ஞானதேவர் அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார்
கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான
கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப்
பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத்
தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது,
அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால்
அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு
திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், மனைவியின்
சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச்
சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான்
திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம்
பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி
ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த
நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை
அடைந்தார். அவரைச் சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக்
கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து வேதனைப்பட்டார். பிறகு
காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன்
சேர்ந்து வாழ்வாயாக! என்றார். அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய
விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின. அந்த
தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின்
இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).
அவரை
விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர். வேதங்களையும் உபநிடதங்களையும்
இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர், அவற்றை மிக எளிமையாகப் போதித்து
வந்தார். தான் செய்த தவற்றால், சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு, தான் அடைந்த
துன்பத்தை குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா,
தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை, யமுனை,
சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி, உயிர்த் தியாகம்
செய்தார். ஆதரவற்ற நிலையில் தவித்த குழந்தைகளைக் கண்டு, ஆலந்தி அந்தணர்கள்
மனமிரங்கினர். குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு
செய்தனர். இருப்பினும், பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று
வரும்படி, அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர்கள்
அந்த அந்தணர்கள். அவர்களின் முன், இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன்
நின்றனர். அந்தணர்களின் புனிதக் கடமை, உபநயனம் செய்து கொள்வது ! எங்களது
ஆலந்தி கிராமத்து அந்தணர்கள், எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக
உள்ளனர். ஆனாலும், உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர்.
எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள் ! என்றனர். அதைக் கேட்டதும் அந்தப்
பண்டிதர்கள், உபநயனம் செய்துகொள்ள, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனப்
பரிகசித்தனர். அதில் ஆவேசமான மூவரும், மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர்.
உடனே பண்டிதர்கள், முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த மக்கள் நீங்கள்.
எனவே, உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை. அது, எங்களைப் போன்ற உயர்
மக்களுக்கே உரித்தானது! என்று கர்வத்துடன் சொன்னார்கள். இதைக் கேட்டு,
மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன், கொதித்து எழுந்தான்; அவனுக்கு வயது
எட்டு.
அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக்
கிடாவைச் சுட்டிக் காட்டி, வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே
உரியதல்ல! இதோ... இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு, அந்த
எருமையின் முதுகில் கைவைக்க... அப்போது நிகழ்ந்தது அந்த அதிசயம் ! மூவரும்
வேதம் ஓதி நிறுத்தினார்கள், அல்லவா... அந்த இடத்தில் இருந்து வரி
பிசகாமல், வேதம் ஓதத் துவங்கியது, எருமை. இறுதியில், பிறப்பால் தாழ்ந்த
குலத்தவனாக இருப்பினும், கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும்
ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி, நான்கு கவிதைகளை
அழகாகச் சொல்லிற்று. எருமை வேதம் ஓதியதைக் கேட்டு, வாயடைத்துப் போனது
பண்டிதர் கூட்டம். அனைவரும் ஓடோடி வந்து, சிறுவனை நமஸ்கரித்தனர். தனது
மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று, குண்டலினி யோகம்
முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருநாதர் அறிவுரைப்படி, தனது 15-வது
வயதில், மராட்டிய மொழியில், பாமரர்க்கும் புரியும் வகையில், 18
அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார், ஞானேஸ்வர். பாவார்த்த
தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை, பிறகு அவரது
திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது. அத்வைத சித்தாந்தத்தை
விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல், அவரின் மற்றொரு படைப்பு. அவர்
நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம் ! இறை நம்பிக்கையற்ற ஒருவனைத்
திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி, கொதிக்கச் செய்து, தனது
சகோதரி முக்தாபாயை, தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார்,
ஞானேஸ்வர். தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின் மீது
அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர்
சாங்கதேவரை, தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை அப்படியே நகர்த்தி தடுத்து
நிறுத்தி, அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். சகோதர -
சகோதரிகள் மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி,
மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள்
செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22
- வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர்,
கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி
மகாசமாதியானார். தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு
இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட
ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.
ஸ்ரீ இரமண மகரிஷி வாழ்க்கை வரலாறு "Ramana Maharshi"
அன்று ஆருத்ரா தரிசனம் ! அதாவது, மார்கழி திருவாதிரை நட்சத்திரம்!
திருச்சுழி பூமிநாதசுவாமி திருக்கோயிலில் நடராஜர் புறப்பாடு சிறப்பாக
நடந்தது. வீதி உலா இனிதே நிறைவு பெற்று திருக்கோயிலில் சுவாமி
பிரவேசிக்கும் நேரம்! பூமிநாதர் திருக்கோயில் மணி ஒலித்தது! அதே நேரத்தில்
அருட்குழந்தை ரமணர் பூவுலகில் அவதரித்தார்.
ஜோதி தரிசனம் பூமிநாதர்
திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்ற நேரத்தில், கண்பார்வை இல்லாத
ஒரு பெண்மணிக்கு ஜோதி தரிசனம் கிடைத்தது! ஆம்! ரமணரின் தாய்
அழகம்மாவிற்குப் பிரசவம் பார்க்க வந்த பெண்மணி கண்பார்வை இல்லாதவர் ரமணர்
பூமியில் அவதரித்த அதே நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு ஒரு ஜோதி தரிசனம்
கிடைத்தது!
தலைச்சுழியை மாற்றும் திருச்சுழி பாண்டிய நாட்டிலுள்ள
பதினான்கு பாடல் பெற்ற சிவத்தலங்களில் பத்தாவது திருத்தலம் திருச்சுழியல்.
இது மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் விருதுநகர்
மாவட்டத்தில் உள்ளது.
திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த சீர்காழி,
பிரளய வெள்ளத்தில் தோணியப்பர் திருவருளால் மிதந்து தப்பித்தது! ரமணர்
உதித்த திருச்சுழியல் பிரளய வெள்ளம் பாதாளத்தில் புகுந்ததால் பிழைத்தது!
சிவபெருமான் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்து பாதாளத்தில்
செலுத்திக் காத்ததால் இத்தலத்தை திருச்சழியல் என அழைத்தனர் தற்காலத்தில்
திருச்சுழி என வழங்கி வருகிறது திரிசூலபுரம், முத்திமாநகர் மகா
ஆவர்த்தபுரம், ஜோதிவனம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.
சிவபக்தர் சுந்தரம் ஐயர் தேவாரம்
போற்றும் திருச்சுழி பூமிநாதப் பெருமானை அன்றாடம் வழிபடும் பக்தரான
சுந்தரம் ஐயர், அழகம்மா என்ற பெண்ணை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார்.
சுந்தரம் ஐயர் உழைப்பால் உயர்ந்து, செல்வம், சேர்த்து அறச்செயல்கள்
புரிந்தவர்.
கணக்கப்பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர், மனுக்களும்
விண்ணப்பங்களும் எழுதிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார். சட்ட
நுணுக்கங்களைக் கற்று பட்டம் பெறாத வழக்கறிஞராக உயர்ந்தார். சட்ட உதவியைத்
தொழிலாகக் கருதாமல் தம்மை நாடி வந்தவர்களுக்கு நல்லதே செய்யும் பண்பாளராக
விளங்கினார். அதனால் அப்பகுதியில் சுந்தரம் ஐயர் மக்களின் நன்மதிப்பைப்
பெற்றிருந்தார்.
ஆங்கிலக் கணக்குப்படி 1879 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் முப்பதாம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் தம்பதியரின் மகனாக ஸ்ரீரமணர்
அவதரித்தார். சுந்தரம் ஐயர் தம்பதியர் தங்கள் மகனுக்கு வேங்கடராமன் என்று
பெயர் சூட்டினர். குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த அனைவரும்
ராமன் என்று செல்லமாக அழைத்தனர்.
சுந்தரம் ஐயர் தம்முடைய
குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க விரும்பினார். பள்ளிமடம்
வட்டத்திலிருந்த ஒரு மிஷனரி ஆரம்பப்பள்ளியில் வேங்கடராமனைச் சேர்ந்தார்.
வேங்கடராமனின் மனம் பள்ளிப்படிப்பில் ஈடுபட வில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் கல்வியில் அவருக்கு நாட்டம் இல்லை.
