம் 1ல் உள்ள அருணகிரியார் சிறிய கோயிலின்  நெருங்கிய தோற்றம்.  ----

முன்னால் பலி பீடமும், பக்கத்தில் கணபதி விக்ரஹமும் உள்ளன.

படம் 3: படம் 2ல் உள்ள கோவிலின் உள்ளே, பலி பீடத்திற்குப் பின்னால்,  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருணகிரிநாதரின் திருவுருவச்சிலை. அதற்கு தினசரி பூஜை செய்யப்பட்டு வருகிறது.



பட்டினத்தார் வரலாறு

பட்டினத்தார் 

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர்.

பட்டினத்தார் வரலாற்றை பார்ப்பதற்கு முன்னர் இவரது முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராவணனின் தம்பி முறை கொண்டவன் குபேரன். ராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் ராவணனின் கடும் தவத்தை மெச்சி வேண்டும் வரம் தருவதாக கூறினார். அதன்படி சிவனின் பக்தனான ராவணன் ஈஸ்வரர் பட்டம் பெற்று ராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெற்றான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெற்றான். விபூஷ்ணனும் வரம் பெற்றான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம் வேண்டுமென சிவன் கேட்டார். அதற்கு சிவனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறினான். சிவனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.

குபேரன் ஒரு முறை பூமியை காண வலம் வந்தான். காவிரி வளம் கொழிக்கும் ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகள் அன்பான மக்கள் சிவனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைத்தான் குபேரன். இதனை கண்ட சிவன் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உனது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிட்டார் சிவன். குபேரனும் பட்டினத்தாராக இப்பூமியில் அவதரித்தார். இதுவே பட்டினத்தாரின் முற்பிறப்பு வரலாறு.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். பிறந்த குழந்தைக்கு திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டார்கள். பெரும் செல்வந்தர்களான வணிகக் குடும்பம் என்பதால் கடல் கடந்து வியாபாரம் செய்து பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க செல்வந்தராக இருந்தார் சுவேதாரண்யன். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் பட்டினத்தார் என்று அழைத்தார்கள். பட்டினத்தார் தனது 16 வது வயதில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் பட்டினத்தார். அந்த ஊரில் இருந்த சிவசருமர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் குளக்கரையில் கண்டெடுத்த குழந்தை என்று கூறி பட்டினத்தாருக்கு குழந்தையை தத்து கொடுக்கும்படி கூறி மறைந்தார். சிவன் கூறியபடியே சிவசருமர் திருவெண்காடரிடம் குழந்தையை கொடுத்து விட்டார். மகிழ்ந்த பட்டினத்தார் இறைவன் அளித்த குழந்தையாக எண்ணி குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பட்டினத்தார் கடல் கடந்து நவரத்தினங்களை வாணிபம் செய்து வந்தார். மருதவாணருக்கு வாலிப வயது வந்ததும் தானும் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்ய சென்றார்.

பட்டிணத்தார் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறக்கும் போதே மிகுந்த செல்வந்தர். அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருக்கும். வாசலில் முத்துக்களால் ஆன பந்தல் அமைத்திருப்பார். அந்நாட்டு அரசர் நகர்வலம் வந்தபோது இதனை கண்டு திகைத்துபோய் பட்டினத்தாரை அழைத்து நாளை முதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும் என கூறினார். மறுநாள் பட்டினத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்தினார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டினத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்ற சொன்னேனே என கேட்டார். பட்டினத்தாரும் ஆம் மன்னா தங்கள் உத்தரவுப்படி வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூறினார். இதனைக்கேட்ட மன்னர் பொறாமையால் முத்துப்பந்தலை எரிக்க காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் முத்துப்பந்தலை எரித்துவிட்டனர். இதனைக்கண்ட பட்டினத்தார் அடுத்தநாள் வைரங்களால் ஆன பந்தலை போட்டுவைத்தார். இதனைக்கண்ட மன்னர் அதற்கு மேலும் பேச வழியின்றி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவ்வளவு பெரிய செல்வந்தராக வாழ்ந்திருந்தார் பட்டினத்தார்.



