பாம்பாட்டி சித்தர் பாடல்

 



1. தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே! சிவன்

சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!

ஆடுபாம் பே! தெளிந்து ஆடுபாம் பே! சிவன்

அடியிணை கண்டோமென்று ஆடு பாம்பே!


2. நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே

நித்தியம்என் றேபெரிய முத்தியென்றே

பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே

பன்னிப்பன்னிப் பரவி நின்று ஆடுபாம்பே!


3. பொன்னில்ஒளி போலவெங்கும் பூரணமதாய்ப்

பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்

மன்னும் பலஉயிர்களில் மன்னிப் பொருந்தும்

வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!


4. எள்ளில் எண்ணெய் போலவுயிர் எங்கும் நிறைந்த

ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே

உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே

ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!


5. அண்டபிண்டம் தந்தஎங்கள் ஆதிதேவனை

அகலாம் லேநினைத்தே அன்புடன் பணிந்து

எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி மேத்தியே

ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!


6. சோதிமயமான பரி சுத்தவத்துவைத்

தொழுதழு தலற்றித் தொந் தோம்தோம் எனவே

நீதி தவறா வழியில் நின்று நிலையாய்

நினைந்து நினந்துருகி ஆடுபாம்பே!


7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்

திருவாயும் குருவாயும் சீவனாயும்

செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!


8. சுட்டிகாட்ட ஒண்ணாதபாழ்ச் சூனியம் தன்னைச்

சூட்சமதியால் அறிந்து தோஷம் அறவே

எட்டிப் பிடித்தோ மென்றானந்த மாகப்பை!

எடுத்து விரித்துநின்று ஆடுபாம்பே!


9. எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்

இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்

அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற

ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!


குரு வணக்கம்


10. காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே

தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்

போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்

புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடு பாம்பே!


11. பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்

புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்

மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்

மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே!


12. வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த

மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்

போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்

பூரண சற்குருதாள் கண்டு ஆடுபாம்பே!


13. உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை

உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்

கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டு அன்பாய்க்

களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே!


14. அங்கையிற் கண்ணாடிபோல ஆதி வத்துவை

அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்

சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே

தமனியப் படம் எடுத்து ஆடுபாம்பே!


15. காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின்

கற்பு நிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்

தூயநிலை கண்ட பரிசுத்தக் குருவின்

துணையடி தொழுது நின்று ஆடு பாம்பே!


16. கூடுவிட்டுக் கூடு பாயும் கொள்கை யுடைய

குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்?

வீடு பெறும் வகையை மேன்மேலுங் காட்டும்

மெய்க் குருவைப் பணிந்து நின்று ஆடு பாம்பே!


17. அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்

அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்

வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்

மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே!


18. கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடும்

கடமழி யாது வாழுங் காரணக் குரு

பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து

பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே!


19. வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்

வல்லுடம்புக் கொருகுறை வாய்த்திடாது

மெச்சுகட முள்ள எங்கள் வேத குருவின்

மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே!


பாம்பினது சிறப்பு


20. நாதர்முடி மேல்இருக்கும் நாகப் பாம்பே!

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்லபாம்பே!

பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே!

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே!


21. வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே!

மண்டல மிட்டுடல் வளை வண்ணப் பாம்பே!

தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே!

தலையெடுத்தே நீ விளையாடு பாம்பே!


22. குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்;

கூறுந்திரு மாலினுக்குக் குடையுமானாய்:

கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்:

கரவாமல் உளங்களித்து ஆடுபாம்பே!


23. மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்;

மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்!

கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்:

கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடுபாம்பே!


24. சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்:

சங்கரனுக்கு ஆபரணந் தானு மாகினாய்:

மந்திரத்துக் கடங்கினாய் மண்டலமிட்டாய்:

வளைந்து வளைந்து நின்று ஆடுபாம்பே!


சித்தர் வல்லபம்


25. எட்டு நாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்

கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்

கடு விஷந் தனைக் கக்கி ஆடுபாம்பே!