கால்பந்து
விளையாடுதல், மல்யுத்தம் பயிறுதல், ஓடுதல், நீந்துதல், கபடி விளையாடுதல்
போன்றவை வேங்கடராமனுக்கு விருப்பமான விளையாட்டுக்களாக இருந்தன. அதனால்
அவனுக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களிடையே வேங்கடராமன்
முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தான் கௌண்டின் யநதி
பள்ளிக்கு அருகில் இருந்தது, அந்த நதிக்கரையில் வேங்கடராமன் தனது
நண்பர்களுடன் விளையாடுவான் காளையார்கோயில் வேங்கடராமன் படித்த பள்ளிக்கு
அருகில் இருந்தது. திருச்சுழியிலிருந்து கோயில் பூஜை செய்யும் குருக்கள்,
பட்ட,ர் வேத விற்பன்னர்கள் ஆகியோர் அன்றாடம் காளையார் கோயிலுக்குச்
செல்வார்கள் அவர்களுடன் சிறுவன் வேங்கடராமனும் சென்று அங்கு விளையாடுவான்.
ஒரு
முறை சுந்தரம் ஐயரின் முன்னோர் ஒருவரின் இல்லம் தேடி வந்த சந்தியாசியை
அவர் உரிய முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை அதனால் சந்நியாசி கோபம் கொண்டு
சாபம் கொடுத்துவிட்டார் உங்கள் பரம்பரையில் தலைமுறைக்கு ஒருவர் வீட்டை
விட்டு வெளியேறி கையேந்தி பிச்சை வாங்கிச் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று
அந்த சந்தியாசி சபித்தார்
அச்சாபம் குறித்து சுந்தரம் ஐயர்
அழகம்மாவிடம் கூறினார். அச்சாபப்படி நடந்து வருவதாகவும் விளக்கினார்.
சுந்தரம் ஐயரின் தகப்பனாரின் சகோதரர் ஒருவர் காவியுடுத்துத் துறவியாகித்
திரித்து கொண்டு இருந்தார். சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வீட்டை விட்டு
வெளியேறிப் பரதேசியாகத் திரிந்தார்.
திண்டுக்கல்லில் வேங்கடராமன்
ஐந்தாம் வகுப்பு வரைகற்றான். திண்டுக்கல் பகுதியில் இருந்த மலைகள்,
கோயில்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி! நண்பர்களுடன் அங்கெல்லாம்
அலைந்து திரிந்து விளையாடி மகிழ்வான். வேங்கடராமன் திண்டுக்கல்லில்
படித்துக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சுந்தரம் ஐயர் காலமானார்
அழகம்மாவும் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்தச் சோகத்திலும்
வேங்கடராமன் சிந்தனையில் மூழ்கினான்.
உடல்தான் சுந்தரம் ஐயரா?
அவருடைய உயிர் எங்கே போயிற்றது? மரணம் என்பது என்ன? மரணத்தைத் தவிர்க்க
இயலாத? உயிரை எடுத்துக் கொண்டு போவது யார்? என்றெல்லாம் பலவாறு வேங்கடராமன்
சிந்திக்கலானான். சுந்தரம் ஐயரின் இறுதிக்கடன்கள் முடிந்தன. கூட்டுக்
குடும்பங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் சுந்தரம் ஐயரின் சதோதரர்கள்
அழகம்மா மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசித்தனர். குடும்ப
நண்பரான பூமிநாதசுவாமிதிருக்கோயில் குருக்களும் உடன் இருந்தார்.
சுந்தரம்
ஐயரின் தம்பிகளில் ஒருவரான சுப்பையா மதுரையில் வசித்து வந்தார் மற்றொரு
தம்பியான நெல்லையப்பர் மானாமதுரையில் இருந்தார். நாகசாமி மற்றும்
வேங்கடராமன் மதுரையிலுள்ள சுப்பையா வீட்டில் தங்கி, படிப்பைத் தொடருவது
நல்லதென எண்ணினார். அழகம்மாள் குழந்தைகள் நாகசுந்தரம், அலமேலு ஆகிய
மூவரையும் நெல்லையப்பர் தன்னுடன் மானமதுரைக்கு அழைத்துச் செல்லத்
தீர்மானித்தார் சுந்தரம் ஐயரின் குடும்பச் சுமையை அவருடைய சகோதரர்கள்
அன்புடன் பங்கிட்டுத் தாங்க முற்பட்டனர்.
மானாமதுரையில்
தங்கியிருந்த அழகம்மா மற்றும் குழந்தைகளை நெல்லையப்பர் பரிவுடன் கவனித்துக்
கொண்டார். அதே நேரத்தில் மதுரைக்குச் சென்ற நாகசாமி கல்லூரியில் சேர்ந்து
படித்தான். தம்பி வேங்கடராமன் வழக்கம் போல் பள்ளிக்கல்வியில் நாட்டம்
இல்லாமல் இருந்தான்.
வேங்கடராமன் ஆங்கிலத்தில் மோசமாகவும் தமிழ்
தவிர மற்றப் பாடங்களில் சுமாராகவும் மதிப்பெண்கள் வாங்கினான். தமிழில்
ஆர்வம் ஆதிகம் இருந்தது நன்னூல் சூத்திரங்கள் வேங்கடராமனுக்கு மனப்பாடமாக
இருந்தன இந்தச் செய்திகளை சுப்பையா கடிதம் மூலம் அழகம்மாவிற்கு
தெரியப்படுத்தினார் அழகம்மா மதுரையில் இருந்த இரண்டு மகன்களையும் சென்று
பார்க்க விரும்பினார்.
மதுரை சென்ற அழகம்மா வேங்கடராமனுக்கு,
அறிவுரைகளைக் கூறினார். வேங்கடராமன் அவற்றை அமைதியாகக் கேட்டான்.
வேங்கடராமன் விடுமுறை நாள்களில் மலையடிவாரங்ளுக்கும்
திருக்கோயில்களுக்கும் செல்வான். திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர்
என்பவர் தீபத்திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில்
மதுரையில் வேங்கடராமனின் தந்தையின் இளவல் சுப்பையரின் இல்லத்திற்குச்
சென்றார். பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வேங்கடராமன்,
எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டான்.
சொக்குப் பட்டர், நான்
அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார் வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன்
அனைத்தையும் மறந்தான்! தன்னை மறத்த நிலையில் வேங்கடராமன் வேகமாக
மாடியறைக்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து மாடியறையில் இருந்த பெரிய
புராணப் புத்தகத்தை எடுத்து ஈடுபாட்டுடன் படிக்கலானான். சேக்கிழார் இயற்றிய
பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனதில்
மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது!
இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்துணிந்த சிவனடியார்களின் தொண்டு
வாழ்க்கை சிறுவன் வேங்கடராமனின் மனதில் ஆழப் பதிந்தது பள்ளிக் கல்வியில்
நாட்டமில்லாத வேங்கடராமனை ஒரு திருமுறை நூல் கவர்ந்தது விந்தைதான்!
மதுரையில்
சுப்பையாவின் இல்லம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் இருந்தது.
அதனால் வேங்கடராமன் அன்றாடம் கோயிலுக்குச் செல்வான் , மீனாட்சியிடம்
சுந்தரரேசுவரிடமும் தான் நாயன்மார்களைப் போன்ற பயனுள்ள வாழ்க்கை வாழ
வேண்டுமென உள்ளம் உருகி வேண்டிக் கொள்வான் வேங்கடராமனிடம் சிவபக்தியும்
ஞானவைராக்கியமும் வளரலாயிற்று.
மாடியறையில் அமர்ந்து மரணம் முதலான
விஷயங்கள் குறித்துச் சிந்தித்தான் வேங்கடராமன். ஆழ்ந்த சிந்தனை தியானமாக
மாறியது! தியானம் உச்ச நிலையைத் தொட்டது. வேங்கடராமன் சிறிது நேரம்
மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தான் ! அது முதல் அவனுக்கு மரணம் குறித்த
அச்சம் ஒழிந்தது.
கோயிலுக்குச் செல்வதும் தியானம் செய்வதுமே
முக்கியப் பணியாகிவிட்ட வேங்கடராமனுக்குப் படிப்பு அறவே வெறுத்துப்
போயிற்று. ஆர்வத்துடன் ஈடுபட்ட விளையாட்டுக்களும் மகிழ்ச்சியைத் தர வில்லை.
நண்பர்கள் குழாத்தையும் நாடவில்லை.