சில நாட்கள் கழித்து திரும்பிய மருதவாணர் வியாபாரம் செய்யும் இடத்தில் தந்தையிடம் பெட்டி பெட்டியாக கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மகன் சம்பாதித்து கொண்டு வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவரட்டி இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்பினால் தவிட்டு எருவைக்கொண்டு வந்திருக்கின்றானே என்று கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் வைரங்களும் வைடூரியங்களும் இருப்பதை பார்த்து அதிர்ந்த பட்டினத்தார் மகனைக்காண வீட்டிற்கு வந்தார். மருதவாணர் தனது தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து தந்தை வருவார் அவரிடம் இதனைக் கொடுத்துவிடுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மருதவாணரை தேடி வீட்டுக்கு வந்த பட்டினத்தார் நடந்தவைகள் அனைத்தையும் கேள்விப்பட்டு மருதவாணர் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ஒர் ஓலைசுவடி இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்ததும் பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்.

பட்டினத்தார் இல்லற வாழ்க்கையை துறந்து இடுப்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூண்டார். இதனைகண்ட அவரது தாய் எனக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது அக்கடமையை செய்யாமல் நீ செல்லவேண்டாம் என்று தடுத்தார். தாயாரிடம் தங்களுக்கான கடமை வரும் நேரம் நானே உங்களிடம் வந்து என் கடமையை செய்வேன் என்று உறுதியளித்துவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார். பட்டினத்தாரின் செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் என்பவர் பட்டினத்தாரிடம் வந்து உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிவிட்டேன். எனக்கு சொந்தம் இல்லாத சொத்தை நான் எப்படி என்ன செய்யவேண்டும் என்று கூறமுடியும் என்று சொல்லி விட்டு ஊருக்கு வெளியே ஒரு கோவிலில் அமர்ந்துவிட்டார்.

அந்நாட்டின் மன்னர் பட்டினத்தாரின் செய்கையை கேள்விப்பட்டு அவரை தேடி சென்றார். மரத்தடியில் அமர்ந்தருந்த பட்டினத்தாரிடம் இந்நாட்டின் அரசன் நான் என்னுடைய சொத்துக்களால் வைத்து என்னால் கூட தங்களுடன் போட்டி போட முடியவில்லை. இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் சிறிய இடுப்பு வேட்டியுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் தங்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. தாங்கள் மீண்டும் பழையபடி வீட்டுற்கு செல்லுங்கள் என்று சொன்னார். இதனைகேட்ட பட்டினத்தார் அன்று என்னுடைய வீட்டிற்கு தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன். நீங்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன். மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் இதுவே நான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி என்றார். இதனை கேட்ட மன்னன் தலைகுனிந்து அங்கிருந்து சென்றுவிட்டர்.

பெரும் செல்வந்தராய் இருந்த பட்டினத்தார் மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து ஒருவேலை உணவிற்கு அடுத்தவரிடம் யாசகம் பெற்று பரதேசி போன்று இருப்பதை கண்ட பட்டினத்தாரின் சகோதரி தனக்கு அவமானமாக இருப்பதால் அப்பம் செய்து அதில் கொடிய விஷத்தை கலந்து பட்டினத்தார் உண்பதற்காக கொடுத்தார். தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறினார். சகோதரியின் வீட்டின் கூறையில் தீ பிடித்து மளமளவென எரியத்துவங்கியது. பட்டினத்தாரின் ஞானத்தை உணர்ந்த சகோதரி இவரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் அறிந்து திருந்தினால் நெருப்பு அணையும் என்று பட்டினத்தார் சொல்ல நெருப்பு உடனே அணைந்துவிட்டது. ஊரில் இருக்கும் அனைவரும் பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்து கொண்டார்கள். பட்டினத்தார் தான் வாழ்ந்த ஊரில் இருந்து கிளம்பி பல சிவ தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது திருவெண்காடு என்னும் ஊரில் இருக்கும் திருவெண்காடரை தரிசித்து பாடல்கள் பாடினார். இத்தலத்தில் பட்டினத்தாருக்கு திருவெண்காட்டு நாதரே குருநாதராக வந்து சிவதீட்சை கொடுத்தார். இத்திருவிழா இகோவிலில் இப்போதும் நடைபெறுகிறது. திருவெண்காடர் என்ற பெயரை இக்கோவிலில் பட்டினத்தார் பெற்றார்.

மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் வலம்புரநாதர் இறைவனை தரிசிக்க பட்டினத்தார் வந்திருந்தார். அவ்வூரில் இருந்த மன்னன் தனது தோசம் நிவர்த்திக்காக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்னதானம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இங்கு வந்த பட்டினத்தார் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அன்னதானம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கிறது காத்திருங்கள் என்று அவர்கள் உணவு தர மறுத்தனர். உடனே பட்டினத்தார் மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்தார். கோவிலில் பல நாட்கள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்தது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பட்டினத்தார் அக்கோவிலில் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரை வணங்கி ஆசிபெற்றனர். மன்னனின் தோசமும் விலகியது.