26. ஆதிசேடன் ஆயினுமெம் மங்கையினாலே

ஆட்டி விடுவோ மெங்கள் ஆக்கினைக்குள்ளே;

நீதியோடு மடங்கியே நின்றிடச் செய்வோம்:

நின்ற நிலை தவறாமல் ஆடு பாம்பே!


27. தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்:

துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்:

ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்:

ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே!


28. எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்:

ஏழு கடலையுங் குடித்து ஏப்பமிடுவோம்:

மட்டுப் படா மணலையும் மதித்து விடுவோம்:

மகாராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!


29. மண்டலமுற்று மெங்கையால் மறைத்து விடுவோம்:

வானத்தையுமே வில்லாக வளைத்து விடுவோம்:

தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்:

தோன்றலுக்கு முன்பு நீ நின்று ஆடு பாம்பே!


30.மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்:

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்:

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்:

தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!


31. செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்:

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்:

இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்:

எங்கள் வல்ல பங்கண்டு நீ ஆடு பாம்பே!


32. வேதன் செய்த சிருட்டிகள் போல் வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள்கீழே மேவச் செய்குவோம்:

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்:

நாங்கள் செய்கை யாம்இதுவென்று ஆடு பாம்பே!


33. அறுபத்து நாலு கலை யாவும் அறிந்தோம்:

அதற்குமேல் ஒரு கலையான தறிந்தோம்:

மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்:

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே!


34. சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்:

வீறுபெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச் செய்குவோமென்று ஆடுபாம்பே!


35. வாசுகியை ஒரு பக்கம் மன்ன நிறுத்தி

மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே

தேசுலவு தக்கனைத்தன் திக்கினிற் சேர்த்துச்

செய்யபது மனைக்கொள்ளும் சித்தனாரே!


36. அனந்தனை யொருபக்கமாக நிறுத்தி

அதன் பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்

கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்

கடுஞ்சங்க பாலனைத்தான் சித்தனாரே!


37. அட்டதிக்குஞ் சக்கரங்களாகக் கீறி

அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்

திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்

சித்தந்தடு மாறாதீர் சித்தனாரே!


38. அட்டதிக்குஞ் சக்கரங்கள் அமைத்துவிட்டோம்!

அவ்வவற்றில் சக்கரங்கள் அமைத்து விட்டோம்:

எட்டுநாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்:

இனியென்ன செய்வம் சொல்லும் சித்தனாரே!


39. நடுவாக ஆதிசேடன் தன்னை நாட்டும்

நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்:

கடுவிடங் கக்க வேயக் கட்செவிகளைக்

கையிலெடுத் தாடுங்கள் சித்தனாரே!


பொருளாசை விலக்கம்


40. நாடுநகர் வீடுமாடு நற்பொருள் எல்லாம்

நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ?

கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ?

கூத்தன் பதங் குறித்துநின்று ஆடுபாம்பே!


41. யானை சேனை தேர்பரி யாவும் அணியாய்

யமன்வரும் போது துணையாமோ அறிவாய்:

ஞானஞ்சற்றும் இல்லாத நாய்கட் குப்புத்தி

நாடிவரும்படி நீ நின்று ஆடுபாம்பே!


42. மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்

மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்

ஆணிப்பொன் முத்தாரம் அப்பொன் அந்தக் கடகம்

அழிவான பொருளெனநின்று ஆடுபாம்பே!


43. மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்

மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை

கூடவாரா வென்று அந்தக் கொள்கை அறிந்தோர்

குலவாமல் வெறுப்பாரென்று ஆடுபாம்பே!


44. மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்

மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ?

அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்

அழியார்என் றேநீ துணிந்து ஆடுபாம்பே!


45. பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்

பாழ்ச்சுடு காடதிலே பயனைப் பெறுமோ?

மஞ்சள்மணம் போய்ச் சுடுநாறு மணங்கள்

வருமென்று தெளிந்துநின்று ஆடுபாம்பே!


46. முக்கனியுஞ் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே!


47. வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்

வண்கவிதை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்

திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்

சேரவர மாட்டாயென்று ஆடுபாம்பே!


48. மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்

மாளும்போது கூடஅவர் மாள்வ தில்லையே!

தக்கவுல கனைத்தையும் தந்த கர்த்தனைத்

தாவி த்தாவித் துதித்துநின்று ஆடுபாம்பே!


49. கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்

காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்:

மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்:

மெய்யன்பதம் நாடுவாரென்று ஆடுபாம்பே!


பெண்ணாசை விலக்கம்


50. வெயில்கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்

ஒயில்கண்டே இலவுகாத்து ஓடும் கிளிபோல்

உடல்போனால் ஓடுவாரென்று ஆடுபாம்பே!


51. செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்

சித்தப்பால் விழுங்கிய சீயென்று ஒறுத்தோம்:

குண்டுகட்டெ ருமையேறுங் கூற்றுப் பருந்தைக்

கொன்றுதின்று விட்டோம் நாம் என்று ஆடு பாம்பே!


52. வட்டமுலையென்றுமிக வற்றுந் தோலை

மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்

கெட்ட நாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தார்

கெடுவர் என் றேநீர் துணிந்து ஆடுபாம்பே!


53. மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக

வருணித்துச் சொல்வார்மதி வன்மை இல்லாதார்:

குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்

கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே!


54. சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச்

செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்

நெக்குநெக்கு உருகிப்பெண்ணை நெஞ்சில் நினைப்பார்

நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே!


55. நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்

நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழ்என்றும்

கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்கள்:

கோன் நிலையை அறியார் என்று ஆடுபாம்பே!


56. மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம்என்றும்

மானேயென்றும் தேனேயென்றும் வான் அமுதென்றும்

ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்

ஓதாமற் கடிந்துவிட்டு ஆடுபாம்பே!


57.மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக்கம் என்றும்

மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகையென்றும்

கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண்டு என்றும்

கழறாமல் கடிந்தோம்என்று ஆடுபாம்பே!


58. பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்

பூந்திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்

கோவையென்றுங் கோதையென்றுங் கோகிலம் என்றும்

கூறாமல்து றந்தோம்நாம் என்று ஆடுபாம்பே!


59. மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்

மல்கும்புழுக் கூட்டின் மேல் வண்ணத் தோல் என்றும்

சலக்குழிக் குள்ளே நாற்றஞ் சார்ந்த சேறென்றும்

தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடு பாம்பே!


சரீரத்தின் குணம்


60. ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப்பு னலினிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே!


61. இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை

அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!


62. பரியாசம் போலவே கடித்த பாம்பு

பலபேர் அறியவே மெத்த வீங்கிப்

பரியாரம் ஒருமாது பார்த்த போது

பையோடே கழன்றதென்று ஆடுபாம்பே!


63. சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமும்

சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடம் அது உடைந்தால்

நாயும்நரி யும்பெரிய பேயுங் கழுகும்

நமதென்றே தின் றிடும்என்று ஆடுபாம்பே!


64. நீரில்எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல

நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே

பாரிற்பல உயிர்களைப் படைத்த வன்தனைப்

பற்றவேநீ பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே!


65. நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளுங் கழுவினும் அதன் நாற்றம் போமோ?

கூறும் உடல் பலநதி யாடிக் கொண்டதால்

கொண்டமலம் நீங்காதென்று ஆடுபாம்பே!


66. காய்த்த மரம் அதுமிக்க கல்லடி படும்:

கன்ம வினை கொண்ட காயம் கண்டனை பெறும்:

வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே

வத்துத் திருவடி தொழுது ஆடுபாம்பே!


67. பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி

பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே!

ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி

எரிமண்ணிற்கு இரையாம் என்று ஆடுபாம்பே!


68. மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து

வளமான சீவன் என்னுஞ் சூத்திரம் மாட்டித்

திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே

தேகம்விழும் என்று தெளிந்து ஆடுபாம்பே!