ஆங்கில இலக்கணப் புத்தகத்தின்
சில பகுதிகளை மூன்று முறை எழுதும் தண்டனையைப் பெற்றான் வேங்கடராமன்.
அதன்படி, இரண்டு முறை எழுதி முடிந்த நிலையில் வேங்கடராமனுக்கு விரக்தியும்
வெறுப்பும் மேலிட்டது. இலக்கணப் புத்தகம், பேனா ஆகியவற்றை வேங்கடராமன்
வீசி எறிந்தான்.
அச்செயலைக் கண்ட அண்ணன் நாகசாமி பெரிதும் கடிந்து
கொண்டார். அதனைப் பொருட்படுத்தாத வேங்கடராமன் அடுத்த நடவடிக்கை குறித்துச்
சிந்தித்தான். அருணாசலம் குறித்த நினைப்பு மேலிட்டது. இனி அருணாசலத்தை
நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!என்ற திடமான, தீர்மானமான முடிவிற்கு
வந்தான். அன்றைய சூழ்நிலை அவனுக்குச் சாதகமாகவே அமைந்தது!
பள்ளிக்கூடத்தில்
இன்று ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருகிறேன் என்று வேங்கடராமன் அண்ணனிடம்
கூறினான். அப்படியா? கீழே இருக்கும் என் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய்
எடுத்துக்கொள்; போகும் வழியில் எங்கள் காலேஜில் கட்டிவிடு என்று அண்ணன்
நாகசாமி கூறினார். அதுவும் அண்ணாமலையார் திருவருளே என்று கருதிய
வேங்கடராமன் ஜந்து ரூபாயை எடுத்துக் கொண்டான்.
இரயில் மார்க்கங்கள் குறித்த ஒரு வரைபடத்தைப் பார்த்ததில் திருவண்ணாமலை பயணத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தெரிந்தது.
நான்
என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக்
கிளம்பிவிட்டேன் . நல்ல காரியத்திற்கே புறப்படுவதால் எவரும் விசனப்பட
வேண்டாம். பணமும் செலவு செய்ய வேண்டாம் உன் சம்பளத்தை இன்னும்
செலுத்தவில்லை ரூ.2 இதோடு கூட இருக்கிறது என்று அண்ணனுக்கு ஒரு கடிதத்தை
எழுதி வைத்தான் வேங்கடராமன்.
அவசரமாக மதுரை இரயில் நிலையத்திற்குச்
சென்றான். அன்று தெய்வாதீனமாக இரெயில் சற்றுக் காலதாமதமாக வந்தது!
திண்டிவனத்திற்குப் பயணச் சீட்டு வாங்கினான் ஒருவாறு விடுதலை பெற்ற
உணர்வோடு வண்டியில் ஏறி அமர்ந்தான். வண்டியும் புறப்பட்டது.
அண்ணாமலை,
அருணாசலம், அருணகிரி ஆகிய சொற்கள் பக்தர்களைச் சொக்க வைக்கும் மந்திரச்
சொற்கள் மகான்களைத் தன்பால் ஈர்த்து, இறையருள் இன்பத்தில் திளைக்கச்
செய்து, புகழும் முக்தியும் அருளும் அற்புதத் திருத்தலம் அண்ணாமலை!
மலையும் அண்ணாமலை! மகிமைமிகு தலமும் அண்ணாமலை தலத்தில் உறையும் மகேசன் பெயரும் அண்ணாமலை!
மதுரையிலிருந்து
திண்டிவனத்திற்கு ரெயில் கட்டணம் இரண்டு ரூபாய் பதின்மூன்று அணா. அது போக
வேங்கடராமனிடம் மூன்று அணாதான் எஞ்சி இருந்தது. திண்டிவனத்திலிருந்து
திருவண்ணாமலை மிகவும் அருகில் இருக்குமென்று வேங்கடராமன் கருதினான்.
வண்டியேறிய பிறகு வேங்கடராமன் வயதான ஒருவர் புதிய வழித்தடம் குறித்துக்
கூறினார். விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வண்டிகள் திருவண்ணாமலை
வழியாகச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூறினார்.
இவனிடம் மீதமிருந்த
சில்லரை அறையணி நல்லூர் வரை செல்லுமளவிற்கே இருந்தது. அங்கே இறங்கி நடந்தே
திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான் மாலை நேரத்தில் அறையணி
நல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன்.
அங்கு ஒரு ஜோதி தோன்றியது சன்னிதியிலிருந்த ஈசன் திருமேனியில் அந்த ஜோதி
ஐக்கியமானது!
திருக்கோவிலூர் பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை
அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான் அடுத்தநாள் காலையில்
திருக்கோவிலூரிலிருந்து ரயிலில் திருவண்ணாமலைக்குப் பயணமானான்
திருவண்ணாமலையை நெருங்கிய உடனேயே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான்
.உடல் சிலிர்த்தது!
அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற மந்திரத்தை உள்ளம்
உருகி ஜபித்தபடி 1886 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன்
பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார். ஈசனும் பாலரமணரைப்
பாசத்துடன் வரவேற்றார்! ஆனால் பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.
தன்
தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கோவணமாகக் கட்டிக் கொண்டார்.
ஜாதி சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார். அனைத்தையும் துறந்த
சுத்தபுருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.
பால் வடியும் முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர்.
எனினும், விஷமிகள் சிலர், அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.
அண்ணாமலையர்
கோயிலில் ஓர் இருண்ட குகை இருந்தது. அதனைப் பாதாளலிங்கக் குகை என்று
கூறுவார். அங்குப் பகல் நேரத்திலேயே இருள் நிறைந்திருக்கும். பாலரமணர்
அதுவே தனது தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார். அங்குச்
சென்று தவத்தில் அமர்ந்தார். ஊண், உறக்கம் இல்லாமல் கடுந்தவம் இயற்றினார்.
உடல் மெலிந்தது. குகைக்குள் இருந்த புழுக்களும் பூச்சிகளும் பாலரமணரின்
உடலைத் துளைத்தன. பாலயோகியின் தொடைப்பகுதி அரிக்கப்பட்டது ஆனாலும் அவருடைய
தவம் கலையவில்லை!
அங்கு அவர் எத்தனை காலம் கடுந்தவம் இயற்றினார்
என்பது எவருக்கும் தெரியாது. சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து
வெளியே வந்தார். உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம்
செய்தார். சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் திருவண்ணாமலைக்கு வருவதற்கு எழு
ஆண்டுகள் முன்பு வந்தவர். வயதிலும் ரமணரைவிட மூத்தவர். உத்தண்டி நயினார்
என்ற சாது பாலரமணரிடம் உபதேசம் பெற வந்தார் அவர் பாலரமணருக்குப் பாதுகாவலாக
இருந்தார். அவர் இல்லாத நேரங்களில் விஷமிகள் ரமணருக்கு இடையூறுகள்
செய்தனர். எனினும் ரமணர் தமது மௌனத் தவத்தைத் தொடர்ந்தார்.
குன்றக்குடி
திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருநாதரான ஸ்ரீமத்தெய்வசிகாமணி
பரமாச்சார்ய சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள திருக்கோயிலை குருமூர்த்தம்
என்று அழைத்தனர். அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணரை
குருமூர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார் அங்கு பாலரமணர் பதினெட்டு
மாதங்கள் கடுந்தவம் இயற்றினார்.
அண்ணாமலைத் தம்பிரான் மதுரையில்
ஆற்றிய ஒரு சொற்பொழிவில் பாலரமணரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் அதனைக்
கேட்ட சிறுவன் ஒருவன் திருச்சுழி வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பதாக
உறவினர்களிடம் கூறினான். வேங்கடராமனின் மற்றொரு சிற்றப்பாவான நெல்லையப்பர்
திருவண்ணாமலைக்கு வந்தார் மாந்தோப்பில் பரண் அமைத்து அதன் மீதிலிருந்து
தவம் இயற்றிக் கொண்டிருந்தார் பாலரமணர் மானாமதுரை நெல்லையப்பர் தரிசனம்
செய்ய விரும்புகிறார் என்று எழுதியனுப்பினார் சிற்றப்பா. அவருக்கு அனுமதி
கிடைத்தது. பாலரமணரின் கோலத்தைக் கண்டு ஒருபுறம் பெரிதும் வருந்தினார்
மறுபுறம் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாலகன் பரமஞானியாகத் திகழ்வதைக்
கண்டு மகிழ்ந்தார். தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார். பாலரமணர் எவ்விதச்
சலனமும் இன்றி மௌனமாக இருந்தார். அவருடைய வைராக்கியத்தைப் புரிந்து கொண்ட
நெல்லையப்பர் ஊர் திரும்பினார்.