உஜ்ஜனியின் மாகாளம் என்ற இடத்திற்கு வந்த பட்டினத்தார் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் அமர்ந்து தியானத் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசனாக இருந்தவர் பத்ருஹரி சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தங்கள் இருப்பிடம் செல்லும் வழியில் இருந்த கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை இறைவனுக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த மாணிக்கமாலை இறைவன் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி அரசன் வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். அனைத்து இடங்களிலும் வீரர்கள் திருடர்களை தேடிச்சென்றனர்.

கோயிலில் தியானத்தில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து அவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்த வீரர்கள் அவரை அழைத்துச் சென்று அரசனின் முன்னிலையில் நிறுத்தினார்கள். மாணிக்கமாலை அவரின் கழுத்தில் இருந்ததை பார்த்த பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தானாக தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தன்னை மன்னித்து தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார். பத்ருஹரி அரசன் பட்டினத்தாரின் சீடராகி பத்திரகிரியார் என பெயர் பெற்றார்.

பட்டினத்தார் பத்ரகிரியாரிடம் திருவிடைமருதூர் கோவில் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் காலம் வரும் போது அங்கு வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பத்ரகிரியார் குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்து தினமும் பிச்சை ஏற்று மானசீகமாக குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்கு சிறிது உணவு கொடுத்தார். அன்று முதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. சில வருடங்கள் கழித்து பட்டினத்தார் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்தார். பட்டினத்தார் வருவதை பார்த்த பத்ரகிரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். குரு தனக்கு இறைவனை அடையும் வழியை காண்பிக்க போகிறார். இறைவனிடம் செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சியில் பட்டினத்தாரை வணங்கி நின்றார்.

பத்ரகிரியாருக்கு ஆசி வழங்கிய பட்டினத்தார் மேற்கு வாசலில் அமர்ந்திருக்குமாறும் தான் கிழக்கு வாசலில் அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு கிழக்கு வாசலில் அமர்ந்துவிட்டார். சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஓர் ஏழை வடிவத்தில் வந்து பட்டினத்தாரிடம் பசிக்கிறது உணவு இருந்தால் கொடுங்கள் கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே சென்று அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை தங்களிடம் அனுப்பினார் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என்று கூறினார். பதறிப்போன பத்திரகிரியார் நாடு அரசபதவி சொத்துக்கள் என அனைத்தையும் துறந்த எனக்கு இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பிச்சை ஓடும் உடைந்து போனது. பத்ரகிரியாருக்கு இருந்த சிறிய பற்றும் போனது. மேலும் சில வருடங்கள் பட்டினத்தாரும் பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோவிலிலேயே ஆளுக்கொரு வாசலில் அமர்ந்திருந்தார்கள்.

ஞானியாகிய பத்திரகிரியாரிடம் உணவு சாப்பிட்டதன் விளைவாக இறந்த நாய் தனது அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தது. தனது தந்தையிடம் அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவமுனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணை விசாரிக்க பெண் தான் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினாள். மேலும் பெண் பிறப்பதற்கு முன் தன் நாட்டில் நடந்த சம்பவங்களை சில கூறினாள். ஆச்சரியமடைந்த அரசரும் பெண் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்பினார். தவமுனிவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அரசர் தனது பெண்ணை அழைத்துச் சென்றார்.


திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் மேற்கு வாசலுக்கு வந்த இளவரசி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கினாள். தாங்கள் உணவு கொடுத்து பசி தீர்ந்த தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். நான் முதுமையில் இருக்கின்றேன். தங்களோ சிறு பிள்ளை. இறைவனை தேடி நாடு செல்வம் அரச சுகங்கள் அனைத்தையும் துறந்து சன்யாசியாகி இங்கு அமர்ந்திருக்கின்றேன். மீண்டும் உலக பந்த பாசத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை ஆகவே சென்றுவிடுங்கள் என்று கூறினார். இளவரசி பிடிவாதமாக இருந்தாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் வந்தார். குருவே எனக்கு என்ன சோதனை இது. எனக்கு முக்திநிலை கிடையாதா என்று கேட்டார்.