69. தசநாடி தசவாயு சத்த தாது

சார்ந்தமரக் கப்பல் அது தத்தி விழுமே

இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்

எந்நாளும் ஒட்டத் துணிந்து ஆடுபாம்பே!


அகப்பற்று நீக்கல்


70. தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத

தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்

தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்

தொழுது தொழுது தொழுது ஆடும்பாம்பே!


71. கள்ளங்கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்

கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து

தெள்ளிதான வெட்டவெளி சிற்சொரூபத்தைத்

தேர்ந்து பார்த்துச் சிந்தை தெளிந்து ஆடுபாம்பே!


72. சொல்லும்புளி யம்பழத்தின் தோடு போலவே

சுற்றத்திருந்தாலும் அவர் தொநதங்கள் அற்று

நில்லுமனமே நீபர நின்மலத்திலே

நின்றுணைதான் வெறும் பாழென்று ஆடுபாம்பே!


73. சேற்றில்திரி பிள்ளைபூச்சி சேற்றை நீக்கல்போல்

தேசத்தோடு ஒத்துவாழ்வார் செய்கை கண்டபின்

சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே

தானடக்க வேணுமென்று ஆடுபாம்பே!


74. எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தம் இல்லாவாறுபோல்

எப்போதும் இப்புவியில் எய்த வேண்டும்:

கண்ணுக்குக் கண்ணானவொளி கண்டு கொள்ளவே

கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடுபாம்பே!


75. கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்

கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே

சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்

சீர்பாதங் காணத்தெளிந்து ஆடுபாம்பே!


76. கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள்யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டோங்காண்:

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளைச்

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே!


77. நித்தியமென்னு மலையில்நின்று கொண்டோம்யாம்:

நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்:

சத்தியமாய் எங்கள் கடந்தான் அழியாதே

சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே!


78. மனமென்னும் குதிரையை வாகன மாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயினில் பூட்டிச்

சினமென்னும் சீனியின் மேற்சீராய் ஏறித்

தெளிவிடம் சாரிவிட்டு ஆடு பாம்பே!


79. ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே

ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே

காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்

காலாகாலங் கடந்தோம் என்று ஆடு பாம்பே!


80. காலன் எனுங் கொடிதான கடும்ப கையைநாம்

கற்பமெனும் வாளினாலே கடிந்துவிட்டோம்:

தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்

தற்பரங் கண்டோம் என்று ஆடு பாம்பே!


81. தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து

திகையாமல் சிற்சொரூப தெரிச னைக்கண்டு

வானிற் பறந்திடச்சூத வான்ம னிதீர்ந்து

வாயிற் போட்டேக நீ நின்று ஆடு பாம்பே!


82. தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியுங் கண்டேன்:

சுத்த வெளிக்குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்:

தாக்கிய சிரசின் மேல் தைத்த பாதம்

சற்குருவின் பாதம் என்று ஆடு பாம்பே!


83. ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே!

அரசடிப் பொந்தினிலே புகுந்து கொண்டாய்:

வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து

வாங்கியே தூங்கிநின்று ஆடு பாம்பே!


84. நாலு தெருவினிலே நாலு கம்பம்

நடுத்தெருவினிலேயோர் பொன்னுக் கம்பம்

போலும் விளங்குபொன்னுக் கம்பத்தினுக்கே

பூமாலை சூடியேநின்று ஆடு பாம்பே!


85. ஆழிபெயர்ந்தாலும் மேரு மட்டே அலையும்

அடியோடு பெயர்ந்தாலும் அன்றிக் கால

ஊழிபெயர்ந்தாலும் மதி உண்மைப் படிக்கே

உறுதி பெயராது நின்று ஆடு பாம்பே!


86. வாயுவினை இரையாக வாங்கி உண்டே

வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே

தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்

திகைப்புறச் சேர்ந்துநின்று ஆடு பாம்பே!


87. மாசில்கதி வளையிலே மண்டலம் இட்டே

மதியான பெரும்பட மடலை விரித்தே

ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை

அடுத்தடுத்தே துதித்து ஆடு பாம்பே!