தாய் அழகம்மை தனது மூத்த மகன்
நாகசாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது பாலரமணர் பவளக் குன்று
என்ற வேறு இடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். மகன் வேங்கடராமனை கௌபீன
தாரியாகக் கண்ட தாயின் மனம் துடித்தது. தாயும் அண்ணனும் தவசீலரைத்
தங்களுடன் அழைத்தனர். பந்தபாசங்கள் அனைத்தையும் அறுத்துவிட்ட ஞானி பாலரமணர்
அவர்களின் சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தாயின் கதறலைக் கண்ட
பக்தர்கள், பதிலை எழுதிக் காட்ட பாலரமணரிடம் வேண்டினர்.
அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான் நடவா தென் முயற்சிக்கினும் நடவாது நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது இதுவே திண்ணம் ஆதலின் மௌனமாய் இருக்கை நன்று!
என்ற ஞானமொழிகளை பாலரமணர் எழுதினார் தாய் வேறு வழியின்றி நாகசாமியுடன் ஊர் திரும்பினார்.
விசாகப்பட்டினம்
நரசிம்ம சாஸ்திரிகளின் மகன் கணபதி முனிவர், திருவண்ணாமலை வந்து
தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது பகவான் அழைக்கிறார் என்றல ஒரு ஒலி
அவுருக்குக் கேட்டது உடனே மலையேறிச் சென்று விருபாட்ச குகையில்
அமர்ந்திருந்த பகவானைக் கண்டு வணங்கினார்.
தன்னைச் சீடனாக ஏற்று
நல்லுபதேசம் செய்ய வேண்டினார். பகவான் அவ்வாறே அவரைச் சீடராக ஏற்று
பதினைந்து நிமிடத்திற்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் கணபதி முனிவர்,
பாலரமணரை இளமையிலேயே புலன்களை அடக்கி ஆண்டவர் என்ற பொருளில் அவரை ரமணர்
என்று அழைத்தார். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!
சேஷாத்ரி
சுவாமிகள் அடையாளம் காட்டிய பாலரமணரைப் பாமர மக்கள் பிராமண சாமியார் என்றே
அழைத்து வந்தனர். திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தவுடன் வேங்கடராமன்
பூணூலை அறுத்தெறிந்தார். ஜாதிமதங்களைக் கடந்த உத்தமராகி விட்டார் எனினும்
அவருக்கும் ஜாதி முத்திரை!
வேங்கடராமன் சிறுவனாக இருந்தபொழுது,
அவருடைய உறவினர் லட்சுமண அய்யர் என்பவர் அவரை ரமணி என்ற செல்லப் பெயரிட்டு
அழைத்து வந்தார். அவரது விருப்பப்படியும் ரமணர் என்ற பெயர் பொருத்தமாக
அமைந்துவிட்டது.
அடுத்தநாள் ரமணமகரிஷி தமது சீடர்களுக்கு, சிறிது
நேரம் உபதேசம் செய்தருளினார் காவியகண்ட கணபதி முனிவர் முன்னரே பிரபலமாக
இருந்தார். அவர் ரமண மகரிஷியின் சீடரான பிறகு மக்கள் மத்தியில் ரமணர்
பெரும் புகழ் பெற்றார் பகவான் அவ்வப்பொழுது பக்தர்களின் வினாக்களுக்கு
அளித்த பதில்களைத் தொகுத்து ரமணகீதை என்ற நூலாக வெளியிட்டவர் கணபதி முனிவரே
ஆவார்.
முதல் முறை திருவண்ணாமலைக்கு வந்து மகனைக் கண்டு
ஏமாற்றத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினார் அழகம்மை. எனினும் மகனைக்
காணஅடிக்கடி வந்து சென்றார் 1914 ஆம் ஆண்டு அண்ணாமலை வந்த அழகம்மைக்கு உடல்
நலம் குன்றியது இருபது நாள்களுக்கு மேல் அவர் படுத்த படுக்கையாக
இருந்தார். அப்போது ரமணர் தமதுஅன்னையை அன்புடன் கவனித்துப் பணிவிடைகள்
செய்தார் உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குத் திரும்பினார்.
அழகம்மைக்குப்
பாதுகாப்பாக இருந்து வந்த நெல்லையப்பர் காலமானார். மகன் நாகசுந்தரத்தின்
மனைவியும் மறைந்தார். சோகங்கள் தொடர்ந்தன. துவண்டு போன அழகம்மை தம்முடைய
ஞானப் புதல்வனே கதியென்று கருதி 1916 ஆம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு
வந்தார்.
அழகம்மையின் வருகைக்குப் பிறகு பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில்
வசிக்கலானார். அழகம்மை சமையல் பணிகளை மேற்கொண்டு,பக்தர்களுக்கு அன்னம்
அளித்தார். அழகம்மை உடன் இருப்பதை பகவான் விரும்பமாட்டார் என்றும் அவர்
நமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுவிடுவார் என்றும் பக்தர்கள் எண்ணினர்.
பகவான் அவ்வாறு செய்யவில்லை எனினும் ரமணர் பக்தர்களிடம் பேசிய அளவிற்கு
அழகம்மையிடம் பேசியதில்லை.
பகவான், ஆசிரமத்திலுள்ள பல பக்தர்களில்
ஒருவராகவே அழகம்மையையும் கருதினார். பகவானின் தாய் என்ற முறையில்
அவருக்கென்று எந்த விதமான தனியுரிமையும் அளிக்கவில்லை எனினும், பகவான்
அவ்வப்பொழுது அழகம்மையின் ஆச்சார அனுஷ்டானங்கள் குறித்து நகைச்சுவை கலந்த
விமர்சனங்கள் செய்வார் அந்த முறையிலேயே தமது தாயை ஞானமார்க்கத்திற்குத்
திரும்பினார்.
அழகம்மையின் இறுதிக்கால வாழ்க்கையில் ஆறு ஆண்டுகள்
ஆச்சிரமத்தில் கழிந்தன. அப்போது அவருக்கு பகவானிடம் பூரண நம்பிக்கை
ஏற்பட்டது. அழகம்மையின் இறுதிநாளும் வந்தது.
அழகம்மைக்கு மேல்
மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயப்
பகுதியிலும் இடக்கையை உச்சந்தலையிலும் வைத்தபடி அருகிலேயே
உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அழகம்மை முக்தி அடைந்தார்.
அழகம்மை சமாதிநிலை அடையும் வரை பகவானும் பக்தர்களும் சாப்பிடாமல்
இருந்தனர். சமாதி எய்திய பிறகு பகவான் இனி நாம் சாப்பிடலாம் தீட்டும் இல்லை
ஒன்றும் இல்லை என்று கூறினார்.
அடுத்தநாள் காலையில் சமாதிக்
கிரியைகள் தொடங்கின. அழகம்மையின் உறவினர்களும் , ரமணரின் பக்தர்களும்
கூட்டமாக வந்தனர். மலைக்கு அப்பாலுள்ள பாலிதீர்த்தம் என்ற இடத்தில்
முறைப்படி சமாதிக் குழியில் விபூதி, கற்பூரம் உப்பு ஆகியவற்றை நிரப்பினர்.
அதன் மீது ஒரு சமாதி கட்டினார். சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை
செய்யப்பட்டது. அந்த சிவலிங்கம் மாத்ருபூதேசுவரர் என்று பெயர் பெற்றது
மாத்ருபூதேசுவரருக்கு அன்றாட பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும்
வைகாசி தேய்பிறை நவமியில் மாத்ருபூதேசுவரர் மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது .
கணபதி
சாஸ்திரிகளைப் போன்ற கல்வியாளர்கள் பலரும் ரமணரின் சீடர்களானார்கள். பல
துறைகளைச் சேர்ந்த சான்றோர்களும் பாமரரும் பகவானுக்குச் சீடர்கள் ஆகி
தங்களால் இயன்ற பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்தனர்.