பட்டினத்தார் எல்லாம் மகாலிங்கன் செயல் அவரை தரிசியுங்கள் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் சென்றாள் அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் இளவரசியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முக்தி அளிக்காமல் தன்னுடைய சிஷ்யருக்கு முக்தி கொடுத்துவிட்டாய். தனக்கு எப்போது என்று முக்தி கிடைக்கும் என்று இறைவனை வேண்டினார். அப்போது அசிரிரியாய் இறைவன் குரல் கேட்டது. இறைவனை நம்புகிறவனை விட குருவை நம்பும் சீடன் மிகச்சிறந்தவர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி அளித்தோம் உமக்கு நுனிக்கரும்பு என்று இனிக்கிறதோ அன்று முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறினார். மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருந்து கிளம்பினார். பத்திரகிரியார் பாடிய பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.


பட்டினத்தார் தனது தாயாரின் இறுதி காலம் வந்துவிட்டதை அறிந்து தாயார் இருக்கும் ஊருக்கு வந்தார். தாயின் இறுதி சடங்கின்போது மரத்திலான விறகில் தனது தாயார் உடலை வைக்க வேண்டாம் வாழை மர மட்டையில் வையுங்கள் என்றார். அவர் கூறியபடியே உறவினர்கள் பச்சை வாழை மட்டையில் வைத்து சிதை அடுக்கினார்கள். அப்போது அவர் தாயை எண்ணி பாடல்கள் பாடினார். உடனே பச்சை வாழை மட்டை எரியத்தொடங்கியது. தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது கடமையை நிறைவேற்றினார் பட்டினத்தார்.

சேந்தனார் என்பவர் பட்டினத்தார் செல்வந்தராக இருக்கும் போது அவருக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர். ஊருக்குள் பட்டினத்தார் வந்திருக்கும் தகவல் அறிந்த சேந்தனாரின் மனைவியும் மகனும் பட்டினத்தாரிடம் வந்து அழுது தொழுது முறையிட்டனர். ஜயா தங்களிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த சேந்தனாரின் மனைவி நான். இவன் எங்கள் பிள்ளை. தங்களின் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த தங்களின் கணக்குபிள்ளை சேந்தனாரை மன்னர் சிறையில் அடைத்து விட்டார். தாங்கள்தான் சிறையில் இருந்து அவரை விடுவித்து அருள வேண்டும் என வேண்டினார்கள். அனைத்தையும் கேட்ட பட்டினத்தார் திருவெண்காடு சுவாமி சந்நிதிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று இறைவனை துதித்து பாடினார்.

பட்டினத்தாரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் வினாயகரை அழைத்து அரசனின் சிறையில் இருந்து சேந்தனாரை விடுதலை செய் என்றார். வினாயகர் துதிக்கையை நீட்டி சிறைச்சாலையில் இருந்த சேந்தனாரை விடுதலை செய்து பட்டினத்தார் முன் விட்டார். நடந்தது எதையுமே அறியாமல் தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல எழுந்த சேந்தனார் தன் எதிரில் பட்டினத்தார் இருப்பதைக் கண்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார். குருநாதா அரசர் வைத்த சிறையில் இருந்து விடுதலை அளித்ததைப் போல பிறவிப் பெருங்கடலில் இருந்தும் அடியேனை விடுவிக்க வேண்டும் என வேண்டினார். சேந்தனாரின் பக்குவ நிலையை அறிந்த பட்டினத்தார் சேந்தா குடும்பத்தோடு நீ தில்லைக்குப் போய் காட்டில் விறகு சேகரித்து வாழ்க்கை நடத்து. தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்து வா நீ நினைத்தது நடக்கும் என்று சொல்லி வழிகாட்டினார். குருநாதரையும் திருவெண்காட்டு ஈசனையும் வணங்கிய சேந்தனார் பட்டினத்தார் சொற்படி தில்லையை அடைந்து அதன்படியே வாழ்க்கை நடத்தி இறைவனடி சேர்ந்தார்.

சீடர் பத்திரகிரியார் முக்தி அடைந்த பிறகு பட்டினத்தார் சிதம்பரம் கனகசபையையில் நடராஜப் பெருமானின் நடனத்தை தரிசித்தார். அங்கிருந்து வெளிவந்ததும் பசி உண்டாயிற்று. பட்டினத்தாரின் பசியைப் போக்க அன்னை சிவகாமசுந்தரி பெண் வடிவில் வந்து உச்சிக்காலப் பிரசாதத்தை அவரிடம் தந்தாள். பட்டினத்தார் உண்டு பசியாறினார். பட்டினத்தார் பசியாறியதும் அம்பிகை அங்கிருந்து மறைந்தாள். அதன் பின்னரே அவருக்கு உண்மை தெரியவர உலகாளும் அன்னையே எதிரில் வந்து உணவு தந்தும் உணராமல் ஏமாந்து போனேனே என புலம்பி பாடல்கள் பாடினார்.