88. காடுமலை நதிபதி காசி முதலாய்க்

கால்கடுக்க  ஓடிற்பலன் காண லாகுமோ?

வீடுபெறும் வழிநிலை மேவிக் கொள்ளவே

வேதாந்தத் துறையில் நின்று ஆடு பாம்பே!


89. எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி

எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே

கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்

கண்டு தொழுதே களித்து ஆடு பாம்பே!


90. சூரியனைக் கண்டபனி தூர ஓடல் போல்

சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்

ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்

அகலாமல் பற்றித் தொடர்ந்து ஆடு பாம்பே!


91. காந்தம்வலி இரும்பு போல் காசில் மனத்தைக்

காட்சியான வத்துவுடன் கலக்கச் சேர்த்துச்

சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்

சலியாமல் தொடர்ந்து நின்று ஆடு பாம்பே!


92. உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?

உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி?

புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ? அஞ்ஞானம்

போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே!


93. திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி

சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்

அருளான மூலகுரு ஐயர் செயலால்

ஆனந்தங் கண்டோம் என்று ஆடுபாம்பே!


94. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரிந்துங் கதி எய்தல் இலையே!

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன்பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே!


95. தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்:

தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்:

பின்னை யொரு கடவுளைப் பேண நினையார்

பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே!


96. பாலிற்சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியைப்

பற்றுப்பொன் பற்றவைத்த பான்மைபோலே

காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு

களித்துக் களித்துநின்று ஆடுபாம்பே!


97. தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்

தேகபந்தம் கொண்டனம் இத் தேச வாழ்வினை

ஒக்காளமென்று எண்ணிமிகு ஓகையுடன் நீ

உள்ளம் தெளிந்துநின்று ஆடு பாம்பே!


98. சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம்வித மானவான வேறு நூல்களும்

வீணாண நூல்களே என்று ஆடு பாம்பே!


99. சமயபேதம் பலவான சாதி பேதங்கள்

சகத்தோர்க்கே அல்லாதுசற் சாதுக் களுக்கோ?

சிமயத்தி லேறினபேர் சித்தம் மாறுமோ?

சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே?


100. பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ?

பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?

ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை

அடையலாம் என்று துணிந்து ஆடு பாம்பே!


101. மூலவேர் அறிந்து கொண்டால் மூன்று உலகமும்

முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம்:

சாலவேர் அறிந்ததாலே தான்பயன் உண்டோ?

சகத்தைப்பொய் யென்று தெளிந்து ஆடு பாம்பே!


102. சகத்தனாதி யென்றிடாது தான் அனாதியார்:

சமைந்ததென் றுஉரைப்பார்கள் சத்தை அறியார்:

மகத்துவ நிலைகற்பவன்மை யல்லாது

மற்றும்வன்மை இல்லையேஎன்று ஆடு பாம்பே!


103. ஆயிரத்தெட் டிதழ்வீட்டில் அமர்ந்த சித்தன்

அண்டம்எல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கிவளர் காரணச் சித்தன்

கண்ணுள்ஒளி யாயினான் என்று ஆடு பாம்பே!


104. நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக

நாடும் அக்க ரச்சொரூப நாய கன் தனை

மேற்படுத்திக் கொண்டால் அந்த மேலு லகெலாம்

மெல்லடிக்குத் தொண்டேயாம் என்று ஆடு பாம்பே!


105. கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே:

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே!

கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்:

கூத்தாடிக்கூத் தாடியே நீ ஆடு பாம்பே!


106. ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்

அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு?

வேறுபட்டால் அவன் தனை மீட்டல் அரிதே:

மேவிமுன் னேவிடாது கொண்டு ஆடு பாம்பே!


107. எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும்என்

ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணாவிடிலே?

பண்ணரிய தவப்பயன்பத்தி இல்லையேல்

பாழ்படும் என்று துணிந்து ஆடு பாம்பே!


108. எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயன்என்

எங்கள் ஆதி பாதாம்புயம் எண்ணாக் காலையில்?