ரமணாஸ்ரமம்
ரமணர்
54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அதில் 26 ஆண்டு வாழ்க்கையை
பாதாளலிங்கக் குகை குருமூர்த்தம், மாந்தோப்பு, பவழக் குன்று, விருபாட்ச
குகை, ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தார் இருபத்தெட்டு
ஆண்டுகள் பகவான் ரமணாஸ்ரமத்தில் தொடர்ந்து எழுந்தருளியிருந்தார்.
ரமண
பக்தர்களில் ஒருவர் கந்தசாமி. இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும்
உழைப்பாலும் ஸ்கந்தாஸ்மரத்தை உருவாக்கினார். அவருடைய நினைவைப் போற்றும்
வகையில் தான் ரமணர் அந்த இடத்திற்கு ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயரிட்டார்.
மலையிலுள்ள
ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து ரமணர் அடிக்கடி அன்னையின் சமாதிக்குச் சென்று
வருவார். ஒரு நாள் அன்னையின் சமாதிக்கு வந்த ரமணர் தெய்வீக உந்துதலால்
அங்கேயே தங்கிவிட்டார். அந்த இடம் பக்தர்கள் எளிதில் வந்து போகவும் வசதியாக
இருந்தது. ஆகவே அந்த இடத்திலேயே பக்தர்கள் ரமணாஸ்ரமத்தை நிறுவினர்.
ஆஸ்ரம நடைமுறைகள் ரமணர்
விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். ஆஸ்ரம அன்பர்கள்
காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, மண்டபத்தில் கூடிவிடுவார்கள். தியானமும்,
பக்தியிசையும் நடைபெறும். ஐந்து மணிக்கு ரமணர் தமது ஆசனத்தில் அமர்வார் .
அவர் பதினைந்து மணித்துளிகள் தியானம் செய்வார்.
ஆழ்ந்த தியானத்தில்
ரமணரை, பக்தர்கள் தவயோகியாகக் கண்டு தரிசிப்பார்கள். ஆஸ்ரம வாழ்க்கையில்
எல்லோரும் எல்லாவற்றிலும் சமம் என்ற கோட்பாட்டை, பகவான் வலியுறுத்தினார்.
பதினோரு மணியளவில் ஆஸ்ரமத்திலுள்ள பசு முதலான வாயில்லா ஜீவன்களுக்கும்,
வெளியில் காத்திருக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கப்படும்.
புதிய மரபு
ரமணாஸ்ரமத்தில்
விலங்கினங்களுக்கும், ஏழைகளுக்கும் முதலில் உணவு வழங்குப்படும்
ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிறகே ரமணருக்குப் பரிமாறுவர்!
இது புதிய மரபு!
ரமணரின் எளிமை
பிரமாண்ட பந்தலில் பூஜை,
அன்னதானம் என அமர்க்களப்படுகிறது. காலை 10 மணி முகூர்த்தத்தில் ரமணரை
அழைத்து வந்து பூஜை செய்ய ஏற்பாடு. இதற்கிடையே அன்னதானத்திற்காக நிறைய
பரதேசிகள் வி.ஐ.பி பந்தலில் நுழைந்துவிட்டனர். அப்போது யாரோ ஒருவர்,
பரதேசிகளுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கும். அங்கே செல்லுங்கள்.
இங்கே வராதீர்கள்! என்று விரட்டியடித்தார். மணி காலை 9.50 ரமணரை அழைக்கப்
போனால் அவரைக் காணோம்! எங்கே தேடியும் கிடைக்காமல் திடுக்கிட்டு
திகைத்தனர். பூஜை நேரமோ நெருங்கிவிட்டது. அப்போது ஒருவர் ஓடோடி வந்து.
கிழக்குப் பக்க பந்தலில் ரமணரைப்போல் ஒருவர் உட்கார்ந்திருப்பதாகச்
சொன்னார். அங்கு போய்ப் பார்த்தால், பரதேசிகளுக்கு நடுவே ரமணர்
அமர்ந்திருக்கிறார். இங்கே வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்! என்று
கேட்டபோது, ரமணர் சொன்னார். பரதேசிகள் கிழக்குப் பந்தலுக்குப் போகணும்னு
ஒருவர் விரட்டினார். அதான் இங்கு வந்து விட்டேன்!
என் கடன் பணிசெய்து கிடப்பதே
என்கடன்
பணிசெய்து கிடப்பதே என்றார் அப்பர்பெருமான் அதற்கேற்ப பகவான் ரமணர்
எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்வார் காலையில்
ஒன்பது மணிக்கு செய்தித்தாள்களைப் படிப்பார். கடிதங்களைப் படிப்பார்.
அச்சுப் பிரதிகளைத் திருத்துவார் புத்தக பைண்டிங் செய்வார். காய்கறிகளை
நறுக்குவார்; தோட்ட வேலைகள் செய்வார்; எனினும் அவருடைய உள்ளம் எப்போதும்
ஆத்மானுபவத்தில் திளைத்து இருக்கும்!
மாலை மூன்று மணி அளவில் ஆஸ்ரம
அன்பர்களுக்கு காபி அல்லது தேநீர் வழங்கப்படும். அதன் பிறகு ரமணர்
பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். ஐயங்களைப் போக்குவார். சில
நாள்களில் ரமணர் மெதுவாக நடந்து சென்று கிரிவலம் வருவார். ரமணரின் இளவலும்
சின்ன சுவாமி என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய நிரஞ்சனானந்தர் ஆஸ்ரமம்
பொறுப்பாளராக இருந்து அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றினார்.
ஆஸ்ரமத்தில்
புத்தக விற்பனை மையம் திறப்பு மாத்ருபூதேஸ்வர் கோயில் குடமுழுக்கு, வேத
பாடசாலை தொடக்கம் ஆகிய பணிகள் அனைத்தும் நிரஞ்சானந்தரால் செல்வனே
நிறைவேற்றப்பட்டன. ஆஸ்ரமத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் பக்திப் பாடல்களை
இசைப்பார்கள் ஒன்பது மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.
ரமண மகரிஷியும் ஸ்ரீநாராயணகுருவும் அண்மைக்காலத்தில்
வாழ்ந்த அருளாளர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயணகுரு. அண்ணாமலையில் ரமண
மகரிஷியும், கேரளத்தில் ஸ்ரீநாராயண குருவும் சமகாலத்தில் ஞானச்செங்கோல்
ஓச்சி வந்தனர்.
அச்சுதானந்தர் கோவிந்தானந்தர் வித்யானந்தர் ஆகிய
சீடர்களுடன் நாராயணகுரு அண்ணாமலைக்கு வந்தார். ரமணமகரிஷி ஸ்கந்தாஸ்ரமத்தில்
தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார். சற்று நேரம் அவரை உற்று நோக்கிய
ஸ்ரீநாராயணகுரு மரத்தடியில் அமர்ந்து ரமணருடன் அளவளாவினார்.
இன்று
எங்களுடன் சாப்பிடலாமே! என்று ரமணர் ஸ்ரீநாராயணகுருவிடம் மலையாளத்தில்
கூறினார். இருவரும் அமர்ந்து உணவருந்தினர். ஸ்ரீநாராயணகுரு பத்தியச்
சாப்பாடு மேற்கொண்டு இருந்ததால் மோர்சாதம் கனிகள் அப்பளம் பாயசம் ஆகியவற்றை
ஏற்றுக்கொண்டார். ரமணர் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் நேரம்
மலைப்பக்கம் சென்று வருவார். அன்று ரமணர் மலைப்பக்கம் சென்றுவருவதற்குள்
ஸ்ரீநாராயணகுரு அவருக்கு கவிதைக் காணிக்கை ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தார்!
ஆம்
கவிதை எழுதிய சீட்டை நாராயணகுரு ரமணரிடம் கொடுத்தார். நாராயணகுரு
விடைபெற்றுச் சென்ற பிறகு ரமணர் அந்தச் சீட்டைப் பிரித்துப் படித்தார்.
நிவ்ருத்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் போற்றிப்
புகழ்ந்து, சம்ஸ்காரத்தில் ஐந்து சுலோகங்கள் எழுதியிருந்தார்.
சிலநாட்கள்
சென்ற பின் நாராயணகுருவின் வர்க்கலை ஆசிரமத்திலிருந்து ரமணருக்கு ஒரு
கடிதம் வந்தது. அதில் நாராயணகுரு பகவானைப் போற்றி முனிசரய பஞ்சகம் என்ற
தலைப்பில் மேலும் ஐந்து சுலோகங்கள் இயற்றி அனுப்பியிருந்தார்.