பட்டினத்தார் காஞ்சியை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித் திருவகவல் முதலிய பாடல்களைப் பாடி சில நாட்கள் தங்கினார். ஒரு நாள் பசி தாங்காமல் இறைவனை நினைத்து பாடல்கள் பாட அம்பிகை காமாட்சி சுமங்கலி வடிவத்தில் வந்து அவருக்கு உணவளித்தாள்.

காளத்தி நாதனை தரிசிக்க காளாத்தி நோக்கி நடந்தார். இறைவனை தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் பகல் இரவு பாராமல் எப்போது உன்னைக் காணவல்லேன் காளத்தி ஈஸ்சுரனே என்றபடி காட்டிற்குள் நடந்து கொண்டிருந்த பட்டினத்தாருக்கு காட்டில் இருந்த கொடூரமான ஜீவன்கள் கூட உதவி செய்தன. காட்டு யானைகள் முன்னால் நடந்து போய் முள் சிறுகட்டைகள் முதலியவற்றை நீக்கி வழியை உண்டாக்கின. புலிகள் தங்கள் வால்களால் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தன. வாயில் புல் கொண்ட மான்கள் அணிவகுத்து நின்று வழி காட்டின. மயில்கள் தோகைகளாலும் பறவைகள் சிறகுகளாலும் விசிறியும் நிழல் தந்தும் உதவின. குரங்கு முதலான விலங்கினங்கள் உணவுக்கு காய் கனி கிழங்குகளைக் கொண்டு வந்து தந்தன. பட்டினத்தாரின் உள்ளம் நெகிழ்ந்தது. என்ன செயல் என்ன செயல் அனைத்து பெருமையும் காளத்தி ஈசனுக்கே உரியது என்று பாடல்கள் பாடி காளாத்திஸ்வரரை தரிசித்தார்.

கரும்பை காணும் போதேல்லாம் நுனிக்கரும்பு இனிக்கிறதா என்று சாப்பிட்டு பார்த்து ஊர் ஊராக சிவனை தரிசித்துக்கொண்டு வந்தார். சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் வந்த பொழுது அவருக்கு நுனிக்கரும்பு இனித்தது. முக்தி அடைய நேரம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருக்கும் கடற்கரைக்கு சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு தனது சித்துக்கள் மூலம் இனிப்புகள் கொடுத்து மகிழ்வித்தார்.
தன் அமர்ந்து கொள்கிறேன் என்னை ஒரு கூடை கொண்டு முடிவிடுங்கள் நான் வேறு இடத்தில் இருந்து வருகிறேன் இப்படியாக நாம் விளையாடலாம் என்றார். மகிழ்ந்த சிறுவர்கள் பட்டினத்தாரை ஒரு கூடையை வைத்து மூடிவிட்டு கூடையை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பட்டினத்தார் வேறு இடத்தில் இருந்து வந்தார். குழந்தைகள் வியப்போடு ஓடி வந்தார்கள். மறுபடியும் தன்னை மூடிவிட சொன்னார். வேறு இடத்தில் இருந்து வந்தார். பல தடவைகள் இவ்வாறு நடந்தது. சிறுவர்களுக்கு உற்சாகம் உண்டானது. ஒரு முறை மூடிய பொழுது வெளியில் எங்கும் இருந்து பட்டினத்தார் வராததால் கூடையை திறந்து பார்த்தார்கள் சிறுவர்கள். அதனுள் பட்டினத்தார் இல்லை. சிவலிங்கமாக காட்சியளித்தார்.

பட்டினத்தார் பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை

  1. கோயில் நான்மணிமாலை
  2. திருக்கழுமல மும்மணிக்கோவை
  3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது

நந்திகேஸ்வரர் போற்றி


நந்தீஸ்வரர் போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்க முடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி

ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி

ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி
ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல்உடையவனே போற்றி
ஓம் மகா காளனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

ஓம் மகாதேவன் கருணையே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
ஓம் கையிலையின் காவலனே போற்றி
ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி.

அனுமன் சாலீஸா


துன்பம் போக்கும் ஸ்ரீ அனுமன் சாலிசா

பாராயண முறை:

உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தூய ஆடை அணிந்து, தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். நெய் விளக்கேற்றி, தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கோயிலிலோ,  வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.

நான்கு கனிகள்:

1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை.

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய், மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன் .

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது, துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.

எட்டுவித சித்திகள்:

1. அணிமா-அணு போலாதல் 2. மஹிமா-எல்லையற்று எடை உடையவராதல்              3. கரிமா-எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா-எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி-நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம்-விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம்-இறைவனைப் போலாதல் 8. வசித்வம்-அனைவரையும் அடக்கி ஆளுதல்

ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

நன்றி: ஸ்ரீ வன்னி விநாயகர் புத்தக நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.

சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள்

 


சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள்
(பூர்ண வித்யா - என்ற நூலில் இருந்து )

பல சிஷ்யர்கள் அனேக சமயங்களில் குருவிடம் செயல்படும் தன்மை, பழகும் விதம், பேசுகின்ற முறை, தனித்து சொல்கின்ற சொற்கள், கேட்கின்ற விதம் முதலியன ஸத்சிஷ்யர்களுக்கு உகந்தவைகளாக காணப்படவில்லை.

அதலின் சிஷ்யர்கள் விலக்க வேண்டிய சில தவறான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன:

1.குருவை கேலி அல்லது தூஷணை செய்தல்

2.குருவை தன் மனம்படி செயல்பட கட்டளையிடல்

3. குருவுடன் கொடுக்கல் வாங்கல் முதலியவை செய்தல்

4.குருவின் எதிரியோடு பழகுதல். குரு தூஷணையை காதால் கேட்டல்

5. குருவின் சொல்லும் செயலும் - உலக இயல்புக்கு மாறாக உள்ளதே என்று நினைத்தல்; சொல்லுதல்

6. குருவும் மனிதப்பிறவிதானே அதனால் குறைகள் இருக்கும் என்று எண்ணுதல்

7. பகவானே குருவாக எழுந்தருளி இருக்கிறார் என்பதில் சந்தேகம்

8. குரு ஸமர்ப்பணத்தில் லோபமான எண்ணம்

9. குருவின் கட்டளையை உலகுக்கு பயந்து செய்யாமல் இருத்தல்

10. பிறர் பார்க்கிறார்களே என்று குருவுக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்படுதல்

11. குருவை நீண்ட நாட்கள் பார்க்காது இருத்தல்

12. குருபாதுகை தான் கிடைத்து விட்டதே இனி ஸ்தூலமாக குரு எதற்கு என்ற எண்னம்

13. குருவிடம் இன்ன பலன் பெறுவதற்கு இன்ன மந்த்ரங்கள் கொடுங்கள் என்று கேட்பது. இந்த மந்த்ரம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரிடம் கூறுதல்

14. எனக்கு ஒரு விதமாகவும் அவனுக்கு ஒருவிதமாகவும் கொடுத்தீர்களே என்று குருவிடம் கேட்டல்; மந்த்ரம் இவ்வளவு சின்னது தானா? என்று கேட்டல்

15. வேறு சிஷ்யர்கள் குருவிடம் நெருங்கி பழகுதல் கண்டும், அவர்களுக்கு குரு செய்யும் அதிக சலுகைகள், உபசாரங்களைக் கண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அஸூயை(பொறாமை) கொள்ளுதல்

16. பிறர் குருவிடம் பேசும் போது அது என்ன என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தல்

17. எல்லா மந்த்ரங்களும் உபதேசம் பெற்றாகி விட்டது; இனி என்ன பயம் என்ற எண்ணம்

18. (குரு உறவினரக இருப்பின்) உபதேசம் செய்து கொண்ட பின்னரும் உறவு கொண்டாடுதல்

19. உபாஸனைகள் பல இருக்கும் போது, தான் செய்வதே சிறந்தது அல்லது முக்யமானது எனக் கூறிக் கொள்ளல்

20. தான் இதை இவ்வாறு செய்து முடித்தேன் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளுதல்

21. வாழ்கை நடத்த வேண்டிய பணம் இல்லாத நபர்களையும், உபாஸனைக்கு பணம் செலவழிக்க முடியாதவர்களையும் கேலி செய்தல்