இவ்வுலக வாழ்வுதானும் இன்றே அறுமென்று

எண்ணிக் கர்த்தன் அடிநினைந்து ஆடு பாம்பே!


109. மணக்கோலங் கொண்டுமிக மனம கிழிந்துமே

மக்கள் மனை கற்றத்தோடு மயங்கி நின்றாய்:

பிணக்கோலம் கண்டுபின்னுந் துறவா விட்டில்

பிறப்புக்கே துணையாம்என்று ஆடு பாம்பே!


110. பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்

பெருமருந்து ஒன்றுசொல்வேன் பெட்புடன் கேளாய்:

திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்

திறந்திடும் வகையறிந்து ஆடு பாம்பே!


111. இறந்தவர் ஐவர் அவர் இட்டமானவர்

எய்தும் அவர் இறந்தார் என்று எல்ல வர்க்குஞ்சொல்

மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்

வகையறிந் திடவேநின்று ஆடு பாம்பே!


112. ஆகார முதலிலே பாம்ப தாக

ஆனந்த வயலிலே படம் விரித்தே

ஊகார முதலிலே யொத்து ஒடுங்கி

ஓடி வகாரத்தின் நாவைநீட்டிச்


சீகாரங் கிடந்ததோர் மந்திரத்தைச்

சித்தப் பிடாரனார் போதஞ் செய்ய

மாகாரப் பிறப்பையும் வேர் அறுத்து

மாயபந்தம் கடந்தோம் என்று ஆடு பாம்பே!


113. தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்:

தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்:

மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்:


அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி

அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

இந்த மருந்தினைத் தின்பீராகில்

இனிப் பிறப்பு இல்லையென்று ஆடு பாம்பே!


114. களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே

கனமான பாய்மரங் காண நாட்டி

அளி புலந் தன்னையே சுக்கானாக்கி

அறிவென்னும் ஆதாரச் சீனி தூக்கி


வெளியென்னும் வட்டத்தே யுள்ளடக்கி

வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்

தெளிவுறு ஞானியார் ஒட்டுங் கப்பல்

சீர் பாதஞ் சேர்ந்தது என்று ஆடு பாம்பே!


115. உள்ளத்துக் குள்ளேயே உணர வேண்டும்:

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்:

மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும்

வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்:


கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்

கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று

தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்

சீர்பாதம் கண்டோம் என்று ஆடு பாம்பே!


116. ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்:

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே


சாங்காலம் இல்லாமல் தாணு வோடே

சட்ட திட்டமாய்ச் சேர்ந்து சாந்தமாகத்

தூங்காமல் தூங்கியே சுகம் அடைந்து

தொந்தோம் தொந்தோம் என்று ஆடு பாம்பே!


117. விரகக் குடத்திலே பாம்படைப்போம்:

வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்:

கரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்:

காலக் கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்:


துரகந் தனிலேறித் தொல் உலகெங்கும்

சுற்றி வலம் வந்த நித்ய சூட்சங் காண்டும்;

உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்போம்:

ஒரு நான்கும் பெற்றோம் எனது ஆடு பாம்பே!


118. காயக் குடத்திலே நின்ற பாம்பைக்

கருணைக் கடலிலே தியங்க விட்டு

நேயச் கழுமுனை நீடு பாய்ச்சி

நித்யமான வத்துவை நிலைக்க நாடி


மாயப் பெருவெளி தன்னில் ஏறி

மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி

ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்

ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


119. மூலத் தலத்திலே நின்ற கருத்தை

முற்றுஞ் சுழுமுனை தன்னில் ஊடே

மேலத் தலத்திலே விந்து வட்டம்

வேலை வழியிலே மேவி வாழும்


பாலத் திருத்தாய்க் கருணை யதனால்

பரகதி ஞான சொரூபமாகி

ஆலச் சயனத்து மாலுடன் நின்றே

ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


120. புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும்

புரவி யெனும் மனத்தை ஒருமைப் படுத்தி

மலபந்த வுலகங் கடந்ததாலே

மன்னுகுரு பாதத்தின் நிலையை நாடித்


தலம் ஐந்து பூலோகங் கடந்ததாலே

சந்திர மண்டிலமுங் கடந்த தாகும்:

அலமந்து பூலோகக் கடலை நீக்கி

ஆனந்த மாகிநின்று ஆடு பாம்பே!