ஸ்ரீநாராயணகுரு
இயற்றிய பத்துப் பாடல்களையும் (இரண்டு பஞ்சகங்கள் ) ரமணர் ஒரு பெரிய
நோட்டுப் புத்தகத்தில் தமது கைப்பட எழுதி வைத்துள்ளார். நாராயணகுரு பகவானை
ராஜ சர்ப்பம் என்று போற்றி உரைத்துள்ளார். வர்க்கலை ஆசிரமத்திற்கு வரும்
பக்தர்களிடம் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.
நாராயணகுரு
உடல் நலம் குன்றிய செய்தி தந்தி மூலம் ரமணருக்குத் தெரிவிக்கப்பட்டது.
பகவான் ரமணர், ஸ்ரீநாராயணகுருவிற்கு உதவுவதற்காகத் தமது சீடர்கள் இருவரை
அனுப்பி வைத்தார். ஸ்ரீநாராயணகுரு சமாதி அடையும் வரை அவர்கள் வர்க்கலையில்
தங்கியிருந்து அவருக்கு அணுக்கத் தொண்டுகள் புரிந்தனர். இவ்வாறு இரு
நட்புக் கொண்டிருந்தனர்.
ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்
அப்போது
இந்திய விடுதலை வேள்வி இறுதிக் கட்டத்தில் இருந்தது. மகாத்மா காந்தியின்
தூதுவர்களாக மூவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து, ஒரு வாரம் தங்கினர். ரமணரைத்
தரிசித்து மகிழ்ந்தனர்.
பாபு ராஜேந்திர பிரசாத், ஜம்னாலால் பஜாஜ்,
காமத் ஆகிய மூவருமே ரமணாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் விடைபெற்றுச்
செல்வதற்கு முன்னால் ரமணரைத் தரிசித்தனர். பஜாஜ் அவர்கள் ரமண தரிசனம்
தங்களுக்கு புதிய ஆத்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார். ரமணரும் தமது
மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு 1950 இல் ரமணரின்
ஆசிகளைப் பெற்ற பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப்
பெறுப்பேற்றார்.
தமிழ்க் கவிஞர் ரமணர்
ஆத்மஞானியாகவும்
சித்தபுருஷராகவும் திகழ்ந்த ரமணர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பிøக்ஷ
ஏற்கச் செல்லும் பக்தர்கள் பாடுவதற்கு ஏற்றதாக ரமணர் இயற்றியது
அக்ஷரமணமாலை என்ற தோத்திரம்.
அக்ஷரம் என்றால் அழியாதது என்று
பொருள். எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதால் அக்ஷரம்
என்றனர். மேலும் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி, க்ஷகர த்தில்
முடிவடைகின்றன. அழியாமல் இருக்கும் இறைவனுக்கு அழியாமல் இருக்கும்
எழுத்துக்களால் தொடுத்ததே அக்ஷரமணமாலை. அக்ஷ+ரமணமாலை என்றும், அக்ஷர மணமாலை
என்றும் பொருள் கொள்ளலாம். இதனை ரமணர் தமிழில் தொடுத்ததால் அ வில் தொடங்கி
வை என்ற எழுத்தில் நிறைவு செய்கிறார். மொத்தம் நூற்றெட்டுக் கண்ணிகளைக்
கொண்டது அக்ஷரமணமாலை. நூலின் தொடக்கத்தில் கணபதி காப்பும் அருணாசலசிவ!
அருணாசலசிவ! என்ற பல்லவியும் உள்ளது. வள்ளுவர் தமது பெற்றோர் பெயர்கள்
வரும் வகையில் ஆதிபகவன் என்று தொடங்கினார் ரமணர் அக்ஷரமணமாலையின் இரண்டாம்
கண்ணியில் அழகு சுந்தரம் போல் என்று குறிப்பிட்டுள்ளார். ரமணரின் தாய்
அழகம்மா தந்தை சுந்தரம் இருவர் பெயரையும் இணைந்து அழகுசுந்தரம் என்று
இரண்டாவது கண்ணியைத் தொடங்குகிறார். தோத்திரமாகப் பாட ஏற்றது. எனினும்
அக்ஷரமண மாலையில் மேலான வேதாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.
நான்
யார் என்ற ஆத்ம விசார நூலை ரமணர் இயற்றியுள்ளார். ரமணர் இயற்றிய உள்ளது
நாற்பது, திருமூலரின் திருமந்திரத்தைப் போன்ற நடையில் இயற்றப்பட்டுள்ளது.
வடமொழியில்
தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ரமணர் சில கவிதைகள் இயற்றி உள்ளார்.
எனினும், தமிழ்க் கவிதை எழுதுவதிலேயே ஆதிக ஆர்வம் கொண்டிருந்தார். ரமணரின்
தாயார் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவர் இனிய வெண்பாக்களை இயற்றினார்.
அலையாய் வருபிறவி அத்தனையும் மாற்ற மலையாய் எழுந்த மருந்தே!- தலைவாநின் தாள்கதியாய் வாழும் என் தாய் தாப மாற்றியே ஆள்வதும் உன்கடனே ஆம்.
நினைத்த
மாத்திரத்தில் வெண்பாக்களை இயற்றும் திறமை பெற்றவர் ரமணர். ரமணரின்
நூல்கள் ரமண நூற்றிரட்டு என்ற பெயரில் வெளிவந்துள்ளன. தனி நூல்களும் உள்ளன.
ரமணர்
திருவண்ணாமலைக்கு வந்த பொன்விழா ஆண்டு 1946 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
1948 ஆம் ஆண்டு பகவானுக்கு இடது முழங்கைக்குக் கீழே ஒரு கட்டி தோன்றியது
சர்க்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
கரத்தை வெட்டி எடுக்க வேண்டுமென்று கூறினார். மகான் இயற்கை வழி நடக்கட்டும்
என்று கூறிவிட்டார். அறுவைச் சிகிச்சை பயனளிக்கவில்லை. நோயைப்
பொருட்படுத்தாமல் மகரிஷி தனது பணிகளைச் செய்து வந்தார். 1950ஆம் ஆண்டு
ஏப்ரல் 14 ஆம் நாள் பகவான் பரிபூரணம் எய்தினார். சற்றே கண்களை விரித்து,
புன்னகை மலர்ந்து விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த
நிலையில் சித்தி அடைந்தார். அதே நேரத்தில் ஓர் எரிநட்சத்திரம் வானவெளியில்
மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்!
அருணாசலசிவ என்று பக்தர்கள் முழங்கினர்.
மகரிஷியின் பூதவுடலை
பத்மாசனத்தில் இருக்கச் செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். மாத்ரு
பூதேஸ்வரர் சன்னதி பழைய தரிசன மண்டபம் இரண்டுக்கும் இடையில் பூதவுடலை
சமாதிகொள்ளச் செய்தனர். அன்றாட வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை
ரமணாசிரமத்தில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. ரமணாசிரமம்
சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில்
அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி,
கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர்
இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்
பக்தர்கள்.
நமக்கு அனுகூலம் தரக்கூடிய ஒரு காரியம் குறிப்பிட்ட ஒருவரால் ஆக வேண்டும்
என்றால், என்ன செய்கிறோம்? தொடர்ந்து அவருக்கு அறிவுறுத்தி, அடிக்கடி
நினைவு படுத்திக் கொண்டே இருப்போம் அல்லவா?! அது மட்டும் அல்லாமல்
காரியத்தைச் செய்து கொடுக்க வேண்டியவர் முகம் சுளிக்கா வண்ணம் மனம் நோகா
வண்ணம் அவருக்கு பணிவான குரலில் போன் மூலமாகவோ, இதமான வார்த்தைகளில்
எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தெரிவித்துக் கொண்டே இருப்போம் அல்லவா? கிட்டத்தட்ட
இதை நச்சரிப்பு என்று சொல்லலாம். இதே நச்சரிப்பை இன்னும்
நாசூக்காக-இறைவனிடம் வைப்பதுதான் பிரார்த்தனை. என்ன ஒன்று, இறைவனுக்கு
போன் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தகவலைப் பரிமாறிக் கொள்ள முடியாது.
பிழைத்தார் இறைவன்!
ஒரு உதாரணத்துக்காக நச்சரிப்பையும்,
பிரார்த்தனையையும் இங்கு ஒப்பிட்டிருக்கிறேனே தவிர, இரண்டும் வேறு வேறு.