22. தன் அனுபவங்களை குருவிடம் கூறாமல் பிறரிடம் கூறுதல்

23. மந்த்ர சாஸ்த்ர ரஹஸ்யங்களை ப்ரஸித்தமாக வெளியே பேசுதல்

24 அங்க ஹீனர்களை கேலி செய்தல்

25 ஸ்த்ரீகளை தூஷித்தல், துன்பம் உண்டாக்குதல் - மரியாதையின்றி அடி என்று அழைத்தல்

26 ஸ்த்ரீகளை அடிமையாக நினைத்தல் கேலியாக பேசி சிரித்தல்

27. எல்லா ஸ்த்ரீகளும் தேவியின் வடிவங்களே என்ற அடிப்படை உண்மையை நம்பாமை

28. நான்தான் குருவிற்கு அத்யந்தம், ப்ரியமானவன் என்று கூறல்


பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்


முத்தி தரும்வேத மொழியாம் புலம்பல்சொல்ல

அத்தி முகவன் தன் அருள்பெறுவதெக் காலம். 1

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம். 2

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து

தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம். 3

தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு

வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம். 4

ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல்

மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். 5

மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்

காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம். 6

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு

மாயா அனுபூதி வந்தடுப்ப தெக்காலம். 7

சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து

பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம். 8

பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத்

தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம். 9

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி

மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம். 10

பெண்ணினல்லா ராசைப் பிரமையினை விட்டொழிந்து

கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம். 11

வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குல் பைதனிலே

தட்டுண்டு நிற்கை தவிர்வதுவு மெக்காலம். 12

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்

தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம். 13

தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே

சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம். 14

மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல்

தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். 15

பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்

ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம். 16

உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்

புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். 17

வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும்

வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம். 18

பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம். 19

ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். 20

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்

கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம். 21

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்

செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். 22

ஒழிந்தகருத் தினைவைத் துள்ளெழும்புவெள் ளெலும்பாய்க்

கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். 23

அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து

கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம். 24

கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்

உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம். 25

தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள் முன்சூழ்ந்தாற்போல்

மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம். 26

தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல்

ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம். 27

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற

வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். 28

அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்

சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். 29

அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்

தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம். 30

பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக்

குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம். 31

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். 32

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே

ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம். 33

மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். 34

இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே

மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம். 35

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற்

பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம். 36

செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே

சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். 37

கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும்

வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம். 38

ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து

போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம். 39

நவசூத் திரவீட்டை நானென் றலையாமல்

சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். 40

மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக்

கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். 41

இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த

பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம். 42

உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே

அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம். 44

சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு

பாதைதனைக் கழித்துப் பயனடைவ தெக்காலம். 45

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டதுபோல்

பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்காலம். 46

சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்

ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம். 47

தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல்

உடக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம். 48

ஆசைவலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசைமணி தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம். 49

கூறறிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத

பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம். 50

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்

எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம். 51

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 52

பருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்

தெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம். 53

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து

குருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம். 54

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி

யம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம். 55

பற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்

சுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம். 56

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்

சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம். 57

மருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்

உருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம். 58

தன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்

என்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம். 59

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்

தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம். 60

எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்

கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம். 61

கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்

சொன்னபரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம். 62

ஆக மிகவுருக வன்புருக யென்புருகப்

போக வநுபூதி பொருந்துவது மெக்காலம். 63

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்

பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம். 64

அன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்

துன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம். 65

கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்

அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம். 66

தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்

பொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம். 67

ஆதார மூலத் தடியில் கணபதியைப்

பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம். 68

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்

கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம். 69

அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவதெக்காலம். 70

மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம். 71

வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்

தோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம். 72

வட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக்

கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம். 73

உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம். 74

பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந்தானாகி

வேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம். 75

கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்

சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம். 76

கள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங்

குள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம். 77

அட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே

பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம். 78

அறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம்

பிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம். 79

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்

பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம். 80

தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல்

ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம். 81

புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி

யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம். 82

நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள்

கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம். 83

நானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி

தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம். 84

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே

தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம். 85

ஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை

வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம். 86

இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு

சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம். 87

அமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங்

கிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம். 88

கூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்

மாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம். 89

ஊனிறைந்த காயமுயிரிழந்து போகுமுன்னம்

நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம். 90

கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த

சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம். 91

தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்

நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம். 92

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்

தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம். 93

காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்

வாசி தனிலேறி வருவதினி யெக்காலம். 94

ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச்

சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம். 95

இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில்

தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம். 96

மூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில்

பாலைஇறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம். 97

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல

ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம். 98

பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில்

சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம். 99

மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று

நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம். 100

ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்

தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம். 101

அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு

மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம். 102

வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று

சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம். 103

மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி

நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம். 104

எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்

கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம். 105

என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும்

தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம். 106

ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை

வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம். 107

ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன்

காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம். 108

மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை

நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம். 109

முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால்

உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம். 110

கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்

விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம். 111

கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க

நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம். 112

ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும்

பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம். 113

நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை

முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம். 114

முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்

அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம். 115

சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை

நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம். 116

வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும்

யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம். 117

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே

அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம். 118

அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற

குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம். 119

நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந்

தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம். 120

என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு

தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம். 121

ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல்

வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம். 122

ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து

வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம். 123

காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல்

பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம். 124

பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச்

செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம். 125

ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்

கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம். 126

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம். 127

சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற்

றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம். 128

ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்

ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். 129

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்

புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம். 130

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்

பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். 131

தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை

வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம். 132

பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை

ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம். 133

ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று

பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம். 134

காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம்

பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம். 135

ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின்

நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம். 136

குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்

பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம். 137

மத்தடுத்து நின்று மருளாடு வார்போல

பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம். 138

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்

வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம். 139

என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின்

தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம். 140

உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக்

கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம். 141

வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல்

பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம். 142

பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல்

பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம். 143

நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய்

ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம். 144

பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்

காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம். 145

பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல்

நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம். 146

காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே

ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம். 147

உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி

இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம். 148

வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து

நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம். 149

பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல்

விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம். 150

அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்

கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம். 151

ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே

எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம். 152

பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு

நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம். 153

ஆசார நேய அனுட்டானமும் மறந்து

பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம். 154

பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே

அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம். 155

ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை

ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம். 156

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்

சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம். 157

அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த

சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம். 158

இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல

முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம். 159

ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந்

தானாகி நின்ற தனையறியவ தெக்காலம். 160

என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க

உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம். 161

இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச்

சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம். 162

மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம். 163

என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த

உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம். 164

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்

நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம். 165

நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல்

சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம். 166

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து

மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம். 167

கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல்

வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம். 168

கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல்

உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம். 169

அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல்

கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம். 170

பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல்

உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம். 171

நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற

வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம். 172

சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்

ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம். 173

இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்

கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம். 174

கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க

உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம். 175

வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்

கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம். 176

கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல்

உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம். 177

இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல்

அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம். 178

மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்

என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம். 179

கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல்

கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம். 180

பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை

காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம். 181

செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக

வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம். 182

ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப்

பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம். 183

ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை

நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம். 184

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்

போகா உடலகன்று போவதென்ப தெக்காலம். 185

நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு

வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம். 186

வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை

திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம். 187

எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க்

கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம். 188

உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங்

கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம். 189

ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்

ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம். 190

சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்

சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம். 191

போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்

தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம். 192

நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம். 193

அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்

பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம். 194

நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்

ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம். 195

தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்

பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம். 196

நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்

சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம். 197

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்

திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம். 198

மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்

தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம். 199

பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே

கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம். 200

வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்

கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம். 201

பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி

ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம். 202

அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து

முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம். 203

நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல்

நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம். 204

எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல்

உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம். 205

அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல்

என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம். 206

அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல்

சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம். 207

பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று

மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம். 208

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை

என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம். 209

ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல்

ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம். 210

தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல்

உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம். 211

சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக்

காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம். 212

என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து

தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம். 213

தன்னை மறந்து தலத்து நிலைமறந்து

கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம். 214

என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து

தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம். 215

தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே

உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம். 216

இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல்

துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம். 217

ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்

தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம். 218

முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால்

அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம். 219

கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால்

தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம். 220

தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே

ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம். 221

நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து

தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம். 222

தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி

ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம். 223

உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே

மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம். 224

ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந்

தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம். 225

ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில்

மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம். 226

காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு

மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம். 227

நானாரோ நீயாரோ நன்றாம் பரமான

தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம். 228

எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார்

அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம். 229

உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை

நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம். 230

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்

களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம். 231

என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்

முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம். 232

மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்

காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம் 233

ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து

நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம். 234