121. குருவென்னும் ஆசானின் உருவெடுத்துக்

குறியான ஞானந்துப் பாக்கி யாக்கி

அருளென்னும் அருளையே உண்டையாக்கி

ஆனந்த மாகவே அதைக் கடந்தே


மருளென்னும் மாதர்மன நெறியைத்தொட்டு

வாங்காமல் எரிந்திட நெட்டை யிட்டுப்

பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே

பற்றானைப் பற்றிநின்று ஆடு பாம்பே!


122. கன்னான் குகையிலே கான்மறிப்போம்:

கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்:

சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம்:

சுருதி யருங்கலவி ஒப்பஞ் செய்வோம்:

மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம்:

மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம்:

பன்னாதே பன்னாதே சும்மா விருந்து

பராபரஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


123. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்:

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்:

வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்:

வேண்டாத மனையினில் உறவு செய்வோம்:


சோதித் துலாவியே தூங்கி விடுவோம்

சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்:

ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்

அறியார்கள் இதையென்று ஆடு பாம்பே!


124. நெட்டெழுத்து அதனிலே நிலைபி டித்து

நீங்கர் எழுத்திலே வாலை முறுக்கி

விட்டுஅவ் எழுத்திலே படம்விரித்து

விண்ணின் வழியிலே மேவி யாடிப்


பட்ட எழுத்தையும் பதிந்தி ருப்போம்

பன்னிரண் டாமெழுத்தில் பன்னிக் கூடித்

திட்டமுடன் எமக்கருள் தேசிக னார் தம்

சீர்பாதஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே!


125. ஊசித்துளைக் குடத்தினில் பாம்பை அடைப்போம்:

உலகெலாம் சுற்றியே உலாவி வருவோம்:

மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்:

மனமொத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்:


மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்:

மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்:

பேசும் எழுத்தையும் விழுங்கி விடுவோம்:

பிறப்பு இறப்பு அற்றோம்என்று ஆடு பாம்பே!


126. ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்:

அக்கினிக் கோட்டைமேல் ஏறிப் பார்ப்போம்:

மாணிக்கத் தூணின்மேல் விட்டே ஆட்டுவோம்:

மனம்வாக்குக் காயத்தை இரைகொடுப்போம்:


நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்:

நமனற்ற நாதன் பதம் நாடியே நிற்போம்:

ஏணிப் படிவழிகண்டு ஏறி விடுவோம்:

யாரும்இதை அறியார்என்று ஆடு பாம்பே!


127. வடக்குங் கிழக்குமாக நூலை இழைப்போம்:

மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்:

நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம்:

நடவா வழியினிலே புடையை நெய்வோம்:

குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்:

கொய்ததை எங்குமே விற்று விடுவோம்:

அடக்கியே ஏகத்துள்ளே வைக்கவும் வல்லோம்:

ஆதிபதங் கண்டோம் என்று ஆடு பாம்பே!


128. சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்:

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்:

பாத்திரங் கொண்டுமே பலிஇ ரப்போம்:

பத்தெட்டு மூன்று படிக டந்தோம்:

ஊத்தைச் சடத்தினைப் புடமே இடுவோம்:

உளவன் எமக்குநல் உறுதி சொல்லப்

பார்த்துரை இதன்மெய் பலிக்க எண்ணிப்

பதனம் பதனம்என்று ஆடு பாம்பே!


129. மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்:

மணிவட்ட வாசியை வாரி உண்போம்:

வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்:

வக்கிர சொப்பனந் தாண்டி விடுவோம்:

பவ்வ வெளியிலே விட்டே ஆட்டுவோம்:

பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்:

சிவ்வுரு வாகியே நின்றோம் என்றே

சீர்பாதம் கண்டுதெளிந்து ஆடு பாம்பே!

No comments:

Post a Comment