சில காரியங்கள் நச்சரிப்பின் விளைவாகவே பூர்த்தி ஆகின்றன. ஆனால்,
எல்லாமும் அப்படி ஆவதில்லை. இதற்குதான் பிரார்த்தனைகள் கைகொடுகின்றன.
பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையின் அன்பார்ந்த பக்தர்கள் பிரார்த்தனையின்
நம்பிக்கையயும் வலிமையையும் நன்கு அறிந்தவர்கள். இடைவிடாத பிரார்த்தனை
மூலம் தங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரட்டுவதற்கு அன்னை அருளிய
பிரார்த்தனை முறை களைக் கண் கண்ட மருந்தாகக் கருதி வருகிறார்கள்.
உள்ளன்போடும் உருக்காத்தோடும் பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள். பிரார்த்தனை
நம்மை ஆண்டவன் பாதையில் பாதி வழிக்குக் கொண்டு செல்லும். உபவாசம்
இறைவனுடைய அரண்மனை வாயில் வரை செல்வதற்கு நமக்கு அனுமதி பெற்றுக்
கொடுக்கும் என்பது ஒரு பாரசீகப் பழமொழி.
அன்னை சொல்வார்; தெய்வீக
சக்தியின் கருணையை மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும். அப்போது நிலையான
அற்புதங்களை அது நிகழ்த்தும். ஆம்! வலிமையான பிரார்த்தனை இல்லாவிட்டால்
தெய்வீக சக்தியின் கருணையை நாம் பெற முடியாது. வாழ்க்கையின் சிரமமான இறுதி
நிலைக்கு வந்த பிறகு. அன்னையிடம் பிரார்த்தனை வைத்து. அதன் மூலம்
நிமிர்ந்து அடுத்த சுற்றை வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் அநேகம். புதுவை
ஆசிரமத்திலேயே வளர்ந்து வந்த ஒரு குழந்தைக்குக் கடுமையான பேதி. உடல்
அயர்ச்சி. டாக்டர்கள் தினம்தோறும் பார்த்துப் பார்த்து மருந்து
கொடுத்தார்கள். ஆனால் குழந்தை கண் விழித்துப் பார்க்கவில்லை. பத்து
நாட்கள் படுத்த படுக்கையாக இருந்த அந்தக்குழந்தையைப் பதினோரம்தினம் காலை
அன்னையின் தரிசனத்துக்காகத் தூக்கி வந்தார்கள். அன்னையின் பார்வை பட்ட
மறுகணம் குழந்தை துள்ளி எழுந்து. ஓடியது. அன்னையின் அருகே மலர்ச்சியுடன்
நின்றது. சாக்லெட் கேட்டது.
ஒரு முறை புதுவையில் பலத்த புயல்
வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடல் பொங்கிச் சீறியது. கடல் நீர்
ஆசிரமத்தின் உள்ளேயே வெள்ளமெனப் பாய்ந்து பலரையும் அழித்து விடுமோ என்ற
அச்சம் ஆசிரமவாசிகளுக்கு! அன்னையிடம் ஓடிப் போய் அனைவரும் வேண்டினர். ஒரு
சில விநாடிகளுக்கு தியானம் மேற்கொண்ட அன்னை, சூட்சம வடிவில் கடல் தேவதையின்
முன்னால் போய் நின்றார். உன் சீற்றத்தக்கு அப்பாவி மக்கள்தானா இலக்கு?
என்று கேள்வி கேட்டார். மிகப் பெரிய பாறாங்கற்களைக் கரையோரம் அடுக்கி,
இதைத் தாண்டி நீ நகருக்குள்ளும் ஆசிரமத்துக்குள்ளும் வரக் கூடாது என்று
தேவைதக்கு அன்புக் கட்டளை இட்டார். அன்னையின் வார்த்தைகளுக்குக்
கட்டுப்பட்ட கடல் தேவதை தன் சீற்றத்தைக் குறைத்துக் கொண்டாள். புயல்
நீங்கியது. ஆபத்து விலகியது.
இன்றைக்கு உலகம் முழுக்க அன்னைக்குப்
பல லடசக்கணக்கான பக்தர்கள். புதுவைக்கு வந்தும், இருந்த இடத்தில்
இருந்தப்படியும் அன்னையை ஆராதிக்கிறார்கள். வழிப்பாட்டின்போது அன்னையை
எப்படி விளிப்பது? மதர் - அம்மா - அன்னை. இவற்றில் எந்த சொல் உங்களுக்கு
இதம் தருகிறதோ, மனம் அமைதிப்படுகிறதோ, அந்த வார்த்தையைச் சொல்லி அழைத்து
வழிபடலாம். 1878-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21- ஆம் நாள் வியாழக்கிழமை காலை
10.15 மணியளவில் அன்னை அவதரித்தார். அன்னையின் பூர்வீக பெயர் பிளாஞ்சி
ராக்சேல் மிர்ரா. சிறு வயதில் இருந்தே ஆன்மீக ஆற்றல்கள் மிர்ராவுக்குள்
பெருகின. கலைகளுக்கும் நாகரிகத்துக்கும் பேர்போன பிரான்ஸ் நாட்டில் பிறந்த
மிர்ரா, பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பாரத தேசத்தின்
தொன்மையாலும் ஆன்மிக சக்தியாலும் கவரப்பட்டார்.
படிக்கின்ற
காலத்திலேயே அடிக்கடி தியான நிலைக்குப் போய் விடுவார் மிர்ரா.
சமைக்கும்போதும், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும் திடீர் திடீரென சாமதி
நிலைக்கப் போய் விடுவார். இறை சக்தியோடு இணைந்து விடுவார். சிறுமியாக
இருக்கும்போது ஒரு நாள் வீட்டில் இருந்து கடைக்குப் புறப்பட்டார்.
பிரான்ஸ் தேசத்தின் பிஸியான சாலை ஒன்றை மிர்ரா கடக்க நேரிட்டது. பாதி
சாலையைத் தாண்டிக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு தியான நிலை வந்து
விட்டது. கால்கள் நகர மறுத்தன, சுய நினைவில் இருந்து விலகினார்.
சட்டென்று சிக்னல் கம்பத்தில் பச்சை விளக்கு ஒளிர... வண்டிகள் வேகம்
பிடித்தன. மிர்ராவின் அருகே பெரிய பேருந்து ஒன்று இடித்துத் தூக்கி
விடுவது போல் வந்தது. அந்த பிஸியான சாலையில் யாரோ ஒருவர் வந்து மிர்ராவை
ஒரு பக்கமாக இழுத்துப் பல அடி தூரம் தள்ளி உள்ள சாலையோரம் வீசிப்
போட்டார். அடுத்த விநாடி சுய நினைவு வரப் பெற்றவராக மிர்ரா இயல்பாக
எழுந்தார். நடந்தார். உடலில் காயம் இல்லை. இந்த நிகழ்வை நேரில்
பார்த்தவர்கள் வியந்து போனார்கள் .
பிரான்ஸில் இருந்தபோது அவரது
கனவில் பல ஆன்மிகப் பெரியவர்களும் அவ்வப்போது தோன்றி போதித்திருக்கின்றனர்.
அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடன் கூடிய ஒருவர் அடிக்கடி
கனவில் வந்து இந்திய தத்துவங்கள் மற்றும் வேத உபநிஷத்துக்களை
மிர்ராவுக்குப் போதித்திருக்கிறார். ஒவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த
மிர்ரா, தன் கனவில் அடிக்கடி வரும் அந்த தாடிக்கார அன்பரை உருவமாக
வரைந்தார். பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தபோது
அவரே தனக்கு கனவில் வந்து உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரைத்தான்
படமாகத் தீட்டி வைத்தருக்கறோம் என்பதையும் உணர்ந்தார். ஸ்ரீஅரவிந்தர் பல
சந்தர்ப்பங்களில் சிறுமியான மிர்ராவை ஆட்கொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே
கீதையைப் படித்திருக்கிறார் மிர்ரா. அதில் வரும் கண்ணபிரானைத் தரிசிக்க
ஆசைப்பட்டிருக்கிறார். பின்னாளில் இந்தியா வந்தபோது மகரிஷி அரவிந்தரைப்
பார்த்து வணங்கியவுடன் அவர் கண்டது மகான் அரவிந்தரை அல்ல.... சாட்சாத்
ஸ்ரீகிருஷ்ண பகவானை!
உலகமே கண்டு வியந்த மகான் - ஸ்ரீஅரவிந்தர்.
சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து. பின்னாளில் ஆன்மிக வெள்ளத்தில் தன்னை
இணைத்துக் கொண்டவர். மகா பெரியவா மற்றும் ஸ்ரீரமண மகரிஷியின் தரிசனம்
பெற்ற ஆங்கிலேயர் பால் பிரண்ட்டனை, ஆன்மிக அன்பார்கள் அறிவார்கள். தனக்கு
ஒரு குரு வேண்டும் என்று மகா பெரியவாளிடம் கோரிக்கை வைத்தார் பால்
பிரண்ட்டன். அதற்கு மகா பெரியவர், உங்களுக்கு குருவாக இருக்கும் தகுதி
கொண்டவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மோனத்தில் புதுவையில் இருப்பதால்,
அவரை உங்களால் சந்திக்க முடியாது. அடுத்தவர் ரமணர். திருவண்ணாமலையில்
இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள் என்று அனுப்பினார். பாண்டிச்சேரி
ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் தன்னைத் தேடி வருகின்ற பக்தர்களுக்கு நிம்மதியையும்
பரிபூரண அருளையும் கொடுக்க வல்லது. இத்தகைய இடத்தில்தான் கண்களைக் கவரும்
இதமான இயற்கைச் சூழலில் பல விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும்
செடிகளின் நடுவே இன்றைக்கு அன்னை அமர்ந்திருக்கின்றார். மூன்று தேவியாரின்
(ஸ்ரீலட்சுமிதேவி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாகாளி) ஒருங்கிணைந்த வடிவாக அன்னை
பார்க்கப்படுகின்றார். மகான் ஸ்ரீஅரவிந்தர் இந்த மூன்று வடிவிலேயேயும்
அன்னையைப் பார்த்துப் பரவசம் கொண்டார். புதுவை ஆசிரமத்தில் இருந்தபோது
அன்னை தினசரி தரும் பால்கனி தரிசனம் மிகவும் பிரசித்துப் பெற்றது. இந்த
தரிசனத்துக்காகக் காத்துக் கிடந்தார்கள் அன்பார்கள். இந்த தரிசனம் பெற்ற
அனைவருமே பாக்கியசாலிகள். திருமண பாக்கியம் வேண்டியும், பிள்ளைப் பேறு
வேண்டியும் அன்னையின் முன் பிராத்தனை செய்து, பலன் அடைந்தவர்கள்
இருக்கிறார்கள்.
மந்திரம் இல்லை; ஸ்லோகம் இல்லை; அர்ச்சனை சீட்டு
வாங்க வேண்டாம்; அபிஷேகச் சீட்டும் வேண்டாம், நம்பிக்கை நம்பிக்கை மட்டும்
உங்களிடம் இருந்தால் போதும் . அன்னையிடம் உங்கள் பிரார்த்தனையை வைத்து
பரிபூரண பலன் பெறலாம். பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற சந்தேகம்
உங்களுக்குள் முளைத்தால், எதுவுமே பலிக்காது. தவிர, நம்பிக்கை
இல்லாதவர்கள் அன்னையின் பக்தர்களாக இருக்க முடியாது, அன்னையிடம் வைத்த
பிரார்த்தனை ஒருவேளை உங்களுக்குப் பலிக்கவில்லை என்றால் அன்னையிடம்
முழுமையான நம்பிக்கையை நீங்கள் வைக்கவில்லை என்று பொருள். அன்னையைத்
தேடிப் புதுவைக்குக்கூடச் செல்ல வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே
அன்னையை வரவழைக்கலாம். உங்களது ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில்
உண்டு என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அன்னை. அன்னையை ஆராதிப்பது
மிகவும் எளிது. நீங்கள் வாழ்ந்து வருகின்ற இடத்தை சுத்தமாக வைத்துக்
கொள்ளுங்கள். எப்படிஇல்லத்திலும், வெளியிலும் சுத்தத்தைப் பேணுகிறீர்களோ,
அதேபோல் உங்களது அகத்தூய்மையும் அமையட்டும். சத்தியம், அன்பு, கருணை, சேவை
மனப்பான்மை, அடக்கம் எல்லாம் வாய்த்தவராக நீங்கள் விளங்குதல் வேண்டும் .
தீய குணங்கள் அணுவளவும் உங்களிடம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
யோகத்தை ஏற்பதற்கு நாம் விலக்க வேண்டுபவை என்று நான்கு
விஷயங்களை அன்னை சொல்கிறார். அவை; அரசியல், தாம்பத்திய உறவு,
புகைப்படிப்பது, மது. பூக்களுக்கும் அன்னைக்கும் பொருத்தமான தொடர்பு ஏராளம்
உண்டு. எப்படி கடல் தேவதையுடன் பேசினார். என்று மேலே பார்த்தேமோ, அதுபோல்
செடியுடன், மரங்களுடன், பூக்களுடன் பேசுவார். அன்னையின் சிரிப்பில்கூட
அந்தப் பூக்கள் மலர்ந்த தருணம் உண்டு. ஆத்மார்த்தமாக அன்னையிடம் சரண்
அடையுங்கள். உங்களுக்கு உண்டான பிரச்னையை ஒரு நண்பரிடம் - தீர்வு வேண்டிச்
செல்பவரிடம் சொல்வது போல் உருக்காமாக எடுத்துரையுங்கள். மூன்று நாட்கள்
இடைவிடாமல் வாயாலோ மனதாலோ பிரார்த்தனையைச் சொல்லுங்கள். எப்போதெல்லாம்
உங்கள் மனம் வாடுகிறதோ, அப்போதெல்லாம் அன்னையை நினையுங்கள். ஒருவன் செய்த
தவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல.
இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வசித்தத்துக்குத் தன்னை
முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும் என்கிற அன்னையின் திருவாக்கை
ஏற்றுக் கொண்டு நடந்தால், நாம் ஒவ்வொருவரும் ஞானிகளே! 1973-ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் பதினேழாம் தேதி இரவு 7.25-க்கு அன்னை மகா சமாதி அடைந்தார்.
இருந்தாலும், இன்றைக்கு உலகெங்கும் உள்ள அன்பர்களுக்கு அருளி வருகிறார்.
குழந்தையானந்த சுவாமிகள் மதுரை மீனாட்சியின் அருந்தவப்புதல்வர். 1627ல்
மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி
தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை.
இருவரும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். திரிபுர சுந்தரி மனமுருகி
பிரார்த்தித்தார். அம்மா, மீனாட்சி ! கிளி ஏந்திய காரிகையே ! எங்களுக்கு
குழந்தை பிறந்தால், அதை நாங்கள் கூட வளர்க்க பிரியப்படவில்லையம்மா !
நீயே
வைத்துக் கொள். குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே
அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார்.
ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள். பாதங்களில் சங்கு
சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை
மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். ஒரு குழந்தையை தாங்கள்
வளர்த்தனர். கோவிலுக்குள் வந்த குழந்ததைக்கு பாலுட்டி சீராட்டி, உயரிய
மந்திரத்தை உபதேசித்து, தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வளர்த்தாள்
மீனாட்சி. கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர்.
குழந்தைசாமியின்
16ம் வயதில் அவரது தந்தையும் தாயும் அம்பாளின் திருவடியை அடைந்தார்கள்.
இதன்பின் வட திசை நோக்கி பயணமானார் குழந்தை சுவாமி. காசி சென்று அங்கே
திரைலிங்க ஸ்வாமிகள் என்ற பெயருடன் கடுமையாக தவம் செய்து நிர்விகல்ப
சமாதியில் 150 ஆண்டு காலம் காசிநிவாசியாக அருள் பாலித்தார். பின் கங்கை
கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம்
தவமிருந்தார். (இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு
பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) பிறகு
கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார்.
மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப
சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார். கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற
திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். நூறு
ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் தேசத்திற்கு விஜயம் செய்து மக்களுக்கு
அருள்பாலித்துள்ளார். மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில்
குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும்
வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு
ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி
மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற
திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு
ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில்
தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார்.
குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும்,
காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 1887ல் காசியில் தன்னை ஒரு
பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு,
அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி
பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து
வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை
நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி
அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும்
செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில்
தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால
கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.